https://41.media.tumblr.com/c5a681c87491092c507cc46effe0ca86/tumblr_mtw0qy6czr1si82aeo1_1280.jpg
https://41.media.tumblr.com/c5a681c87491092c507cc46effe0ca86/tumblr_mtw0qy6czr1si82aeo1_1280.jpg

                                                

ஒரு புதிய சிந்தனை, ஒரு புதிய கோணத்தில் மனித சமுதாயத்தின் வெற்றியைக் குறித்து  வெளியிடப்பட்டுள்ள  நூல் – “சாப்பியன்ஸ் – மானுடத்தின் குறுகிய வரலாறு” (Sapiens – A Brief History of Mankind) குறிப்பிடத்தக்க சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வருடம் ஜூன் மாதத்தில் பிரசுரமான இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் – யுவால் நோவா

ஹராரி; ஜெருசலேம் நகரில் உள்ள ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் வரலாற்று பேராசிரியராக பணி  செய்பவர். இது இவரது முதல் நூல் இல்லையெனினும், துவக்கத்தில் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது ; இன்று 30 மொழிகளில் இப்புத்தகம் வெளிவந்து சாதனை செய்துள்ளது.   

70 ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் – இந்த பூமியில் ஒரு சிறு துளி; கற்கால மனிதன் பற்றிய முக்கிய குறிப்பீடு என்று எதுவுமே இல்லை, எந்த பாதிப்பும் – இந்த பரந்த உலகில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.பூமியின் நிகழ்வுகளோ, அமைப்புகளோ எந்தவிதத்திலும் பாதிக்கப் படவில்லை ; வண்டுகள்,தேனீக்கள் ,மரங்கொத்தி பறவைகள், ஜெல்லி மீன்கள் போன்ற உயிரனங்களின் பாதிப்பைவிடவும் குறைவே அன்றைய மனிதனின் வாழ்க்கை நடைமுறை . 

ஆனால் இன்று – மனிதன் உலகை ஆளுகிறான்; சூரிய குடும்பத்தை சேர்ந்த பத்து கிரகங்களிலும் உயிரினங்கள் வாழும் ஒரே ஒரு கிரகமான பூமியை தன் கைக்குள் அடக்கி ஆளும் நிலைக்கு உயர்ந்து விட்டான் . இந்த வெற்றி எப்படி கிட்டியது ?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவின் மூலையில் மனிதக் குரங்குகளாக உலாவிக்கொண்டு, தன் வேலை உண்டு, தன் தீனி உண்டு என்றிருந்த கூட்டம் இன்று உலகையே ஆட்டிப் படைப்பதன் பின்னணி என்னவாக இருக்கக்கூடும் ?

நாம் எப்போதும் மனிதன் மற்ற மிருகங்களில் இருந்து வேறுபடும் அம்சத்தை தனிப்பட்ட ஒப்புநோக்குதல் என்ற அளவிலேயே செய்கிறோம். மனித மூளை,அதன் ஆற்றல் – பிற உயிரினங்களின் மூளையை விட மிக உயர்வான ஒன்றாக நம்பும்படி பணிக்கப் பட்டுள்ளோம். உண்மையில்  ஒரு சிம்பன்ஸி குரங்கிற்கும் மனிதனுக்கும் மிகப் பெரிய வேற்றுமை என்பது எதுவுமே இல்லை. ஒரு மனிதனையும் ஒரு சிம்பன்ஸியையும் ஒரு தனிப்பட்ட, ஆளில்லாத் தீவில் கொண்டு விட்டால், சிம்பன்ஸியே பிழைக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது என்கிறார் ஆசிரியர் ஹராரி .

மனிதன் – மிருகம் முக்கிய வேறுபாடு என்பது ஆசிரியரின் கோட்பாட்டின் படி – ஒரு குழுவாக செயல்படும் திறனில் உள்ளது.

இன்று உலகை மனிதன் ஆளுகின்றான் எனில் அது பல்லாயிரம் உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இருந்து செயல்படும் ஒரே ஒரு மிருக ஜாதி என்பதால் மட்டுமே. எறும்புகளும் தேனீக்களும் குழுவாக செயல்படுவது உண்மையெனினும்- அதுவும் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கொண்ட குழுவாக அமைந்து செயல்படுகின்றன எனினும், அந்தக் குழு எதற்கும் வளைந்து தரக்கூடிய தன்மை இல்லாதது : ஒரு தேனீக்கள் கூடு – புதிய அபாயத்தை சந்திக்க நேரும்போது, தங்கள் சமூக அமைப்பை மாற்றிக் கொண்டோ, வரும் ஆபத்தை தனக்கு சாதகமான ஒன்றாக திருத்திக் கொள்ளும் திறமையோ பெற்றதல்ல. உதாரணத்திற்கு – தேனீக்கள் தங்களின் ராணித் தேனீயைக் கொன்றுவிட்டு புதிய ‘குடியரசு’ அமைத்ததாக நாம் அறிந்ததில்லை !

நரிகளும்,சிம்பன்ஸி ரக குரங்குகளும் அமைத்துக் கொள்ளும் குழு அமைப்பு, தேனீக்கள், எறும்புகள் குழுக்களை விடவும் சற்றே வளைந்து பொருந்திக்கொள்ளும் தன்மையது. ஆனால் அத்தகைய குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை மிகக் குறைவானதே; மேலும் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமான, தெரிந்த நபர்கள் மட்டுமே கொண்டது. நான் ஒரு சிம்பன்ஸி என்றால் என் குழுவில் எனக்குத் தெரிந்த சிம்பன்ஸிகள் மட்டுமே இடம் பெரிய முடியும். என் முன்னால் நிற்கும் புதிய சிம்பன்ஸி நல்லதா ? கெட்டதா ? – முன்பின் தெரியாத ஒன்றை என் குழுவில் நான் எப்படி சேர்த்துக் கொள்வேன்? பழக்கமோ ,அறிமுகமோ இல்லாதா நபருடன் நான் எப்படி ஒத்துழைக்க முடியும் ?

மனிதர்கள் மட்டுமே மிகப் பெரிய குழுவாக, அசரவைக்கும் வகையில் இணைந்து செயல்பட முடியும்

புயலில் ஆடும் நாணற் புதர் போல் எவ்வகை சோதனைகளையும் சுலபமாக கடக்க இயலும். ஒருவருக்கு நேரெதிர் ஒருவர் அல்லது பத்து பேருக்கு எதிரில் பத்து பேர் என்ற கணக்கில் சிம்பன்ஸிகள் மனிதர்களை விடவும் சிறப்பான குழுவாக செயல்பட முடியும். ஆனால் ஆயிரம் மனிதர்கள் – ஆயிரம் சிம்பன்ஸிகள் என்ற குழு மோதலில் மனிதரே ஜெயிப்பர் .ஆயிரம் சிம்பன்ஸிகள் ஒரு குழுவாக இணைந்து செயல் படுவதென்பது நடைமுறை சாத்தியமான ஒன்றே அல்ல .  நூறாயிரம் சிம்பன்ஸிகளை மும்பை பங்குச் சந்தையிலோ அல்லது சேத்துப்பட்டு ஸ்டேடியத்தில் விட்டாலோ என்னவாகும் ? குழப்பங்களையும் எழும் கூக்குரலையும் கற்பனையில் காணவும் !

ஒத்துழைக்கும் ஆற்றல் எப்போதும் நன்மை தருவதல்ல ; வரலாற்றின் பக்கங்களில் பல யுத்தங்கள், நிர்மூலமான நிலப் பகுதிகள், கூண்டோடு அழிக்கப்பட்ட மனித இனங்கள் – யாவுமே இந்த ஒத்துழைக்கும் பண்பினால் விளைந்ததுதான். சிறைச்சாலைகள், சித்திரவதைக் கூடங்கள், பலி பீடங்கள் யாவுமே மனிதர்களின் ஒத்துழைப்பின் ஏற்பட்டதுதான் .

இருப்பினும் எவ்வாறு மனிதன் மற்ற மிருகங்களின் கூட்டு அமைப்பை வெல்லும்படி – அது விளையாட்டாக இருந்தாலும், வணிகமாக இருந்தாலும், கொன்று குவிப்பதாக இருந்தாலும் செயல்படுத்த முடிகிறது ?

இதன் விடை – மனிதனின் கற்பனா சக்தியில் உள்ளது . முன்பின் அறியாத அந்நியர்களுடன் இணைந்து ஒத்துழைக்கும் ஆற்றல் – அதன் மூலக் கூறு – நம் கதை பின்னும் திறமை, அதை மற்றவர்களை நம்ப வைக்கும், விரிவான அளவில் அதைப் பரப்பி விடும் திறமை- இதில் அடங்கியுள்ளது.

பின்னப்பட்ட கதைகளை எவரும் நம்பிக்கை கொள்கையில்,அதன் பின்னணியாக வரும் சட்ட திட்டங்களையும் எந்த கேள்வியும் ஐயப்பாடும் இன்றி அனுசரிப்பர். எனவே ஒத்துழைப்பு என்பது சுலபமாக சாத்தியமாகிறது. உன் மதத்தை சாராதவனைக் கொல் – நீ சொர்க்கம் செல்வாய் ; ஆயிரம் கன்னிகள்,தேவதைகள் அங்கு உன்னை சீராட்டுவார் என்பதை நம்பும் கூட்டம்தானே மனித வெடிகுண்டுகளாக மாறுகிறது ? ஏதுமறியா அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் சதைப் பிண்டங்களாக சிதற வைக்கிறது ?

இது மனிதர்களால் மட்டுமே செய்யமுடியும் ; ஒரு சிம்பன்ஸியிடம் “எனக்கு ஒரு வாழைப் பழம் தா; தருவதால் நீ இறந்த பின் ,சிம்பன்ஸிகளின் சொர்க்க பூமியை அடைந்ததும் பிரதி பலனாக ஆயிரம் வாழைப் பழங்கள் பெறுவாய்; இது உறுதி” என்று நம்ப வைக்க முடியுமா நம்மால் ?

எந்தவொரு சிம்பன்ஸியும் இந்தக் கதையை நம்பப்போவதில்லை . ஆனால் மனிதன் நம்புவான்; சொல்லப்பட்ட கதைக்கு கிளைக் கதைகள் உருவாக்கி பரப்பவும் செய்வான். இதனால்தான் மனிதன் உலகை ஆளுகிறான் ; சிம்பன்ஸிகள் மிருகக் காட்சி சாலைகளிலும் , மருத்துவ சோதனைக் கூடங்களிலும் அடைப்பட்டு கிடக்கின்றன !

மதங்கள் – இந்தக் கதைப் பின்னல்களையே ஆதாரமாக கொண்டு இயங்குகின்றன.ஒரு பெரும் குழு ஆலயங்களை நிர்மாணிக்கிறது. அதே குழு மாற்று மதங்களை சார்ந்தவர்கள் மீது போர் தொடுக்கிறது- ஏனெனில் இந்தக் குழுக்கள் யாவும் கடவுள்,சொர்க்கம், நரகம் என்ற கட்டுக்கதையை நம்புவர்கள். ஆனால் இத்தகைய பெரிய அளவிலான ஒத்துழைப்பு இயக்கம் மனித சமூகத்தின் பிற அம்சங்களிலும் உள்ளது : குறிப்பாக நமது சட்டம் மற்றும் நீதித் துறைகள் .மனித உரிமைகள் என்ற அடிப்படை கோட்பாட்டில்தான்   செயல்படுகின்றன. மனித உரிமைகள்  என்பதும் ,கடவுள், சொர்க்கம் போன்ற கட்டுக்கதைகளே. உண்மையில் மனிதனோ,சிம்பன்ஸியோ, நரிகளோ உரிமைகள் என்பதை கொண்டவைகளே அல்ல. ஒரு மனிதனைப் பிரித்து ஆய்ந்தால் உரிமைகளைக் காண முடியாது; ஏனெனில் அது அவனது கற்பனையில் உதித்த ஒரு பொருள். மனிதனின் இட்டுக் கட்டும் கதைகளில் அவை நிச்சயம் இருக்கும். மனித உரிமைகள் என்பது ஒரு அருமையான சிறப்பான கட்டுக்கதை – அவ்வளவேதான் !

இதே போன்ற அமைப்பு அரசியலிலும் உண்டு . கடவுள்கள்,மனித உரிமைகள் போலவே நாடுகளும் கற்பனைப் பொருளே ; ஒரு மலையை பார்ப்பதோ,தொடுவதோ,நுகர்வதோ போல ஒரு நாட்டை நாம் நுகர முடியாது. ஆனால் அதை நம்பும் மனிதக் குழு அதன் மீது தீரா பாசமும் பிணைப்பும் கொள்ளும் அளவுக்கு மிக உயர்ந்த கட்டுக்கதை அது.

இதே அம்சம் மனிதனின் வர்த்தகம் ,பொருளாதாரம் – இவற்றிலும் காணாலாம். உதாரணத்திற்கு அமெரிக்க டாலரை எடுத்துக் கொள்வோம். ஒரு பச்சை நிறக் காகிதம். அதற்கென தனி மதிப்பு என்று ஒன்றும் கிடையாது ; அதை உண்ணவோ,கரைத்துக் குடிக்கவோ,ஆடையாக அணியவோ முடியாது . ஆனால் பெடரல் ரிசர்வ் வங்கி என்றொரு நிறுவனமும் அமெரிக்க ஜனாதிபதி என்ற பதவியும் பின்னிய கதையை நம்புவோர் – இந்த பச்சை காகிகதத்தைக் கொடுத்தால் ஐந்தோ,ஆறோ வாழைப்பழங்கள் பெறலாம் . இதை பல்லாயிரம் மனிதர்கள் நம்புவதால் இந்த பச்சை காகிதத்தின் மதிப்பு ஐந்து வாழைப்பழங்கள். ஒரு சூப்பர் மார்கெட் சென்று , முன்பின் தெரியாத கடை ஊழியரிடம் நான் ஒரு டாலரைக் கொடுத்தால் எனக்கு ஐந்து பழங்கள் தருவார் .இந்தக் கதையை சிம்பன்ஸிகளிடம் சொல்லிப் பாருங்கள் !

உண்மையில் மனிதன் சிருஷ்டித்த பல கதைகளில் உன்னதமானது – பணம்.கடவுளை நம்பாதவர்கள் இருக்கிறார்கள் ; மனித உரிமைகளை நம்பாதவர்கள் இருக்கிறார்கள் ; அமெரிக்காவை நம்பாதவர்கள் இருக்கிறார்கள் .ஆனால் பணத்தை நம்பாதவர் என்று ஒரு மனிதனை முன்னிறுத்த முடியுமா ? அமெரிக்க கலாச்சாரத்தை ,அரசியலை, மதத்தை அடியோடு வெறுத்த பின் லேடன் கூட அமெரிக்க டாலரை வெறுக்கவில்லையே ! அமெரிக்க டாலர் கதையை அவனும்தான் நம்பினான்.

முடிவாக குறிப்பிட விழைவது இதுவே: மிருகங்கள் – ஆறுகள்,தாவரங்கள் என்னும் இயல்பான உலகில் வாழ்கின்றன; மனிதன் மட்டுமே ஒரு இரட்டை உலகத்தில் வாழ்கிறான். ஆம் – நம் உலகிலும் மிருகங்களும்,ஆறுகளும் பறவைகளும் உள்ளன. அதன் மேற்படிவாக ஒரு கற்பனை உலகம் – நாமே சிருஷ்டித்தது – இயங்குகிறது. இந்த கற்பனை அடுக்கில்தான் அமெரிக்காவும்,ஐரோப்பிய யூனியனும், கடவுளும்,டாலரும், மனித உரிமைகளும் பரிமளிக்கின்றன.

காலம் செல்ல செல்ல, இந்த கற்பனை அடுக்குகள் மிகுந்த வலிமை பெற்று விட்டன. ஆறுகளும்,மிருகங்களும்,பறவைகளும் அவைகளின் வாழ்வாதாரங்களும் இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகக்கூடிய அளவுக்கு இந்த கற்பனா சக்திகள் பெருகி விட்டன ; இவற்றின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அமெரிக்கா, உலக வங்கி இவர்களின் வசம் உள்ளது .இரண்டுமே மனிதனின் கற்பனையில் உதித்த கூறுகள்.

மூலம்- http://ideas.ted.com/why-humans-run-the-world/

தமிழில்- சங்கர் கணபதி