ADHD (Attention Deficit Hyperactivity Disorder) உள்ள மாணவர்கள் பிரச்சினைக்குரிய மாணவர்களாகத்தான் இன்னும் கருதப்படுகிறார்கள். வளர்ச்சியில் குறைபாடு இல்லாத அவர்கள் வளர்ச்சிக் குறைபாட்டு குழந்தைகளாகவே பாவிக்கப்படுகிறார்கள். மூளைச் செயல்பாடு வேறுவிதமாக இருந்தாலும் புத்திக்கூர்மை சாமானியக் குழந்தைகள் போல்தான் இவர்களுக்கும் இருப்பதாக பல ஆய்வுகள் கூறியுள்ளன.

http://4.bp.blogspot.com/-sc50_HSFuVk/VGme0ws-H_I/AAAAAAAAADE/wNjX9qN01Ps/s1600/DSC_0066.JPG
Picture Credit- http://goo.gl/mv3s8z

ADHD மாணவர்களிடம் ஆசிரியர்கள் பிரத்யேகக் கவனம் எடுத்து, அவர்தம் திறன் கண்டறிந்து, கற்றலில் அவர்களுக்கு இருக்கும் தடைகளை களைய உதவ வேண்டுமேயொழிய, வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள் என முத்திரை குத்தக் கூடாது.

எழுதுதல் என்பது மாணவர் பருவத்தின் முக்கியப் பகுதி. கட்டுரை எழுதுதல், கேள்வி-பதில் எழுதுதல் எனப் பல கடமைகள் இப்பருவத்தில் இருக்கும். ADHD  மாணவர்களை எழுதப் பழக்கும்போது வழக்கமான வழிகள் உதவாது. எழுத்துப் பயிற்சியின் ஒவ்வொரு கட்டமும் இந்த மாணவர்களுக்கு சிரமங்களை அளிக்குமென்பதால் பிரத்யேக வழிகள் கையாளப்பட வேண்டும். எழுதுகையில் இவ்வகை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவற்றை தீர்க்க பெற்றோர் மற்றும் ஆசிரியர் கையாளக்கூடிய உத்திகள் சிலவற்றையும் பின்வரும் பத்திகளில் பார்க்கலாம்.

பயிற்சியில் கவனம் செலுத்துவதில் சிரமம்

ADHD  மாணவர்களின் புத்திக்கூர்மைக்கு குறையிருப்பதில்லை எனப் பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதிலும் தொடர்ந்து ஊக்கம் கொண்டிருப்பதிலும் மனதை ஒருங்கிணைப்பதிலும்தான் சற்று சிரமம் இருக்கும். எழுத்துப் பயிற்சியில் மாணவனின் கவனத்தை நீடிக்க வைப்பதுதான் ஆசிரியரின் முதல் வேலை.

தீர்வு: தெளிவான, சுருக்கமான வழிமுறைகளை கொடுங்கள்

கட்டுரையையோ அல்லது வேறொரு எழுத்து வேலையையோ கொடுக்கும்போது என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். அதிக விளக்கம் கொடுக்காதீர்கள். “சந்தோஷமான அனுபவத்தை எழுது” எனக் கேள்வி கொடுப்பதற்கு பதிலாக, அதையே பல கேள்விகளாகக் கொடுங்கள்.

  • சந்தோஷமாக இருந்த சமீபத்திய தருணத்தை நினைத்துக்கொள்.
  • சந்தோஷமாக இருந்ததற்கான காரணங்களைக் விவரி.
  • எந்த விஷயம் உன்னை சந்தோஷப்படுத்தியது?
  • அந்த உணர்வுகளை எவற்றுடன் ஒப்பிடுவாய்?

ஒவ்வொரு மாணவனுடனும் அமர்ந்து கேள்விகளை ஆராய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். பின், அவற்றை இன்னும் பல கேள்விகளாக, ஆனால் சுருக்கமாக அமையுங்கள்.

எண்ணங்களை ஒருங்கிணைப்பதில் சிரமம்

ADHD  மாணவர்களின் அடுத்த சிரமம், நடந்து முடிந்தவற்றை மீண்டும் மனதுக்கு கொண்டு வந்து அவற்றை ஒருங்கிணைத்தல். இந்த வகை மாணவர்கள் தம் எண்ணங்களை வாய்மொழியில் சரளமாக வெளிப்படுத்துவார்கள். அவற்றையே எழுதச் சொல்லும்போது சிரமப்படுவார்கள்.

தீர்வு: எண்ணங்களை அவற்றின் ஆரம்பத்திலிருந்து குறிப்புகளாக எழுதி, ஒருங்கிணைக்கக் கற்றுக்கொடுங்கள்.

ஒவ்வொரு பயிற்சியையும் குறிப்புகளுடன் ஆரம்பியுங்கள். மாணவர்களை குறிப்பெடுக்கவும் பின் அவற்றை அவர்களே ஆய்வு செய்துகொள்ளவும் அனுமதியுங்கள். இந்த குறிப்புகளை ஃபைல்கள் போன்றவற்றில் சேர்த்து வைக்கும் பழக்கத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

எழுதிய நினைவுக்குறிப்புகளை படித்து மனதில் ஒருங்கிணைக்க பயிற்றுவியுங்கள். உதாரணமாக ஒரு கட்டுரையை அதன் முக்கிய பெயர்ச்சொற்களாகவும், வினைச்சொற்களாகவும் வாக்கியங்களாகவும் மனதில் பொருத்தி, ஞாபகம் வைத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுக்கலாம்.

ஒரே வேலையை தொடர்ந்து செய்வதிலுள்ள சிரமம்

ADHD  மாணவர்கள் அதிக நேர வேலைகளில் கவனத்தைத் தொடர சிரமப்படுவார்கள். கவனக்குறைவு அதிகம் நேரும்.

தீர்வு: நீண்ட நேர வேலைகளை பல சிறு வேலைகளாக மாற்றலாம்.

ஐந்து பக்க கட்டுரை அதிக காலம் பிடிக்கும். அதையே ஐந்து ஒரு பக்கங்களாக அல்லது பத்து அரைப்பக்கங்களாக குறைந்த கால இடைவெளிகளில் எழுதப் பணிக்கலாம். நேரம் இருக்கும்பட்சத்தில் ஒவ்வொரு பகுதியையும் அவர்களே சரிபார்க்க செய்யலாம். ஒவ்வொரு பகுதியையும் இப்படி தனித்தனிப் பகுதிகளாக கருத வைப்பதன்மூலம் பெரிய வேலையை செய்கிறோம் என்கிற அலுப்பு அவர்களுக்கு இல்லாமல் போகிறது.

காலக்கெடுவுக்குள் வேலையை முடிப்பதில் சிரமம்

மற்ற மாணவர்கள் போலல்லாத ADHD  மாணவர்களுக்கு காலக்கெடு என்பது சோர்வைத் தருகிற விஷயம். கவனச்சிதறல் இருக்கும். ஆதலால் எழுத்துவேலைகளை தள்ளிப் போடத்தான் விரும்புவார்கள்.

தீர்வு: தள்ளிப்போட அனுமதியுங்கள்

எழுத்து வேலையை தள்ளிப் போடச் சொல்வது விசித்திரமாக தெரியலாம். ஆனால் செய்யுங்கள். எழுதுவதை பல பகுதிகளாக பிரித்துக்கொண்டு, ஆராய்வதற்கும் யோசிப்பதற்கும் அவகாசம் கொடுத்து, எழுதுவதை தள்ளிப்போட அனுமதியுங்கள். இதன்மூலம் மாணவர்கவனத்தை அவ்வப்போது மாற்றி சோர்வை தவிர்க்கலாம். அதே நேரத்தில் இறுதி இலக்கிலிருந்து விலகாமல் இருக்கவும் செய்யலாம்.

எழுத்துப்பிழைகள்

ADHD மாணவர்களின் எழுத்தில் அதிகம் பிழைகள் இருக்கும். தலைகீழாக திருப்பி எழுதுவார்கள். சில எழுத்துக்களை தவிர்த்து எழுதுவார்கள். ஒரே வார்த்தையை வேறு எழுத்துக்கள் கொண்டு ஒரே கட்டுரைக்குள் எழுதுவார்கள். எழுத்துப் பிழைகளை சரி செய்வது சுலபமல்ல. அதிக கவனம் தேவைப்படும்.

தீர்வு: எழுத்துக்களை சரி பார்க்கவும் அகராதிகள் பயன்படுத்தவும் அனுமதியுங்கள்

எழுத்தையும் இலக்கணத்தையும் சரி பார்க்க பல செயலிகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை மாணவர்கள் எழுதும்போது பயன்படுத்த அனுமதிக்கலாம். எழுதியவற்றை திருத்தும்போது, தப்பாக எழுதப்பட்ட வார்த்தைகளை கோடிட்டு காட்டுங்கள். தவறுகளையும் சரியான எழுத்துக்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மாணவர்களுக்கு இது உதவும்.

ADHD  மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கவனிப்பதால் தங்கள் நிலையை அவர்களே சரிசெய்து கொள்ளவும், தேவைப்பட்டால் அந்நிலையை அனுகூலமாக பயன்படுத்தும் வழிகளை கண்டறியவும் உதவலாம். அவர்களின் தனித்தன்மையான பார்வையை சரியாக ஒழுங்கமைத்தால் எழுத்தை படைப்பாக்கும் வித்தையையும் அவர்கள் கைக்கொள்ளலாம். பிரச்சினைகளுக்கு புதுத்தீர்வுகள் கண்டடையலாம். முக்கியமாக, அவர்களின் முழு ஆற்றலை பயன்படுத்தும் வாய்ப்புகளை அடைந்து பல உயரங்களை அடைய வழிகோலலாம்.

மூலம்- http://goo.gl/8Y4ugi

தமிழில்- ராஜசங்கீதன்