mind space_docpage

உதவி கேட்பதற்கு தைரியம் தேவை. உங்களின் எளிதாக உணர்ச்சிவசப்படும் தன்மையை, அடுத்தவரை சார்ந்திருக்கும் தன்மையை ஒப்புக்கொள்வதற்கு தைரியம் தேவை. தமது தன்னிறைவைக் கேள்வி கேட்பதற்கு தைரியம் தேவை. நமக்கு சொல்லப்பட்ட பாணியிலிருந்து சற்று விலகுவதும் நம்மை பயமுறுத்துகிறது. அடுத்தவரால் பழிக்கப்படுவோம் என பயப்படுகிறோம்.

சோர்வு, மன அழுத்தம், ஏக்கம், மந்தம், நிறைவின்மை, காயம், கோபம், வருத்தம் போன்ற எதிர்மறை எண்ணங்களுடன் நாம் இருந்தால், நம் வாழ்க்கை பாதிக்கும்; நம் மீது, நம் வாழ்க்கை மீது, உறவுகள் மீது, வேலைச்சூழல் மீது என அனைத்தின் மீதும் நாம் அதிருப்தி கொள்வோம். உணர்வுகளை பற்றிப் பேசுவதற்கு, குறிப்பாக, அந்த உணர்வுகளால் அடுத்தவர்கள் பாதிக்கப்பட்டாலும் அவற்றை நாம் உணர்வதற்கான வெளி இந்த சமூகத்தில் இல்லை. நம் மனநிலை அறைக்குள் இருக்கும் யானை போன்றது. யாரும் அதனுடன் பேசுவதை விரும்புவதில்லை. யாரும் உதவாததால் நாம் அநாதரவாக உணர்கிறோம். இந்த எதிர்மறை எண்ணங்களுடன் நாம் மட்டுமே உழன்று தீர்வு காண வேண்டும் என நமக்கு நாமே சாக்கு சொல்லிக்கொள்கிறோம். உதவி கேட்க மறுக்கிறோம்.

உடலுக்கும் மனதுக்குமான தொடர்பு

மன ஆரோக்கியம் என்பது மனச்சிதைவு, சோர்வு போன்ற மனநோய்கள் இல்லாமலிருப்பது மட்டுமல்ல. நாம் அறிந்திராத உடல்-மனத் தொடர்பு என்பது சரியான நிலையில் அமைந்திருக்கவும் வேண்டும்.

‘ஒரு கல்லூரி மாணவி என் சிகிச்சையின் மூலம் உத்வேகம் பெற்று தன் உடல்பருமனை குறைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வந்திருந்தார். சில அமர்வுகளுக்குப் பின், அவரது உடல் பருமனுக்கான காரணம் உடலில்லை மனதில்தான் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். அவளது நெருங்கிய உறவுகள், அனுபவங்கள், வேலை, படிப்பில் தேர்ச்சியின்மை போன்றவை அவளை உணர்வுரீதியாகவே அதிகமாக உண்ண வைத்திருந்தது.

இதை அவள் உணர்ந்த தருணம்தான், இந்த சிகிச்சையின் “ஆகா” தருணம். ஆறு அமர்வுகளுக்குப்பின், அவள் ‘நம்பிக்கை’ என்ற பெயரில் ஒரு படம் வரைந்திருந்தாள். ஒரு மரம் பல வளைவுகளுடன் (கஷ்டங்கள்) மலர்ச்சியுடனும் ஊதா மலர்களுடனும் (கஷ்டங்களால் பாதிக்கப்படாமல் இன்னும் அழகாக நிற்பதாக) இருப்பதாக வரைந்திருந்தாள். நாங்கள் அநாதரவு என்னும் நிலையிலிருந்து நம்பிக்கை என்னும் நிலைக்குப் பயணித்தோம்.

“கலை சார்ந்த சிகிச்சை அடக்கப்பட்ட, கண்டறிந்திராத அல்லது முற்றிலும் மறந்துவிட்ட உள்நோக்கங்களை வெளிக்கொணர உதவுகிறது. இந்த சிகிச்சை தெளிவான, தனித்துவமான இலக்குகளை ஒருவர் நிர்ணயித்துக்கொள்ளவும் உதவுகிறது” என்று அவள் கூறினாள். அவள் வாழ்க்கையை புரிந்தபின், அவளின் சுயத்தை அவளால் கட்டுப்படுத்த முடிந்தது. அவளுக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு 6 மாதங்களில் 7.5 கிலோ எடையைக் குறைத்தாள். தன் உடலுடன் புது உறவையும் புது அர்த்தத்தையும் ஏற்படுத்திக்கொண்டாள்.

படைப்புக் கலைகளின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை ஓவியம், உடலசைவு, இசை, குரல் போன்றவற்றைப் பயன்படுத்தி மன ஆரோக்கியத்தை உருவாக்கும் முறை. இம்முறை மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைத்து அவற்றை இதயத்தின் மூலம் கண்டடைந்து குணமாக்க வழி செய்கிறது.

உணர்வுகளை வெளிப்படுத்தப்படும்போது வெறும் ‘வரைதல்’ என்பதைத் தாண்டும் கலை

 

http://www.google.co.in/imgres?imgurl=http://farm5.static.flickr.com/4073/4819495536_b507d9f05c_b.jpg&imgrefurl=http://www.crpitt.com/2010_08_01_archive.html&h=698&w=1024&tbnid=JcfsFkNBJBCvgM:&docid=Kq2m8gurHimY3M&ei=m0rZVbn1MoyfugTa35ioAw&tbm=isch&ved=0CB8QMygDMANqFQoTCPmuwdWtvscCFYyPjgod2i8GNQ
உங்கள் பிரச்சினைகளை ஓவியமாக வரைந்து பாருங்களேன்! http://goo.gl/HIZ0qp

ஒரு உளவியல் மருத்துவனாக, படைப்புக்கலைகளின்வழி சிகிச்சையளிப்பவனாக, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உளப்பிரச்சினைகளைக் களைய கலை ஒரு சிறந்த வழி என்பதை கண்டறிந்தேன்.

புதிதாக ஒரு தொடர்புப் பாதை அமைக்கப்பட்டு, அதன்வழியே மூளை பயணிக்க கலை வெகுவாக உதவுகிறது. படைப்புகளில் வெளிப்படுத்தப்படும் அடையாளங்களையும் உருவகங்களையும் புரிந்துகொள்ள கலை சிகிச்சை வல்லுனர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக வார்த்தைகளில் வெளிப்படுத்த கடினமான உணர்வுகளை இவ்வகை படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. காரணத்துடன் உருவாக்கப்பட்ட பாதகமில்லாத இந்த முறைமை, நடத்தை மாற்றங்களை மற்றும் பிரத்யேக தேவைகளை அடையவும் நம்பிக்கையை அதிகரிக்கவும் கட்டுப்பாட்டு உணர்வை உருவாக்கவும் தன்னைத் தானே ஒருவர் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இந்த முறைக்கான நோக்கம் ஒன்றுதான். ஒருவரின் சுயத்தை அவர் கண்டறிவதுதான் அந்த நோக்கம்.

குழந்தைகளுக்கு நான் சிகிச்சை அளித்த போது சுய வெளிப்பாடு, உணர்வுகளின் கோர்வை, பிடிவாதம், சுயத்துக்கான இடம், அதற்கான எல்லை, உடல் சித்திரம், தன்னுணர்வுகளை புரிதல், உள்ளுணர்வு போன்றவை இன்னும் விரிவுப்படுத்தப்பட வேண்டுமென்பதை உணர்ந்தேன். இவையாவும் வளர்ந்தவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பொதுவாக இருப்பதுதான் இதன் சுவாரஸ்யம். இவை உறவுச்சிக்கல்களாக, பணிச்சிக்கல்களாக அல்லது வாலிபப்பருவத்தில் தன்னிடமே ஏற்பட்ட நம்பிக்கையிழப்பாகப் பல வடிவங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அனைத்துக்கும் முடிவாக அது தன்னைத்தானே புரிந்துகொள்வதற்கான தேடலாகத்தான் அமைகிறது.

சுயத்தின் குரல்

சொந்த வாழ்க்கையை சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்த நிர்ப்பந்திக்கும் இன்றைய வாழ்க்கைமுறையில் சுயம் என்பதற்கான தேவை நீர்த்துப்போய்க் கொண்டிருக்கிறது. நம்மை நாமே அதிகமாக கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி – நம் சுயம் உள்ளுணர்வால் அல்லாமல் புறத்தாக்கங்களால் செதுக்கப்படுகிறதா? நாம் விரும்பியவாறு முழுமையாக உருவாகியிருக்கிறோமா அல்லது அதன் ஒரு சிறுபகுதியைத்தான் அடைந்திருக்கிறோமா? நம் சுயத்தின் குரலை நாம் பெரும்பாலும் அடக்குகிறோம் அல்லது நம் மனம் எழுப்பும் சலசலப்பில் அதைத் தொலைத்துவிடுகிறோம்.

நம்மைச் சுற்றியுள்ள குரல்கள் இல்லாமல் நமக்குள் இருக்கும் குரலை மட்டும் கேட்டு வாழ ஆரம்பிக்க வேண்டும். ஓவியனாகவும் வரையப்படும் ஏடாகவும் நாம் இருக்க வேண்டும். இந்த உலகம் நம்மை வரைந்தாலும் என்ன வண்ணங்கள் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதையும் என்னவாக வரையப்படுவோம் என்பதையும் நமக்குள் நாம் எப்படி உணர்கிறோம் என்பதையும் தீர்மானிப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும். படைப்பதும் வெளிப்படுத்துவதும் நமக்குள் இயல்பாக இருப்பவை. ஆதலால் படைப்புக்கலையில் முன்னனுபவம் எதுவும் தேவையில்லை. படைக்கப்படுவது அழகாக இருக்க வேண்டுமென்கிற அவசியமும் இல்லை. எந்த சமரசமும் இல்லாமல் உங்களை வெளிப்படுத்த வேண்டும். இது உங்களின் சுயத்தை நீங்கள் ஒப்புக்கொள்வதற்கும் மாற்றத்தை நோக்கி நகர்வதற்கு எளிதாக்கும்.

முடிவாக – ஆம், இந்த முறைக்கு பொறுமையும் விடாமுயற்சியும் தேவை. நீங்கள் விரும்பும் மாற்றத்தை அடைய விழிப்புணர்வுதான் முதற்படி.

ஒருவேளை என் சுயம் என்னைக் கேள்வி கேட்டால் நான் இப்படி சொல்வேன் –

“உன் உணர்வுகள் உன்னை வழிநடத்த அனுமதி. ஏதேனும் சரியாகப்படவில்லையெனில் உதவி கேட்கத் தயங்காதே. உன் வாழ்க்கையின் ஓட்டத்தை வேறொருப் பாதைக்கு திருப்பு. ஏனெனில், சந்தோஷமான மனம்தான் ஆரோக்கியமான உடலுக்கான அடித்தளம்.”

போன வருடம் 1,35,445 பேர் இந்தியாவில் (அதிகாரப்பூர்வ கணக்குப்படி) தற்கொலை செய்திருக்கின்றனர். அதில் 68% பேர் 15லிருந்து 29 வயதுக்குட்பட்டவர்கள். குடும்பம், நண்பர்கள் என வாழ்ந்தவர்கள்தான். உணர்வுகளைப் பற்றி பேசுவதே பலவீனமாகக் கருதப்படும் சமூகத்தில் “மனச்சிக்கல்” என்பது மறைக்கப்படுகிற பிரச்சினையாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

மூலம்- http://www.thealternative.in/society/mindspace-things-ok-lets-draw/

தமிழில்- ராஜசங்கீதன்