Dive-IN-River_docpage

 

‘பணத்தை செலவழிப்பதால் கொள்ளும் மகிழ்ச்சி என்பது குறுகிய கால நிகழ்வே ; நிலைத்து நிற்கும் மகிழ்வு – பெறும் அனுபவங்களால் மட்டுமே’

நமது தொன்மையான இலக்கியங்கள் ,நன்னூல்கள் பகர்ந்த கருத்தொன்றை இன்றைய விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சி நீரூபணம் செய்துள்ளது . தாமஸ் கிலோவிச் மற்றும் அமித் குமார் பதிப்பித்துள்ள ஆராய்ச்சி கட்டுரை ஒன்று சோதனை சமூக உளவியல் (Experimental Social Psychology) என்னும் உயர் ஆராய்ச்சி இதழில் இது வெளிவந்துள்ளது.

பொருளாதார நிபுணர்கள் பலரும் கருதுவது – தனி மனித மகிழ்ச்சி  என்பது ஒரு சமூகத்தின் ஆரோக்கியமான அடையாளம். அதாவது செல்வம் நிறைந்த சமூகம், மகிழ்வான, பிரச்சனைகள் குறைவாக உள்ள சமூகம். நமது அடிப்படை தேவைகள் பூர்த்தி ஆகுமளவுக்கு பணம் சம்பாதித்தால் நாம் மகிழ்வாக இருக்கிறோம். அதற்கு மேல் எத்தனை செலவழித்தாலும் பெறும் இன்பம் அத்தனை நிறைவாக இருப்பதில்லை. சம்பாதிப்பு என்பது பெரும்பாலோருக்கு வரையறை உள்ள அம்சம் – கிடைக்கும் பணத்தை எவ்வண்ணம் கையாளுகிறோம், எதற்கு முன்னுரிமை கொடுத்து செலவழிக்கிறோம் என்று  முடிவெடுப்பது கடினமான செயல்தான் .

செலவழிப்பது என்பது இரு முக்கிய வகைகளில் அடங்கும் : 1. பொருட்கள் வாங்கி அனுபவித்தல், 2. அனுபவம் சார்ந்த செலவீனம்

வாங்கி அடுக்கும் பொருட்கள் நீண்ட காலம் இருப்பதால் அதுவே உயர்வான மகிழ்ச்சி தரும் என்பது  இயல்பான, தர்க்க ரீதியான கூற்று . இந்த கூற்றை தலைகீழாக நிறுவுகிறது – முனைவர் தாமஸ் கிலோவிச் (Dr. Thomas Gilovich ) செய்த ஆய்வு. இவர் பிரபல கார்னல்(Cornell)  பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணி செய்கிறார். பணம், அதனால் பெறும் மகிழ்ச்சி – இது பற்றிய ஆராய்ச்சியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார் .

” மகிழ்வு உணர்ச்சி என்பதன் பெரும் எதிரி – மிக விரைவில் ஏற்பட்டுவிடும் பழகிய தன்மை . புதிதாக வாங்கும் எந்த பொருளும் , கருவியும் குறைந்த காலமே மகிழ்ச்சியை கொடுக்கிறது . மிக குறுகிய கால இடைவெளியில் அதே பொருளும்,கருவியும் பழைய ஒன்றாக மாறிவிடுகிறது “.( பழகப் பழகப் பாலும் புளிக்கும் ).

இதன் அடுத்த கட்டமாக புதிய மாடல், வசதிகள் கூடிய ஒரு சாதனம் என்று நாம் தாவுகிறோம் .அதுவும் பழமையான ஒன்றாக மாறி போய்விடுகிறது  – நவீன வர்த்தக உத்தியே அதுதான் .புதிது புதிதாக வாங்கத் தூண்டும் உத்தி .

கிலோவிச் சொல்வது என்னவென்றால்  நிறைவான மகிழ்ச்சி என்பது – அனுபவங்கள் சார்ந்தது : கலைப் பொருட்கள் கண்காட்சி, மலையேறும் பயணம், புதிய பயிற்சி ஒன்றை கற்றுக்கொள்ளுதல் போன்றவை .

வாங்கி நுகரும் பொருட்கள் – எத்தனை விரைவில் பழகியத் தன்மை பெற்றுவிடுகின்றன என்பதை கண்டறிய ஒரு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது : ஒரு குழுவில் உள்ள நபர்களிடம் கேள்வி முன் வைக்கப்படுகிறது – நீங்கள் வாங்கும் பொருள் ,நீங்கள் அடைந்த அனுபவங்கள் (செலவழித்து பெற்ற அனுபவங்கள் ) – ஒவ்வொன்றின் மகிழ்வு குறிப்பை குறித்து வைக்கவும் , ஒரு கால இடைவெளிக்குப் பின் அதே பொருட்கள்,அதே அனுபவங்கள் – ஒரு மறு மதிப்பீடு செய்து குறித்து வைக்கவும் .

இதில் கண்ட உண்மையாவது – காலம் செல்ல செல்ல, பொருட்கள் மீதான நிறைவு குறைவதும், அனுபவங்கள் மீதான நிறைவு அதிகரிப்பதுவும் வெளிப்படை .

பொருட்கள் – நீண்ட காலம் இருந்து பலன் தரும், ஒரே ஒரு முறை பெறும் அனுபவ நுகர்வு எவ்வாறு அதே அளவு பலன் தரும் ?

கிலோவிச் தரும் பதில் இதுவே : பொருட்கள் என்பது உங்களிடமிருந்து வேறுபட்டு தனியே உள்ளவை ; அனுபவங்கள் உங்களின் உணர்வுகளோடு ஒன்றியவை ; அவற்றை பிரித்துப் பார்க்க இயலாது. ஏனெனில் நாம் அனுபவங்களின் மொத்த கூட்டுத் தொகை !

அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்த பகிர்ந்து கொள்ளுதல், பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுதலை விடவும் பெரிது, நீண்ட காலம் மனதில் நிற்பது. தாய்லாந்து கடற்கரை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் – அந்த நிறைவு, அதே நண்பர்கள் உங்களைப் போலவே 42 இஞ்ச் எல்.இ.டி டிவியை வாங்கி மாட்டுவதில் இருப்பதில்லை.

பெற்ற அனுபவங்கள் – அதில் ஈடுபட்ட நபர்கள் அல்லாதவரிடமும்  கதைகளாகக் கூறுகிறோம். காலப் போக்கில் அதே கதை புதிய தோரணங்கள், புதிய அம்சங்கள் நிறைந்த ஒன்றாகவே மாறி விடுவதும் இயற்கை. பெறும் அனுபவங்கள் எதிர்மறையாக இருப்பினும், வருத்தமோ,கோபமோ கொள்ளும் வகையில் அமைந்தாலும்  அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போது அதன் தாக்கம் குறையவே செய்கிறது . அது ஒரு வேடிக்கை சம்பவமாகக் கூட கதை கூறலில் உருமாறுகிறது .

kanchenjunga_docpage

அனுபவங்கள் – ஒரே வகையிலான அமைப்பில் ஈடுபட்ட அன்னியர்கள் பகிர்ந்து கொள்ளும்போது உங்களுக்கு நெருங்கியவராக அவர்கள் மாறும் சாத்தியம் அதிகம் .” கஞ்சன்ஜூங்கா மலை சிகரம் காண சிக்கிம் சென்ற உங்கள் பயண அனுபவம்  – அதே பயணம் மேற்கொண்ட அன்னியர் ஒருவருடன் நட்பு பாராட்ட தோன்றுகிறதல்லவா ? மேலும் உங்கள் கதையைக் கேட்கும் பிறிதொரு நபர் – மனதில் குறித்துக் கொள்ள நேரிடும் – நாமும் ஒரு நாள் சிக்கிம் போகவேண்டும் என்று. இதே உணர்வு நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே மாடல் கார் வாங்கி ஓட்டுவதில் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை.

ரியான் ஹோவெல் மற்றும் கிரஹாம் ஹில் என்னும் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் தெரிவிப்பது : பொருட்கள் ஒப்பு நோக்குகையில் (உங்கள் மொபைல் காமிரா எத்தனை பிக்ஸல்? உங்கள் காரில் எத்தனை ஏர்பேக்? காரில் hill-hold வசதி உண்டுமா? ) எளிதாக கட்டமைப்புகள் உள்ளன; ஆனால் அனுபவ ஒப்பீடுகள் அத்தனை எளிதில்லை. எளிதாக ஓப்பீடு செய்ய பொருட்கள் நுகர்வே அமைவதால் மக்கள் அதையே செய்து வருகின்றனர்.

கிலோவிச்சின் ஆய்வு பலன் தரக்கூடிய ஒரு அம்சம் – கார்ப்போரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை எவ்விதம் நிறைவாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறது என்பதில் ஒரு பெரும் மாறுதல் கொண்டுவரக் கடமைப் பட்டுள்ளது. ஊழியர்களுக்கு போனஸ்,விலை உயர்ந்த பரிசுகள், நகைகள் அளிப்பதைக் காட்டிலும் ஒரு விடுமுறை இருப்பிடம், பயணம் போன்ற அனுபவ ரீதியான பரிசுகள் அளிப்பது மிகவும் பலன் தரும். அரசாங்க அமைப்புகள் நிறைய விளையாட்டு மைதானங்கள், கலைக் கூடங்கள் அமைப்பதில் செலவிடும் தொகை  பன்மடங்காக அதிகரிக்க வேண்டும் .

நிறைவாக கிலோவிச் விடுக்கும் செய்தி : “ஒரு சமூகமாக ,அனுபவங்களின் படிப்பினை எளிதில் எல்லோரும் பெறும் வண்ணம் அமைத்தால் எத்தனை சுமுகமான,வளமான காலங்கள் தோன்றும் ?”

மூலம்- http://www.fastcoexist.com/3043858/world-changing-ideas/the-science-of-why-you-should-spend-your-money-on-experiences-not-thing

சங்கர் கணபதி