http://blog.askiitians.com/wp-content/uploads/2014/03/sqsq1.jpg
http://blog.askiitians.com/wp-content/uploads/2014/03/sqsq1.jpg

எனக்கு பத்தொன்பது வயது. சில மாதங்களுக்கு முன்புதான், எனக்கு Social Anxiety Disorder (SAD) என்னும் நோய் இருப்பது தெரிய வந்தது.

இந்த மனநோய் ஓரளவுக்கு அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அதை பற்றிய விழிப்புணர்வு எவருக்கும் இல்லை. இந்நோய் கொண்டவர்கள் அதை நோயாகவே உணர்வதில்லை. ஆதலால் சிகிச்சையும் பெறுவதில்லை.    

சமூக சூழல்களை எதிர்கொள்ளும்போது ஏற்படும் அளவு கடந்த பதற்றம்தான் இந்த நோய்.

பொது இடங்களில் இயங்குகையில் தவறுகள் செய்துவிடுவோமோ, அசிங்கமாகிவிடுமோ, அனைவர் முன்னும் அவமானப்பட்டு விடுவோமோ என கிடந்து பதறுவதுதான் இதன் கூறு. விளைவாக, அச்சமயங்களில் அதிக துயரம் ஆட்கொள்ளும். பெரும்பாலும் நோய்க்குள்ளானவர்கள் அம்மாதிரி சூழல்களை தவிர்த்து விடுகின்றனர்.

எல்லாரையும் போன்ற வழக்கமான பால்ய பருவம்தான் எனக்கும். அன்பான குடும்பம். நல்ல பராமரிப்பு. மிகவும் அமைதியானவன். விழாக்களின்போது ஒரு மூலையில்தான் நிற்பேன். பள்ளியிலும் இப்படித்தான். தெரிந்த கேள்விகளாக இருந்தாலும் பதிலளிக்க மாட்டேன். மற்றவர்முன் என் உணர்வுகளை வெளிப்படுத்த எனக்கு முடிந்ததில்லை.

இப்படி வாழ்வது ரொம்ப கடினம். எல்லாரும் எப்போதும் என்னையே கவனிப்பதாக தோன்றும். மற்றவர்கள் சுலபமாக செய்யும் விஷயங்கள்கூட என்னால் செய்ய முடிந்ததில்லை.

நானாக ஒரு விஷயத்தை பேச ஆரம்பித்ததாக நினைவில்லை. நண்பர்கள் குறைவு. அவர்களிடமும் நெருக்கம் கிடையாது. பேசும்போதே என் குரல் உடையும். கை நடுங்கும்.

முடிவுகள் எடுக்க திணறுவேன். செய்யும் விஷயங்கள் தவறாகிவிடுமோ என அதிகம் கவலைப்படுவேன். சோர்ந்து போகுமளவுக்கு திரும்ப திரும்ப யோசிப்பேன். பொறுப்புகளை தட்டிக்கழிப்பேன்.

மனம் விட்டு நான் பேசக்கூடிய ஆட்கள் என் வாழ்க்கையில் இல்லை. நான் கடுமையானவன் என எல்லாரும் நினைக்கின்றனர். தனிமை விரும்பியாகவும் அவர்களை வெறுப்பவர்களாகவும் நினைக்கப்படுகிறேன். ஆனால் உண்மை அவற்றுக்கு முற்றிலும் மாறுபட்டது.

நண்பர்களுக்காக பெரிதும் ஏங்குபவன். என் பதற்றம் அவர்களிடமிருந்து என்னை விரட்டியடிக்கிறது.

உறவுகளை உருவாக்கிக்கொள்ள என்னை தடுக்கிறது. வலி மிகும் தனிமையில் மீண்டும் மீண்டும் வீழ்கிறேன்.

எனக்கு இருப்பது மனநோய். ஒவ்வொரு நாளும் எனக்குள் நிகழும் நரகத்தை எவரும் உணர்வதில்லை.

உடல் நோயை போன்றே மன நோயும் அணுகப்பட வேண்டும்.

புற்றுநோய் இருப்பவர் அதனால் குற்றவுணர்வு கொள்வதில்லை. பார்வை சிக்கலால் கண்ணாடி தேவைப்படுபவரை இன்னும் நன்றாக பார்த்து பழகுங்கள் என யாரும் சொல்வதில்லை. ஆனால் என் விஷய்த்தில் அப்படியல்ல.

நான் அதிகம் பேசாமல் இருப்பதை பார்த்து என் சுபாவத்தை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றனர். வேண்டுமென்றே நான் செய்வதாக நினைக்கிறார்கள். இதனால்தான் எனக்கு உதவி தேவை என்பதை சொல்லாமல் மறைக்கிறேன். பதற்றமடையும் வேதிப்பொருளை என் மூளை அதிகம் உற்பத்தி செய்கிறது. நான் என்ன செய்வது? இந்த நோயை தேடி நான் போகவில்லை. அதுவாக என்னை தேடி வந்துவிட்டது.

இப்போது காலம் மாறியுள்ளது. நல்ல வேளையாக இந்த நோயை புரிந்து கொள்கிறார்கள். மருந்துகள் மற்றும் Cognitive Behavioural Therapy (CBT) மூலம் சிகிச்சை அளிக்கிறார்கள்.   

SAD மற்றும் பிற மனநோய்கள் கொண்டவருக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது இதைத்தான்.

நீங்கள் தனியாக இல்லை. உதவி பெறுங்கள். ஏனெனில், வலியற்ற முழுமையான வாழ்க்கை வாழ உங்களுக்கும் உரிமை இருக்கிறது.     

மூலம்- tp://www.youthkiawaaz.com/2015/08/social-anxiety-disorder/

தமிழில்- ராஜசங்கீதன்