Creativity childrens_docpage

ஒரு பிரச்சினைக்கு ஒரு தீர்வு என்பதுதான் நிகழ் கால கல்வித்திட்டத்தின்  போதனை.

புதிது புனையும் கல்வியை வழங்காமல் மனப்பாடம் செய்யும் பாணி கல்வியைத்தான் முன்னிறுத்துகிறது. நாயகர்களை பற்றி சொல்லிக் கொடுக்கிறதே தவிர நாயகர்களாவது எப்படியென சொல்லிக் கொடுப்பதில்லை. ஒரு பிரச்சினை என எடுத்துக்கொண்டால் யதார்த்த வாழ்வு கொடுக்கும் பல வகை கோணங்களைப் பற்றி நமது கல்வித்திட்டம் ஆராய வாய்ப்பளிப்பதில்லை. படைப்பாற்றல், தொழில் முனைப்பு போன்றவை கற்றுக்கொடுத்து வருவதில்லை என பலர் நினைக்கின்றனர். கண், முடி நிறம் போன்றவற்றைபோல் பிறப்பிலிருந்து இவை வருவதாகக் கருதுகின்றனர். அறிவுள்ளோர்க்கு இது உவப்பான சிந்தனை அன்று. இந்த திறன்கள் எப்போது வேண்டுமானாலும் கற்று, வளர்த்துக்கொள்ளக் கூடியவை.

படைப்பாற்றலும், தொழில் முனைப்பும் கற்றுக்கொடுக்கப்பட முடியாதவை என ஏன் மக்கள் நினைக்கிறார்கள்?

வகுப்பறையிலிருந்து நிறுவனம் வரை பலதரப்பட்ட மக்களை நான் சந்தித்திருக்கிறேன். படைப்புத்திறன் என்றால் என்ன என அவர்களிடம் கேட்டபோது பல தரப்பட்ட பதில்கள் கிடைத்தன. பெரும்பான்மை ‘மாற்றி யோசித்தல்தான் படைப்புத்திறன்’ என்கிற வழக்கமான பதிலைத்தான் கூறுகின்றனர். இந்த கூற்றில் உண்மை கிடையாது.

ஏனெனில் எல்லாத் துறைகளையும் போல படைப்புத்துறைக்கும் குறிப்பிட்ட வகை மனோபாவம், அறிவு, திறமைகள் தேவைப்படுகின்றன. படைப்பாற்றலை வளர்த்தெடுக்க முதலில் அதற்கு தேவையானவை என்னவென்பது சரியாக வரையறுக்கப்பட வேண்டும்.

படைப்பாற்றலுக்கு தேவையான திறன்களில் முதன்மையானது கற்பனை வளம்.

  • கற்பனை படைப்பாற்றலை உருவாக்கும்.
  • படைப்பாற்றல் புதிது புனைய கற்றுக்கொடுக்கும்.
  • புதிது புனைதல் தொழில் முனைப்பை கைகொள்ளச் செய்யும்.

எழுதப் படிக்கக் எப்படி பல நிலைகள் கொண்டு கற்றுக்கொடுக்கிறோமோ அதேபோல்தான் இந்த கற்பித்தல் முறையும் படிமுறைகளை கொண்டிருக்கப் போகிறது.

எழுதப் படிக்க கற்றுக்கொடுக்கும் முறை எப்படி இயங்குகிறது?

அனைவருக்கும் தெரியும் குழந்தைகள் பொருளற்ற ஓரசை சொற்களை பேசுவதில் தங்கள் மொழியைத் தொடங்குகின்றன என்று. அவற்றைக் கொண்டு அடுத்தவருடன் தொடர்புகொள்ள அவை முயலும். பின், அந்த சத்தங்களை எப்படி எழுப்ப வேண்டுமென்பதை கற்றுக்கொண்டு, அச்சத்தங்களால் வார்த்தைகளை உருவாக்க முயற்சிக்கும். வார்த்தைகளை உருவாக்க கற்றபின், அவற்றால் வாக்கியங்களை வடிவமைக்க முனையும். பின், அந்த வாக்கியங்களைக் கொண்டு கதைகள் புனையத் துவங்கும். கற்பிப்பவர்கள் இந்த இயக்கமுறையை கருத்தில்கொண்டு அதற்கு தேவையான எழுத்துக்கள், சொற்கள், இலக்கணம் ஆகியவற்றை அந்தந்த படிநிலைக்கு வகுத்துக்கொண்டு கற்றுக்கொடுப்பர்.

இப்போது இதே போல், கற்பனை வளத்தில் தொடங்கி தொழில் முனைப்புக்கு இட்டுச்செல்லும் படிமுறைகளை கீழ் பத்தியில் கொடுத்துள்ளேன். இந்த வரைமுறைக்கு நான் ‘கண்டுபிடிப்பு நிலை’ எனப் பெயர் சூட்டியுள்ளேன்.

கண்டுபிடிப்பு நிலை

  • கற்பனை என்பது இல்லாதவற்றை காண்பது.
  • படைப்பாற்றல் என்பது கொடுக்கப்படும் சவால்களுக்கு கற்பனை வளத்தின் உதவியோடு தீர்வுகள் உருவாக்க முனைவது.
  • புதுமை என்பது தீர்வுகளை தனித்தன்மையுடன் உருவாக்குவது.
  • தொழில் முனைப்பு என்பது புதுமையை கொண்டு அடுத்தவரின் கற்பனை வளத்தையும் பயன்படுத்தி தீர்வுகளை செயல்படுத்துவது.

புதுத் தொழில்களுக்கும் புதிது புனைய விரும்பும் அனைவருக்கும் இந்த கட்டமைப்பு பொருந்தும். தொழில் முனைப்பு தொற்றக்கூடியது. கற்பனை, படைப்பு, புதுமை என அது பரவி தொழில் முனைப்பை இன்னும் அதிகமாக்க வல்லது.

இது போல், உங்களுக்கான கண்டுபிடிப்பு நிலை ஒன்றை நீங்கள் உருவாக்கிக் கொள்வதன்மூலம் புது வாய்ப்புகளை உருவாக்கலாம். நிறைய சவால்களை சந்திக்க தயாராகலாம். புதிய தனித்தன்மையான தீர்வுகளை அடையலாம். அவற்றை செயல்படுத்தலாம். இப்படியான கட்டமைப்புகளை கொள்வதன்மூலம் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை அடைவதற்கான பாதையை படைக்கலாம்.

மே 2015ல் ஹார்பர் காலின்ஸால் வெளியிடப்பட்ட Insight Out: Get Ideas Out of Your Head and Into The World-லிருந்து எடுக்கப்பட்டது.

மூலம்- https://thoughts.siliconguild.com/why-do-people-think-you-can-t-teach-creativity-689270f0fab

Photo Credit- http://acumen.org/content/uploads/2012/05/1-IMGP2927.jpg

தமிழில்- ராஜசங்கீதன்