மிகவும் குறும்புக்கார குழந்தைகள் நிறைந்த பள்ளி ஒன்றிற்கு லக்ஷ்மிராம் ஆசிரியராகப் போகிறார். வகுப்பறையில் அவர் கூறுவதை குழந்தைகள் எவரும் கவனிக்கவில்லை கூச்சலிட்டுக் கொண்டும், ஒருவர்மேல் ஒருவர் கல்லெறிந்து கொண்டும் மிக ஒழுங்கீனமான நடத்தைகள் நிரம்பிய வகுப்பைக் கண்டு மனம் வெதும்புகிறார். “குழந்தைகளே, இன்று வகுப்பு  கிடையாது; நாளை எல்லோரும் வாருங்கள்” என்று அறிவிக்கவும் இன்னும் பலத்த கூச்சலோடு நொடியில் பிள்ளைகள் மறைந்து விடுகின்றனர்.

அடுத்த நாள் வகுப்புக்கு வரும் குழந்தைகள் ‘இன்றைக்கும் பள்ளி லீவு விடுங்க சார் !’ என்று கூக்குரலிடவும், லக்ஷ்மிராம் ‘சரி, அப்படியே செய்வோம் ; ஆனால் எல்லோரும் அமர்ந்து ஒரு கதை கேட்டுவிட்டு போகலாம்’ என்றதும் மிக்க ஆர்வத்தோடு பிள்ளைகள் வட்டமாக அமர்கின்றனர்.

“ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் ;  ராஜாவுக்கு ஏழு அரண்மனைகள் இருந்துச்சாம் …” என்று கதை துவங்கியதுமே அங்கு அமைதி நிலவுகிறது. எந்த அசைவுமின்றி கதையில் ஆழ்ந்து விடுகின்றனர் குழந்தைகள். கதையின் நடுவில் லக்ஷ்மிராம் “இன்னைக்கும் லீவு விடுவோமா ? கதையை இத்தோட நிறுத்திக் கொள்ளலாம் ” என்கிறார்.” சார்,சார் – லீவு வேண்டாம், கதைதான் வேணும்” என்று ஒருமித்த குரலில் பிள்ளைகள் சொல்கிறார்கள் !

மூன்றுமணி நேரம் போனதை நினைவூட்ட பள்ளி மணி அடிக்கிறது. சில குழந்தைகள் அவரை நேசத்தோடு பார்க்க,சில அவரின் கையைத் தொட்டுப் பார்க்க, ஒரு மந்திரத்தால் கட்டுண்ட கூட்டமாக சுற்றி நிற்கின்றனர்.

அடுத்த 10 நாட்களும் தினமொரு கதை. பிள்ளைகள் வட்டமாக அமர்ந்து கேட்கின்ற பொழுது, ஏதாவதொரு குழ்ந்தை சத்தமிட்டாலோ, இடையூறு செய்தாலோ,மற்ற குழந்தைகள் அதை அடக்கி,அமர வைத்துவிடுகின்றனர். பதினோராவது நாள் – எனக்கு தெரிந்த கதைகள் அத்தனையும் சொல்லி முடித்துவிட்டேன்; இதற்கு மேல் எனக்குத் தெரியாது.

50 மாணவர்கள் உள்ள நாலாம் வகுப்பில் ஒவ்வொரு மாணவனுக்கும் மூன்று புத்தகங்கள் – ஆங்கிலம், குஜராத்தி, சமூகவியல். ஏனிந்த ஒரே புத்தகங்களை எல்லோரும் வாங்க வேண்டும்? அதற்கு பதில் ஒவ்வொரு பிள்ளையும் மூன்று புத்தகங்கள் வாங்கி, முழு வகுப்பும் ஓராண்டில் 150 புத்தகங்கள் படித்து விடலாமே என்று புதிய எண்ணம் பிறக்கிறது லக்ஷ்மிராமுக்கு .

எந்த உலக வங்கி நீதியோ, முதலமைச்சர் உதவித் தொகையோ இன்றி, ஒவ்வொரு பெற்றோர் செலவழித்தே ஆக வேண்டிய மூன்று புத்தகப் பணத்தில் இந்த வகுப்பு நூலகம் உருவாகிறது. இவ்வாறு  பாவ்நகர் பள்ளி ஒன்றில் வழக்கமான பாட புத்தகங்களை ஒதுக்கி விட்டு ,,150 புத்தகங்களோடு ஒரு நூலகம் அமைகிறது; பிள்ளைகளும் உற்சாகமாக பள்ளி வருகின்றனர் ; ஒரு வருடத்தில் 150 புத்தகங்களை வாசித்து முடிக்கின்றனர்.

1928 -இல் ஜிஜுபாய் பதேக்கா என்பவரால் எழுதப்பட்ட – திவஸ்வப்னா – ‘பகற் கனவுகள்” – ஒரு கற்பனை புனைவாக இருந்தாலும், மரபுவழிக் கல்வியை ஒழித்துவிட்டு, மாண்டிஸோரி கல்விமுறையால் ஒரு புதிய சோதனை முயற்சி துவங்கப்படுவதையும், அதற்குத் தேவையான கருவிகளை உள்ளூரில் கிடைப்பதைக் கொண்டே அமைத்துக் கொள்வதையும் ஒரு ஆசிரியரின் பார்வையில் காட்டுகிறது. பள்ளி நோக்கி ஆர்வத்தோடு ஓடிவரும் குழந்தைகளே அந்த முயற்சியின் வெற்றி.


அர்விந்த் குப்தா – குப்பைகளை அறிவியல் கற்பிக்க உதவும் எளிய சாதனங்களாக உருமாற்றும் வித்தகர், ஒரு கோடை காலையில் ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ள குக்கூ  காட்டுப்பள்ளியின் துவக்க விழாவை சிறப்பிக்க வந்தார் . சிறிது நேரம் கிராமத்துக் குழந்தைகள், பணி ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் – இவர்களுடன் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஓர் ஆசிரியரால் பள்ளியில் என்ன சாதிக்க இயலும் ? என்பதை இக்கதையின் மூலம் மிக அழகாக கூறினார்.