wilderness library

பழங்குடியினரின் படிக்கும் பண்பை காக்கும் கேரளாவின் வனநூலகம்-

எடமளக்குடி, கேரளாவில் இடுக்கி வட்டாரத்திலுள்ள ஒரு கிராம பஞ்சாயத்தாகும். 2010இல் உருவாக்கப்பட்ட இது முத்தவன்ஸ்(Muthavans) பழங்குடியினரை கொண்டது. இன்றும் அங்கு மின்சாரம் ஒரு ஆடம்பரமாகவே கருதப்படுகிறது. பின்தங்கிய இந்த பழங்குடியின மக்களில் பெரும்பாலானோர் கல்வியறிவுயில்லாதவர். மிக அருகாமையிலுள்ள அரசு பழங்குடி ஆரம்பப் பள்ளி பதினைந்து கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. இந்த தனிமையான சூழலில் தான் எழுபத்து மூன்று வயதான பி.வி. சின்னதம்பியின் ஊக்கத்தினாலும், முயற்சியாலும்  ஒரு நூலகம் இயங்குகிறது.

சின்னதம்பியின் மண் சுவர் அமைப்பு முதலில் எளிமையான டீக்கடை போல தெரிந்தாலும், கையால் எழுதப்பட்ட பலகை காண்பவரை திகைக்க வைக்கிறது. அதில் உள்ள வாக்கியம்:

“அக்ஷரா(Akshara) கலை மற்றும் விளையாட்டு நூலகம், இருப்புகள்ளக்குடி, எடமளக்குடி”

தேயிலை, மிக்ஸ்ர் , பிஸ்கட், தீப்பெட்டி  மற்றும் மற்ற பலசரக்குகளை  விற்பனை செய்யும் இக்கடையின் கதை டிஜிட்டலாக காரணம், பத்திரிகையாளர் சாய்நாத் அவர்களின் விவரிப்புதான். கடையில் உள்ள பொருட்களை ஆராயந்தப் பின், சின்னதம்பியிடம் நூலகம் எங்கே என்று கேட்டார் சாய்நாத். சின்னதம்பி புன்முறுவலுடன் தனித்தனியே 25 கிலோ அரிசி தாங்க கூடிய இரண்டு பெரிய கோணி பைகளை கொண்டு வந்தார். அதனுள் அவரின் மொத்த சேகரிப்பான 160 புத்தங்கங்கள் இருந்தன. அவரோடைய மொத்த தொகுப்பையும் வந்தவர்கள் முன் அழகாக பரப்பினார். கண்டவர்கள் பிரமிப்பு அடைந்தனர்.

பிரபலமிக்க மலையாள எழுத்தாளர்கள் வைகொம் முஹம்மது பஷீர்(Vaikom Muhammed Basheer), எம்டி.வாசுதேவன் நாயர், கமலாதாஸ், எம்.முகுந்தன், லலிதாம்பிகா அந்தர்ஜனம்(Lalithambika Antharjanam) ஆகியோரின் புத்தகங்களும் அத்துடன் மகாத்மா காந்தி மற்றும் பொதுவுடைமை கொள்கையர் தோப்பில் பஸி(Thoppil Bashi) ஆகியோரின் நூல்களும் உள்ளன. புத்தகங்கள் உண்மையில் படிக்கபடுகின்றனவா என்ற கேள்வி எழுந்த பொழுது, சின்னதம்பி, புத்தகம் கடன் வழங்கியதையும்  மற்றும் திருப்பி கொடுத்ததையும் குறித்த பதிவேட்டை எடுத்து காண்பித்தார். டீக்கடை அமைந்துள்ள இக்குக்கிராமத்தில்(முத்தவன் கலாச்சாரத்தில் குடி), இருபத்தைந்து குடும்பங்கள் உள்ளது. ஆனால், 2013 ல் முப்பத்தைந்து புத்தகங்கள் வழங்கப்பட்டன! நூலகத்தில் சேர ஒரு முறை கட்டணமாக இருபத்தைந்து ரூபாயும் வருடத்திற்கு இரண்டு ரூபாயும் கட்டணமாக உள்ளது. புத்தகம் கடன் வாங்க தனியாக எதுவும் கட்டணம் இல்லை. கருப்பு தேநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. பிஸ்கட், மிக்ஸ்ர் மற்றும் இதர பொருட்களுக்குதான் பணம் செலுத்த வேண்டும்.

சாய்நாத், கோடிட்ட தாள்களில் கையால் எழுதப்பட்ட ஒரு நூலை கண்டார். அது சின்னதம்பியின் சுயசரிதையாகும். இந்நூல் அவர் ஒன்பது வயதாக இருந்த பொழுது நடந்த மகாத்மா காந்தியின் படுகொலையிலிருந்து ஆரம்பிக்கிறது, சமூக மற்றும் அரசியலில் அவரது முதல் எழுச்சியையும், எடுமளகுடிக்கு அவர் திரும்பி வர அது தூண்டியதையும் பற்றி கூறுகிறது. முரளி ‘மாஷ்'(Murli Mash) என்பவர் அப்பகுதியில் பெருமை வாய்ந்த ஒரு ஆசிரியர்.  அவர் வேறு பழங்குடியை சேர்ந்த ஆதிவாசியாவார். அவர்தான் சின்னதம்பி எடமளகுடிக்கு திரும்பவும் அங்கு நூலகம் அமைக்கவும் காரணமாயிருந்தவர்.

சிறிய அளவிலான பணிகளுக்கும் சாதனைகளுக்கும் அரசியல்வாதிகள் பெருமை கொள்ளும் இக்காலத்தில், சின்னதம்பி தான் செய்தது ஒன்றும் பெரிதில்லை என கருதிகிறார். இலக்கியத்தில் ஆர்வம் கொள்ள செய்யும் இந்நூலகம், வறிய சமூகத்தின் ஒரு பகுதிக்கு சேவை செய்வது பாராட்டுக்குரியது. அதற்கு காரணமாய் இருப்பவர் சின்னதம்பி, அதில் அவரின் முக்கியத்துவத்தை சிறிதாக எண்ணுவதில், அவரின் மேன்மையை அறியலாம் .

மூலம்- http://homegrown.co.in/keralas-wilderness-library-is-keeping-the-reading-bug-alive-among-the-tribals/

Picture Credit- http://psainath.org/the-wilderness-library/

ஆசிரியர்- தேவங் பதக் 

தமிழில்- கோவிந்தராஜன் தேவராஜன்