parent with her childஎன் மகன் IIT இல் இடம் கிடைக்காமல் போனதும் மிகவும் வருத்தமடைந்தேன்; தேர்வு செய்யப்பட மெரிட் பட்டியலில் அவன் பெயர் இருந்தும், சிறப்பான ஆல் இந்திய ரேங்க்  இல்லாமையால் மிகச் சாதாரணமான படிப்புகளில் மட்டுமே சேர வாய்ப்பு இருந்தது – அவற்றில் சேர மகனுக்கும் ஆர்வமில்லை. நான் என்னையே கடிந்து கொள்ளத் துவங்கினேன் : மகனை இன்னும் சிறிது நச்சரித்து , தேர்வு நேரங்களில் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுவதை தடுத்து, இன்னும் கடினமாக உழைக்க தூண்டுதல் கொடுத்து அவனை சிறுது மெனக் கெடவைத்திருக்க வேண்டும். பிற்பாடு பிறிதொரு பிரபல பொறியியற் கல்லூரியில் சேர்ந்து, மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்டம்  பெற்று வெளிவந்தது சற்றே ஆறுதல் தந்த விஷயம்.

இரண்டாம் தடவை – என் மகள் பத்தாம் வகுப்பு முடித்து ஜூனியர் கல்லூரியில் சேர்ந்த நேரம். கடின உழைப்பும், ஆர்வமும், சாதிக்க வேண்டுமென ஒரு வெறியும் ஒருங்கே இணைந்து மகளிடம் காணக் கிடைப்பினும், மதிப்பெண்கள் பெறுவதில் உச்ச நிலையில் அவள் இல்லை.

ஏட்டு சுரைக்காய் அறிவு குறைவாக இருந்தாலும் சமயோசிதம் நிறைவாகவே இருந்தது அவளிடம். எவ்விதமான படிப்பு என்பதை தீர்மானிக்கும் காலம் நெருங்கியதும் அவளை humanities படிப்பை தேர்ந்தெடுக்கத் தூண்டினேன். அவளோ,உயிரியல் படிப்பில் ஆர்வம் இருப்பதாக சொன்னாள். ஒரு புதிய கடினமான பயணம் துவங்கியது : கல்லூரி,தனிப்பட்ட டியூஷன் வகுப்புகள்,தபாலில் வரும் கோச்சிங் பாடங்கள் என சிக்கலான திட்டம் உருவாகியது. ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்து விட வேண்டும் எனும் கனா உருவாகி விட்டது. அந்தப் பயணம் அத்தனை சுலபமாக இல்லை.

புதிய நெருக்கடிகள், குறைவான மதிப்பெண்கள், நாளும் குரல் உயர்த்தி போடவைத்த சண்டைகள், மகளின் ஒருமுகப் படுத்த இயலாத கவனக் குறைபாடுகள் ,அதற்குத் தீனி போட, எண்ணற்ற கவனம் குலைக்கும் தினப்படி விஷயங்கள்,எந்த ஆர்வமும் முன்முயற்சியும் இல்லா நண்பர்கள் கூட்டம் – பல நாட்கள் மௌனம் அனுசரித்த மகளின் எதிர்ப்பு .

எல்லாவற்றையும் சமாளிக்க முடியாமல் விடுப்பு எடுத்து வீட்டிலே தங்கி அவளுடனே நாளும் பொழுதும் செலவிடும் படி ஆனது. ஒருவழியாக நுழைவுத் தேர்வுகள் முடிந்தபின்,மீண்டும் பணிக்கு செல்லத் துவங்கினேன்.

தேர்வு முடிவுகள் வரத் தொடங்கிய காலம், கம்ப்யூட்டர் திரை முன்னே எங்கள் எல்லோரையும் அமர வைத்தது. ஒவ்வொரு முடிவும் எங்கள் முகத்தில் அறையாத குறையாக வந்து விழுந்த வண்ணம் இருந்தது.எங்கள் கனவு சுக்கு நூறாக உடைந்து வருவதை ஏதும் செய்ய இயலாமல் பார்த்துக் கொண்டே வந்தோம் .

எங்களின் துக்கம்,ஏமாற்றம் பிரபல சுவிஸ் நாட்டு மனவியல் நிபுணர் க்யூபர்-ரோஸ் பிரசுரித்த கண்டுபிடிப்பை நீருபணம் செய்யும் வகையில் அதன் ஐவகை நிலைகளைக் கடந்து வருவதை மௌனமாக தரிசித்தேன். என் கணவர் கோபத்தின் விளிம்பில் எப்போதும் உலவினார் – மகளை கடின உழைப்பு மேற்கொள்ளவில்லை என்று கடிந்து கொண்டார்.தெளிவான சிந்தனை,மிகக் கடினமான உழைப்பு போன்ற நற்பண்புகளால் தன் துறையில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவருக்கு தோல்வி என்பதன் தீவிரம் தாங்கமுடியாத ஒன்றாக மாறிப் போனது. ஏமாற்றத்தையும் கைவிட்டுப் போன ஏக்கமும் – அதை அவரால் ஒளிக்கத் தெரியாமல் திண்டாடினார் .

நானோ மனமொடுங்கிப் போய் , மகள் ஒரு பக்கம்,கணவர் ஒரு பக்கம் என்று திண்டாடிக் கொண்டு நித்தம் கவலைக் கடலில் மூழ்கியே கிடந்தேன். என் அனைத்து முயற்சிகளும் வீணாகப் போனதும், குழந்தை நல விடுப்பு எடுத்தும் பலனில்லாமல் போனதும் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. போதாக்குறைக்கு, என் ஜூனியர் ஒருவரின் குழந்தை வெற்றி பெற்று நல்லதொரு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த விவரம் வேறு என்னை மேலும் சுய நிந்தனைக்கு ஆளாக்கியது. ஒரு மன நோயாளியாக முடங்கிவிடும் ஆபத்திலிருந்து என் தினப்படி மருத்துவமனை வேலைகள் காப்பாற்றியது ; ஒரு நிம்மதியையும் தந்தது.

மெதுவாக சமநிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த காலத்தில் எனது தனி கவனிப்பில் உள்ள ஒரு நோயாளியின் உறவினர் என்னை தனியே சந்திக்கவேண்டுமெனவும், அதற்கென நேரம் ஒதுக்கித் தரும்படியும் கேட்டனர். எனது சிறிய அலுவலக அறைக்கு அவர்களை வருமாறு சொன்னேன். நோயாளி, அவனின் கண் தெரியாத தகப்பனாரைக் கைப்பிடித்து அழைத்து வந்து முன்னே அமர்ந்தான். தகப்பனார் கைக் கூப்பி வணங்கிய வண்ணம், என் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கையோடு ‘நோய் எப்போது குணமாகும் ?’ என்று முதல் வினாவைத் தொடுத்தார். ஒரு கண் பார்வை இல்லாத தகப்பனிடம்,அவரது 23 வயது மகன் – விளையாட்டு வீரன் இன்னும் ஒரு வருடம் உயிர் வாழ்ந்தாலே அதிசயம் என்பதை எவ்வாறு நான் சொல்வேன்?

ஒரு தேசிய விளையாட்டு வீரனிடம் ,அவனது எலும்புகளை  புற்று நோய் அதி தீவிரமாக கறையான் அரிப்பதைப் போல் அழித்துக் கொண்டிருப்பதை எப்படி சொல்லப் போகிறேன் ?

மீண்டும் விளையாட்டு மைதானத்துக்கு எப்போது போவேன் என்று கண்ணில் ஆர்வம் தெறிக்க கேட்பவனை என்ன பதில் சொல்வேன் ?

” மாடம் ! நான் மீண்டும் விளையாடப் போக வேண்டும் ; நிறைய போட்டிகளை இப்போதே தவற விட்டேன்…அடுத்த மாதம் சர்வ தேசப் போட்டி ஒன்று உள்ளது டெல்லியில் …”

” நிச்சயம் மகனே ! நானே வந்து நீ வெல்வதைப் பார்க்கப் போகிறேன். உற்சாகமாக பங்கு கொள் !”

வாழ்க்கையில் முதன் முறையாக நோயாளியிடம் உண்மையை மறைத்து சொல்ல நேர்ந்தது.

அவர்கள் சென்றதும், அடக்க முடியாமல் கண்ணீர் வந்து என் பார்வையை மறைத்தது ; அறைக் கதவை தாழிட்டு கொண்டு மௌனமாக அழுதேன். கரு மேகங்கள் விலகி சூரியனின் ஒளி நிரம்புவதுபோல் ஒரு உண்மை புலப்பட்டது. எனக்கு இரண்டு குழந்தைகள் – திறமைசாலிகள் தாம்; தங்களின் கனவுகளை துரத்திக் கொண்டு ஓடும் ஆரோக்கியமான குழந்தைகள்தாம். என் மகள் சற்றே திருந்தியிருக்கிறாள் .தோல்வி அவளை நிதானப்படுத்தியுள்ளது . புதிய கல்லூரி வாழ்க்கையை ஆவலுடனும் எதிர்பார்ப்புகளுடனும் ஏற்கத் தயாராகி விட்டாள். நான் அவளை எந்த நிலையிலும் வழி நடத்தி செல்ல முடியும் – அவ்வப்போது அவள் முரண்டினாலும். என் குழந்தைகள் நல்ல மனிதர்கள், நேர்மையானவர்கள்,அன்பும் பாசமும் நிறைந்தவர்கள். அவர்களை எந்த எதிர்பார்ப்புமின்றி அன்பையும் பிரியத்தையும் பகிர்ந்து கொள்ள  நான் தயாராகி விட்டேன்.

நான் இன்னமும் விரல்விட்டு எண்ணிக் கொண்டுள்ளேன் – எனக்கு கிடைத்த  வரங்களை.

இந்த கட்டுரை தெஹல்கா இதழில்  ஆகஸ்ட் 3,2013  வந்தது

Representational Image- http://goo.gl/vubAfF

ஆசிரியர் : திருமதி .சுத்மிதா கோஷல், புற்று நோய் மருத்துவர்,சண்டிகர்

தமிழில் – சங்கர் கணபதி