காதலியும் ஆக்டிவ் லிஸனிங்கும் https://upload.wikimedia.org/wikipedia/commons/8/88/Couple_outside_Temple_of_Somnathpur_-_Near_Mysore_-_India.JPG
காதலியும் ஆக்டிவ் லிஸனிங்கும் https://upload.wikimedia.org/wikipedia/commons/8/88/Couple_outside_Temple_of_Somnathpur_-_Near_Mysore_-_India.JPG

நீங்கள் காதலித்திருக்கிறீர்களா?

காதலி பேசுவதை கவனிக்காமல் பல தடவை மொக்கை வாங்கியிருப்பீர்கள். திட்டு வாங்குவீர்கள். எடுத்த சினிமா டிக்கெட் வீணாகிவிடுமோ என மனம் பதைபதைக்கும். பதிலுக்கு உங்கள் தரப்பை விளக்க முற்படுவீர்கள். எரிமலை வெடிக்கும். கடைசியில் சினிமாவுக்கு நீங்கள் மட்டும் தனியாக போய் வருவீர்கள். காதலி மட்டுமல்ல, நிறுவனத்தில் மேனேஜரிடம் வீட்டில் அப்பாவிடம், பள்ளி, கல்லூரியில் ஆசிரியரிடம் என பல நேரங்களில் இந்த “பேஸிவ் லிஸனிங்” எனப்படும் முழுமையற்ற கவனித்தல் நம்மை காலை வாரி விட்டிருக்கும்.

வெறும் ஓரசை சப்தங்களால் பல அர்த்தங்களை தொடர்புபடுத்தி புரிய வேண்டிய பற்றாக்குறைதான் பெருமொழிக்கான அவசியத்தை மனிதனுக்கு ஏற்படுத்தியது. இவ்வகை பெருமொழிகள் இன்று அதிகம் இருந்தாலும் உரையாடலின் போது அடைய வேண்டிய புரிதல் இன்னும் சவாலாகத்தான் இருக்கிறது.

மனம் நினைப்பதை கண்டறிவதற்கு இருக்கக்கூடிய எளிய கருவி மொழிதான். முழுமையாக கண்டறிய முடியாது என்பதுதான் இதன் சிரமம். ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்ஸின் கணிணி போல் அனைவருக்கும் ஒன்று வாய்த்தால் வேலை சுலபம்தான். ஆனால் வாய்ப்பு இல்லையே!

கவனிப்பதில் இரண்டு வகை இருக்கின்றன. ஆக்டிவ் லிஸனிங் எனப்படும் முழுமையாக கவனிப்பது ஒன்று. பாஸிவ் லிஸனிங் எனப்படும் அரைகுறையாய்  கவனிப்பது இரண்டாவது. இந்த பாஸிவ் லிஸனிங்தான் அனைவரும் செய்வது. நமக்கு தேவையான விஷயங்களை மட்டும் கவனித்து புரிந்துகொள்வது. ஆக்டிவ் லிஸனிங் அடுத்தவர் பேசுவதில் – தேவையோ தேவையில்லையோ – அனைத்தையும் கவனிப்பது.

ஆர்வத்துடன் கேட்பதனால் ஏற்படும் பயன்கள்

  • உங்களுக்கு தேவையானதை மட்டும் கேட்க மாட்டீர்கள். சொல்பவரின் நோக்கமும் சொல்லப்படுவதன் முழு அர்த்தமும் புரிய வரும். பேசுபவரோடு ஆழமான நட்பு ஏற்படும்.
  • முழுமையாக கவனிக்கையில் பேசுபவருக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்கிறீர்கள். பதிலுக்கு அவரும் உங்களிடம் மதிப்பு கொள்வார்.
  • பேசுவதை கவனித்து அவர்களுக்கான மதிப்பை கொடுக்கையில், அவர்களுடன் ஆழமான உறவுகள் ஏற்படுத்திக்கொள்வது சுலபமாகிறது.
  • ஒருவர் பேசுவதை சரியாக கவனிக்கும்போது அவர் சொல்வதை பல கோணங்களில் யோசிப்பீர்கள். கண்டிப்பாக தவறாக புரிந்துகொள்வது தவிர்க்கப்படும்.
  • மனிதர்களை புரிந்துகொள்வது சுலபமாகிவிடும். பேசுவதை அதிகம் கவனிக்க கவனிக்க மனிதர்கள் எதை சொல்ல, எதை தொட்டு, எதற்கு வருகிறார்கள் என்பதையெல்லாம் முன்யூகிக்கும் சாத்தியம் வந்துவிடும்.

ஒரு சராசரி உரையாடலுக்கு 30% கவனம் போதும். மிச்ச சதவிகிதத்தையும் பயன்படுத்தினால் என்ன ஆகும் என யோசித்துப் பாருங்கள். உங்கள் உரையாடல்கள் ஆழம் பெறும். அர்த்தம் கொள்ளும்.

எப்படி ஆர்வத்துடன் கவனிப்பது?

  • விழிப்புணர்வுடன் யோசித்து அடுத்தவர் என்ன சொல்கிறார் என புரிந்துகொள்ள முயலுங்கள். இது மிக முக்கியமானது. அனைவருக்கும் எளிதில் சாத்தியப்படாது.
  • அடுத்தவர் பேசுகையில், பதிலுக்கு என்ன சொல்ல வேண்டுமென யோசிக்கக்கூடாது. அப்படி யோசிக்கையில் கவனம் சிதறிவிடுகிறது. முழுமையாக கவனிக்கையில் அதிகமான விஷயங்கள் கிடைக்கும்.
  • உங்கள் நம்பிக்கைகள், கருத்துக்களை மூட்டை கட்டி வையுங்கள். முக்கியமாக அடுத்தவர் பேசுவது முற்றிலும் தவறாக இருக்கும்பட்சத்தில் இவை எதுவும் உங்களுக்கு வேண்டாம். இது உங்களை பெரிய பொறுமைசாலியாக ஆக்கும். அதிக புரிதல் கொண்டவராக மாற்றும்.
  • பொறுமையாக இருங்கள். அடுத்தவர் சுற்றி வளைத்து பேசுகையில், அவர் சொல்ல வருவதை புரிந்துகொள்ள பொறுமை உதவும்.
  • கவனத்தை சிதற விடாதீர்கள். உரையாடலுக்கு திரும்ப திரும்ப கவனத்தை செலுத்துங்கள். நாம் அடுத்து செய்ய வேண்டியவை, அது, இது என மனம் பலவாறாக அலையும். அதை பிடித்து, கொண்டு வந்து, பேசுபவரை கவனிக்க செய்யுங்கள். இப்பயிற்சி கவனிக்கும் திறனை மேம்படுத்தும்.

முழுமையாக கவனிப்பதால் என்ன பயன்? ஆழமான உறவுகள் ஏற்படும். தவறான புரிதல்கள் நிகழாது. மக்களை சரியாக புரிந்துகொள்வீர்கள். வேலைத்திறன் அதிகரிக்கும். இப்படியெல்லாம் லேகியம் விற்பவன் போல் பல காரணங்கள் சொன்னாலும், முக்கியமான காரணம் அடுத்தவர் உங்களிடம் பேச வருகிறார் என்றால் அவரின் அந்த விருப்பத்தை அடிப்படையில் நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள், மதிக்கிறீர்கள் என்பதுதான். உங்களின் இந்த அடிப்படை விருப்பமே உங்களை அடுத்தவருக்கு விருப்பமுள்ளவராக மாற்றும். வெகு இயல்பாக முன்னேற்றம் ஏற்படும். அதிமுக்கியமாக உங்கள் சினிமா டிக்கெட்கள் வீண் போகாது. ஏனெனில் உங்கள் காதலியும் முழுகவனமும் உற்ற தோழிகள்.

மூலம்- http://alifeofproductivity.com/active-listening-how-to-do-it/

தமிழில்- ராஜசங்கீதன்