Transgender_docpage

பல கால உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக எம்.பி. திருச்சி சிவா கொண்டு வந்த திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு தனி நபர் மசோதா 24-4-2015 அன்று ஒரு மனதாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக உச்சநீதிமன்றம் அங்கீகரித்து ஒரு வருட காலம் கழித்து இது நடந்தேறியுள்ளது.

இதுகாறும் ஹிஜிராக்களாகவும், கின்னர்களாகவும் கோதிகளாகவும் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கு தேசியளவில் கொள்கை வகுக்க இந்த மசோதா வழிகாணும் என நம்பப்படுகிறது. 46 வருடங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்படும் தனிநபர் மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக மக்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது.

இத்தருணத்தில் முக்கியமான சில கேள்விகள் நம்முன் முளைக்கின்றன. ஹிஜிராக்களும் கின்னர்களும் ஒன்றுதானா? கோதிகள் ஹிஜிராக்களிலிருந்து எவ்வகையில் வேறுபடுகின்றனர்? எந்த பெயர்களெல்லாம் தரக்குறைவானவை? திருநங்கைகளை பற்றி என்ன நாம் அறிந்து வைத்திருக்கிறோம்? மூன்றாம் பாலினத்தைப் பற்றிய அறியாமையால் நாம் அடைந்திருக்கும் குழப்பங்களும் சந்தேகங்களுமே அதிகம். அவற்றை மறைக்கும் முயற்சியில்தான் அவர்களை நாம் இழிவுறுத்துகிறோம்.

அக்குழப்பங்களை களையும்பொருட்டு, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சில தெளிவுகள், இதோ உங்களுக்காக :

அலி: ஆணாகப் பிறந்தவர். பிறப்புறுப்பு அறுக்கப்பட்டவர் அல்லது ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர். இருபாலுக்கும் ஊடாக இருப்பவர்.

ஹிஜிரா: இது பாரசீக வார்த்தை. ஆங்கிலத்தில் அலி என்ற அர்த்தம் தொனிக்கும் வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டாலும் இவர்கள் அனைவரும் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர்கள் என சொல்லமுடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி இவர்கள் உடல் ரீதியாக ஆண்களே. ஆனால் தங்களின் ஆண்மையை நிராகரித்து பெண்களாகவோ, பெண்ணுக்கும் ஆணுக்கும் இடைப்பட்டவர்களாகவோ, இரண்டுமற்றவர்களாகவோ காட்டிக்கொள்ள விரும்புபவர்கள்.

இந்திய ஹிஜிராக்கள் தங்களுக்கென தனிச்சடங்குகள் வைத்துள்ளனர். பிச்சை எடுப்பது, திருமணங்களில் நடனமாடுவது, குழந்தைகளை ஆசிர்வதிப்பது போன்றவற்றை தொழிலாகக் கொண்டுள்ளனர். தங்களுக்கென ஹிஜிரா ஃபார்ஸி என்ற சங்கேத மொழியையும் கொண்டிருக்கிறார்கள். ஹிந்துஸ்தானி மற்றும் பாரசீக மொழிகளிலிருந்து உருவாக்கப்பட்டது.

கின்னர்: வட மாநிலங்களில் ஹிஜிராக்களை குறிக்கும் பெயர். மகாராஷ்டிரா போன்ற இடங்களில், படிப்பறிவு உள்ள ஹிஜிராக்கள் தங்களை கின்னர்கள் எனக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

அரவாணி: தமிழ்நாட்டில் ஹிஜிராக்களைச் சுட்டும் பெயர். இதிகாசத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆணுடல்களில் சிறைப்பட்ட பெண்கள் எனத் தங்களை அடையாளப்படுத்துகின்றனர். எனினும் பெரும்பான்மையான அரவாணிகள், தாங்கள் திருநங்கை என அழைக்கப்படுவதையே விரும்புகின்றனர்.

கோதி: இவர்கள் உயிரியல் ரீதியாக ஆண்களெனினும் பெண்மைத்தன்மை கொண்டிருப்பர். ஓரின உறவுகளில் பெண்களுக்கான பங்கை எடுத்துக்கொள்பவர்கள். பெரும்பாலான கோதிகள் இருபாலினத்துக்கும் ஈர்க்கப்படுவர். சில ஹிஜிராக்கள் கோதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதுண்டு. ஆனால் கோதிகள் ஹிஜிரா என்றோ திருநங்கைகள் என்றோ அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் தனிச் சமூகமாக வாழ்வதில்லை.

சிவசக்திகள்: ஆந்திராவில் திருநங்கைகளை குறிப்பிடும் பெயர். சிவனுக்கு மணமானவர்களாகவும், பிடித்தவர்களாகவும் சிவசக்திகள் கருதப்படுகின்றனர். பெண்மை நிரம்பிய அவர்கள் திருவிழாக்களின்போது பெண்ணுடை தரித்துக்கொள்வார்கள். குறி கூறுதல், சாமியாட்டம், ஆவியோட்டம் போன்றவை அவர்தம் தொழில்கள். சீடர்கள் கொண்டிருக்கும் குரு சாமியார்களால் வழிநடத்தப்படுவர்.

ஜோக்தி ஹிஜிராக்கள்: மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆண்பாலை குறிக்கும் ஜோக்தாக்களும், பெண்பாலை குறிக்கும் ஜோக்திக்களும் கடவுளக்காக கோவில்களில் நேர்ந்துவிடப்பட்டவர்கள். ஜோக்தி ஹிஜிராக்கள் திருநங்கைகளாவர்.

மூலம்- http://scroll.in/article/723011/as-rajya-sabha-passes-transgender-rights-bill-here-is-a-quick-guide-to-third-gender-terminology

Photo credit- Roehan Rengadurai, https://goo.gl/yJaPjq

தமிழில்- ராஜசங்கீதன்