http://www.economistinsights.com/sites/default/files/Want-to-avoid-disruption-620-2.jpg
http://www.economistinsights.com/sites/default/files/Want-to-avoid-disruption-620-2.jpg

 

சில மாதங்களுக்கு முன் சமுதாயத்திலிருந்து நானாகவே என்னை அன்னியப்படுத்தி கொண்டேன். சமூகப் பற்றுகளிலிருந்தும் அதற்கு காரணமாக இருந்த பயத்திலிருந்தும் விடுபட்டேன். அன்றிலிருந்து இந்த உலகம் எனக்கு வேறாக தெரிய ஆரம்பித்துள்ளது.

நம்மை சுற்றி அனைத்துமே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதை நாம் உணராமல் இருக்கிறோம். ஏன் சமுதாயம் மாறிக்கொண்டிருக்கிறது தெரியுமா ? 

காலாவதியான வேலை செய்யும் விதம் 

பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு  காரணமும், நோக்கமும்  இல்லாமல் செய்யப்படும் ஒரே மாதிரியான வேலைகளால் அலுப்பு தட்டிவிட்டது, இதனால் வெறுமையே அதிகரிக்கின்றன. அவற்றின் அழுத்தத்தை தாங்க முடியாமல் அவர்களின் இதயங்கள் திணறுகின்றன. அனைத்திலும் இருந்து தப்பிக்க விரும்புகின்றனர். எத்தனை பேர் ஓய்வுக்கும் இடைவேளைகளுக்கும் ஏங்குகிறார்கள் தெரியுமா?

தொழில் முனையும் முறைகள் 

சில ஆண்டுகளுக்குமுன் சிறுதொழில்கள் புற்றீசலாய் கிளம்பின. கோடிகள் சம்பாதிக்கும் புதுப்புது யோசனைகள் தேடி அனைவரும் அலைந்தனர். முதலீட்டாளர்கள் கிடைப்பதுதான் கஷ்டமாக இருந்தது. கிடைத்துவிட்டால் உலகக்கோப்பை வென்றது போலத்தான்.

ஆனால் அதற்குப்பின்?

நீங்கள் மறுபடியும் ஒரு அன்றாட பணியாளராக மாறுகிறீர்கள். வருவாயும் லாபமும்தான் முக்கிய உந்துசக்திகள். இதுதான் பிரச்சினை. பணம் ஈட்டுதல் என்பதற்கு முடிவு இருப்பதில்லை. சிறந்த தொழில்களும் வீழ்ந்துபோவது இந்த பணம் ஈட்டுதல் என்ற தொழில் வடிவத்தால்தான்.

நமக்கு தேவை தொழில் முனையும் உத்திகள், சிலர் அதற்கான வேலைகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இணையத்தை ஒருவழியாக புரிய ஆரம்பித்திருக்கிறோம்

இணையத்தின்  வல்லமையை இப்போதுதான், பல ஆண்டுகளுக்கு பின், புரியத் தொடங்கியிருக்கிறோம்.  நீங்கள் விரும்பும் எதையும் அறிந்துகொள்ளலாம். யாரையும் தொடர்புகொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் விரும்பும் எதையும் தேடி கண்டடையலாம்.

தொலைக்காட்சிகள் இல்லை. மக்களை பொருட்படுத்தாத செய்தித்தாள்கள் இன்று இல்லை. குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்கும் பொதுஊடகமாக இணையம் ஆகிவிட்டது. பெயரற்றவர்கள்கூட அறியப்படுகிறார்கள். உலகம் ஒன்றிணைகிறது. அமைப்புகள் வீழ்கின்றன

அதிக நுகர்வால் ஏற்படும் வீழ்ச்சி

பல ஆண்டுகளாக, பித்துபிடித்தவர்கள்போல கண்டதையெல்லாம் நுகர்ந்து அலைந்தோம். சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் எதையும் எல்லாவற்றையும் வாங்கினோம். புது கார், புது ஐஃபோன், நிறைய உடைகள், நிறைய ஷூக்கள், நிறைய, நிறைய என நிறைய.

ஆனால் பெரும்பான்மையான மக்கள் இந்த முட்டாள்தனத்தை தற்போது உணரத் தொடங்கி விட்டனர். நிதானமான வாழ்க்கைமுறையை அறிவுறுத்தும் பல இயக்கங்கள் நாம் மிகக்கேவலமான முறையில் வாழ்ந்து வந்திருக்கிறோம் என்பதை அடையாளம் காட்ட வந்துவிட்டன.

ஆரோக்கியமான இயற்கை உணவுமுறை

நல்ல ருசி இருந்தால் மட்டும் நமக்கு போதும். எந்த குப்பையையும் சாப்பிடுகிறோம். நம் அக்கறையின்மையால் உணவுகளில் விஷம் கலக்கப்படுவதை காணத் தவறி விட்டோம். இப்போது சிலர் நம்மை விழிப்புற செய்திருக்கின்றனர். ஆரோக்கியமான மற்றும் இயற்கை உணவு முறைகளை அறிவுறுத்தி, இயக்கங்கள் கட்டி பிரசாரம் செய்கின்றனர். இந்த போக்கு இன்னும் பெரிதாகும்.

உணவு உற்பத்திதான் சமூகத்தின் அடிப்படை. நம் புரிதல் மாறுகையில், உணவுமுறைகளும் மாறும். முறைகள் மாறுகையில் பெருநிறுவனங்களும் அவற்றை ஆதரித்து முன்னிறுத்த வேண்டிவரும்.

விவசாயி திரும்ப வலிமை பெற ஆரம்பித்திருக்கிறான். மக்களும் அவர்களின் சொந்த உணவை விளைவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

வகுப்பறையற்ற கற்றல் முறை

இந்த கற்றல்முறையை யார் உருவாக்கியது? நீங்கள் கற்க வேண்டிய வகுப்புகளை யார் தேர்ந்தெடுத்தது? கற்றதை நிரூபிக்க ஏன் தேர்வெழுத வேண்டும்? மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மட்டுமே கல்வியாகுமா? குழந்தைகள் கேள்விகள் கேட்பதை ஏன் இந்த கல்வி ஊக்குவிக்க மறுக்கிறது?

ஆனால் அதை மாற்ற பலர் முயன்று வருகின்றனர். வகுப்பறையற்ற கற்றல் முறையை ஏற்படுத்தியுள்ளனர்.

நீங்கள் இவற்றை கவனிக்க தவறியிருக்கலாம். இங்கு நான் சொன்னவை உங்களை அதிர்ச்சியடையக்கூட வைத்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் நம்மை சுற்றி நடந்துகொண்டிருக்கின்றன. அமைதியாக மக்கள் விழிக்க தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பில் இன்னும் வாழ்வது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்பதை உணர ஆரம்பித்துவிட்டனர். 

ஆம், நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி நாம் நடந்துகொண்டிருக்கிறோம். ஆனால் நம்மை அங்கு கொண்டு செல்வது அரசாங்கங்கள் அல்ல. சில தனி நபர்கள்!  


Gustavo Tanaka —  பிரேசில் எழுத்தாளர், தொழில் முனைவர்.

தமிழில்- ராஜசங்கீதன்