Image #: 120110 Indian school girls look at plastic models of a man and a woman at 'Antarang' (inner view), India's first ever sex musuem, in Bombay February 3, 2003. Children from various schools in the city are being taken in turn to the musuem for sex education. REUTERS/Arko Datta /Landov
http://america.aljazeera.com/content/dam/ajam/images/articles_2014/08/sex_education_india_a.jpg

“டீச்சர், 144ம் பக்கத்தில் இருக்கும் படத்தை வரைய வேண்டுமா டீச்சர்?” என்று மாணவன் கேட்டதும் மொத்த வகுப்பறையும் சிரித்து விழுந்தது. அது பெண்ணின் பிறப்புறுப்பு படம்.

தெளிவாகக்கூட இல்லை. ஆனால், பிறப்புறுப்புதான் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கவில்லை. டீச்சரோ எதுவும் பதிலளிக்காமல் நகர்ந்துவிட்டார். வேறு வழி? அப்போதெல்லாம் ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் நுழைவதால்தான் இனப்பெருக்கம் நிகழ்கிறது என யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அது ஏழாம் வகுப்பு காலம்.  

9ம் வகுப்பில் ஒரு அசம்பாவிதம் நேர்ந்தது. நண்பன் ஒருவன் என் உதடுகளில் முத்தம் கொடுத்துவிட்டான். ஓரினச்சேர்க்கை பற்றி நாங்கள் அறிந்திராத காலம். ஒன்றிரண்டு மாணவர்களுக்கு தெரிந்திருக்கக்கூடும். நாங்கள் அப்போதுதான் சுயஇன்பம், ஆபாசப் புத்தகங்கள், படங்கள் என தேறிக்கொண்டிருந்தோம். ஒருமுறை வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனிடம், ஆணுறுப்பை பெண்ணுறுப்புக்குள் விடுவதால்தான் குழந்தை பிறக்கிறது என சொல்லப்பட்டது. அவன் துளியும் நம்பவில்லை.

வகுப்பில் படித்த சில பெண்கள் உடல் ரீதியாக அடையும் மாற்றங்களை கண்டு நாங்கள் குழம்பினோம். ஏதோ ஒன்று மறைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த சமூகமும் எங்களுக்கு எதிராக செயல்படுவதாக ஒரு எண்ணம். சீக்கிரம் பூப்படைந்த பெண்கள் நாங்கள் அறிந்திருந்ததைவிட நிறைய தெரிந்திருந்தார்கள் (குறைந்தபட்சம் மாதவிடாயை பற்றியாவது அவர்களுக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும், இல்லையா?). ஆனால் எவருக்கும் முழுமையாக தெரியவில்லை. குழம்பியதுதான் மிச்சம்.

பதினொன்றாம் வகுப்பு. பாலுறவு கொள்வதை பற்றி சிந்திக்க ஆரம்பித்தோம்.

எப்படி பாலுறவை பெறுவது என்பதுதான் சிந்தனை. அதில் பங்குபெற வேண்டும், அதற்கு மற்றொருவரும் வேண்டும் என்பதெல்லாம் தோன்றவே இல்லை. கொஞ்ச நாட்களுக்கு பிறகுதான், பெண்களுக்கும் அந்த விருப்பம் இருப்பதை தெரிந்துகொண்டோம். போலவே ஓரினச்சேர்க்கை பற்றியும் தெரிந்தது. அது அசிங்கம் என்றளவுக்கு புரிந்திருந்தோம். மொத்தத்தில், எல்லாரும் எதிர்பாலினத்திடம் ஆர்வம் கொண்டவர்கள்; பாலுறவு கொள்ள பெருவிருப்பம் கொண்டவர்கள்; ஆனால் பாலுறவு மட்டும் யாரும் கொள்ளவில்லை என்றளவுக்குதான் எங்கள் ஞானம் அன்றிருந்தது.

மெல்ல மெல்லதான் விளையாட்டு புரிந்தது. பாலுறவுக்கான சமிக்ஞைகள் நுட்பமாக பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பதை கண்டுகொண்டேன்.

எனக்கு பிடித்த பெண்ணிடம் என் விருப்பத்தை இந்த பாணியில்தான் தெரிவிக்க வேண்டுமென உணர்ந்தேன். நல்லவேளையாக என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். ஆபாசப்படத்தை மட்டும் வழிகாட்டியாக வைத்துக்கொண்டுதான், ஒரு பெண்ணின் உடலையும் என் உடலையும் கொண்டு என்ன செய்யலாம் என கற்றறிந்தோம். படத்தில் காட்டப்பட்டிருந்த அத்தனையும் சாத்தியமல்ல என்பது வேறு விஷயம்.

ஆபாசப்படங்களில் காட்டப்படும் உறவுக்கும் உண்மையில் நிகழ்வதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. அதன் மர்மங்களை விலக்குவதற்கு யாரும் கிடையாது.

சில சந்தேகங்களுக்கு என் முதல் உறவில் பதில்கள் கிடைத்தன. பல சந்தேகங்கள் காலப்போக்கில்தான் தெளிந்தன. உதாரணமாக, பெண்ணின் மாதவிடாய் காலத்திலும் அவள் உறவு கொள்ளலாம் போன்றவை. மட்டுமல்லாமல், பாலின விருப்பங்கள் (Sexual Orientations) பற்றி எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படவில்லை.

ஆணுறையும், நோய் வராமல் தடுக்கும் என்பதாகத்தான் கற்றுக்கொடுக்கப்பட்டதே தவிர, கருத்தடை சாதனம் என்பதாக அல்ல.

கருத்தடை மாத்திரைகள், கருக்கலைப்பு பற்றியெல்லாம் சுத்தம். அப்போதே அவை பற்றி தெரிந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும் என உணர்கிறேன். அப்போது கொடுக்கப்பட்ட கொஞ்ச நஞ்ச பாலியல் கல்வியும் முழுக்க முழுக்க ஆணின் கண்ணோட்டத்தில் இருந்ததால், அதிலும் பெரிய பலன் இருக்கவில்லை.  

நடந்தது நடந்துவிட்டது. இனியும் நான் நிறைய அறிந்துகொள்ளலாம். ஓரினச்சேர்க்கையாளர்களும் திருநங்கைகளும் ஒன்று என எண்ணிய காலத்திலிருந்து கண்டிப்பாக வெகுதூரம் வந்திருக்கிறேன். நிறைய தெரிந்திருக்கிறேன். ஏனெனில் அந்த காலம் அப்படி. பாலுறவை அறிவதற்காகவாவது நீங்கள் கல்யாணம் பண்ண வேண்டுமென்ற சூழல். இன்றைய பள்ளி பிள்ளைகளுக்கு பாலுறவு பற்றி அறிந்துகொள்ளும் சிரமங்கள் இல்லாமல் ஆக்குவோம். 

மூலம்- http://www.youthkiawaaz.com/2015/09/sex-and-sexuality-education-in-school/

தமிழில்- ராஜசங்கீதன்