sex edu_doc

இந்தியாவில் நகரங்களுக்கெல்லாம் நகரமெனக் கருதப்படும் தில்லியில் தான் நான் வளர்ந்தேன். பூர்வீகம் ஆந்திராவாக இருந்தாலும் தந்தையின் பணி நிமித்தமாக 17 வருடங்களாக தில்லியில் இருந்தோம். கடற்படையினரின் குழந்தைகள் பலருடன் என் பள்ளிப்படிப்பை இங்கு தான் முடித்தேன். எல்லாவற்றையும் கற்றுவிட்டதாகத் தான் நினைத்திருந்தேன். அது தவறு என்பது பின்னர் தான் புரிந்தது.

பதினான்கு வயது வரை பாலுறவு (Sex), செக்ஸ் என்கிற வார்த்தை இருப்பதே தெரியாது. அது சார்ந்த புரிதலும் கிடையாது. பதினாறு வயது வாக்கில்தான் ஓரிரண்டு தடவை அந்த வார்த்தையை மற்றவர் சொல்லக்கேட்டிருக்கிறேன். நான் சொல்ல முயலும் போதெல்லாம் நண்பர்களால் அது தவறு என்று அடக்கப்பட்டேன். உயிரியல் வகுப்பில் அந்தப் பாடம் நடத்தப்பட்ட அன்று இனப்பெருக்க பாகங்களை பற்றி அறிந்து கொண்டேன். பாலுறுப்புகளை பற்றி ஆசிரியர் அருவருப்பான தொனியில் விளக்கிய போது என்னையறியாமல் கூச்சம் ஆட்கொண்டது. 18 வயதின் போதுதான், பாலுறவு என்றால் என்ன, அது எப்படி நிகழ்கிறது, யார் யாருக்கிடையில் நிகழ்கிறது என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன். அதுவும் நண்பர்கள் மூலமாகவோ, ஆசிரியர்கள் மூலமாகவோ அல்ல. செய்தித்தாளில் வந்திருந்த ஒரு செய்தியிலிருந்துதான். பெற்றோர்கள் மூலமாக தெரிந்துக் கொள்வது நினைத்துப்பார்க்கவே முடியாத காரியம்.

அதிலும் முத்தக்காட்சியோ அல்லது நெருக்கமான காட்சியோ தொலைக்காட்சியில் வந்துவிட்டால் போதும். வேறுபுறம் திரும்ப சொல்லும் அம்மாவின் கண்டிப்பான குரலையோ, அக்காட்சிகளைத் தவிர்க்க சம்பந்தமில்லாத பேச்சை ஆரம்பிக்கும் அப்பாவையோ, கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்த என்னையோ என் சகோதரனையோ மறக்கவே முடியாது. இது போன்றத் தருணங்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள். பாலுறவு சார்ந்த வார்த்தைகளை சொல்லக்கூடாதென எத்தனை தடவை அறிவுறுத்தப்பட்டிருப்பீர்கள்? பாலுறவு என்பது என்ன என்று யாராவது உங்களுக்கு விளக்கியுள்ளார்களா? எனக்கு யாரும் விளக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக செய்தித்தாள்களும் புத்தகங்களும் ஆபாசப்படங்களும்தான் எனக்கு உதவின.

பாலுறவு நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் இருக்கிறது. நீங்களும், நானும் பாலுறவால் தான் பிறந்தோம். இருந்தும் நம்நாட்டில் அதை பெருங்குற்றம் போல் நடத்துகிறார்கள். எவரும் அதைப்பற்றி வெளிப்படையாக பேசத் தயாராக இல்லை. உண்மையில் பாலுறவை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஒரு குற்றவாளியைப் போல் கழுதை மேலேற்றி நம்மைச் சுற்றி வரவைத்திருக்கிறார்கள். ஆனால் கற்பனை செய்து பாருங்கள். பாலுறவு என்பது இரண்டு பேருக்கிடையில் நடக்கும் ஒரு இயல்பான நிகழ்வு என உங்கள் பெற்றோர் உங்களிடம் அமர்ந்து விளக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? நான் கூச்சத்தில் முகத்தைக் கவிழ்த்திருப்பேன். ஆனால் பிற்காலத்தில் அந்தச் சரியான விளக்கத்துக்காக என் பெற்றோருக்கு நன்றி கூறியிருப்பேன்.

பாலுறவு என்பது வெறும் குழந்தைப்பிறப்புக்கு மட்டும் தான் என முதலில் நினைத்திருந்தேன். பின்னர்தான் எனது அறியாமையை உணர்ந்தேன். இந்தியாவில் பாலுறவு பற்றி அதிகம் பேசப்பட வேண்டும். நவீனமயமாக்கல் தீவிரமடைந்து வரும் இந்தக் காலத்தில் குழந்தைகள் கண்டிப்பாக ஏதோ ஒரு வழியில் பாலுறவை பற்றி அறிந்து கொள்வர் என்கிற உண்மையை பெற்றோர்கள் உணர வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களே குழந்தையிடம் விளக்கிவிடுவது சிறந்ததல்லவா? உங்கள் குழந்தைகள் பொறுப்பாக நடந்து கொள்ள விரும்பினால், அதற்குத் தேவையான அனைத்துத் தகவலையும் அவர்களுக்குக் கொடுங்கள். அவர்களின் பொறுப்பை உணர்ந்து கொள்வார்கள். பெற்றொர்கள் பாலுறவைப் பற்றி விளக்கும்போதுதான் அது ஏற்படுத்தும் விளைவுகளைச் சரியாக குழந்தைகள் புரிந்து கொள்ள முடியும். ஆபாசப்படங்களின் மூலம் இளைஞர்கள் அறிந்துகொள்வது சரியான அறிவை அளிக்காது. ஆபாசப்படங்கள் வக்கிரமானவை. பெண்கள் மீதான ஆதிக்கத்தையும் வன்முறையையும் காட்டும் அவைதான் பல வகையான மன மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணம். அவைப் பாலுறவின் பற்றியச் சரியான உண்மைகளை உரைக்காது. அதிலும் அதன் உண்மையான மதிப்பைக் கற்றுக்கொடுக்காது. பாலுறவு என்பது மிகவும் முக்கியமான உறவு. அது சரியாக புரிந்து கொள்ளப்படாமல் நிகழ்த்தப்படுகையில், அதில் பங்குபெறும் இருவருக்கும் மிகப்பெரும் பிரச்சினைகளை, உறவுச்சிக்கல்களை ஏற்படுத்தவல்லது.

பாலுறவை பற்றிய விழிப்புணர்ச்சி மிகுந்தகாலத்தில் நாம் வாழ்கிறோம். பாலியல் பற்றியும் அதன் பல்வேறு புதுவகையான சாத்தியங்களை பற்றியும் புத்தகங்கள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. வயது குறைந்தோரின் பாலியல் வாழ்க்கை, பாலுறவு நண்பர்கள் என்று எல்லவற்றையும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டோம். ஆணாதிக்கச் சமூகத்தில் இருந்து விலகி, கடுமையான வாழ்க்கைப்போராட்டத்தில் பெண்களையும் பங்குபெற அனுமதிக்கிறோம்; அதை மதிக்கவும் செய்கிறோம். இந்தச்சமயத்தில் நம் கலாச்சாரத்தில் ஆண்-பெண் புணர்ச்சி பற்றி கொண்டுள்ள வேண்டத்தகாத கற்பிதங்களை நிராகரிக்கவேண்டும். பாலுறவு நம் வாழ்க்கையில் இருக்கிறது: போலவே அடுத்தவர்கள் வாழ்விலும் இருக்கிறது, வருங்காலத்தில் நம் பிள்ளைகள் வாழ்விலும் இருக்கப் போகிறது. இதைப்பற்றியச் சரியான புரிதல் நம் பிள்ளைகளுக்கு ஏற்பட தேவையான எல்லாத் தகவலையும் நாம் கொடுப்போம்.

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. பாலியல் விழிப்புணர்ச்சி என்பது இயல்பானதொரு விஷயமாக இந்தியாவில் மாற வேண்டும். ஆண்-பெண் உறவைப் பற்றி அறிந்து கொள்ள ஆபாச படங்களை குழந்தைகள் தேடிச்செல்லாத காலமாக அது இருக்கும். பாலியல்கல்வி என்பது பாலுறவைப் பற்றி மட்டும் பேசப் போவதில்லை. அதன் சாதக பாதகங்களை முழுமையாக அது கற்றுக்கொடுக்கும். அதே மாதிரியான பொறுப்பு பெற்றொர்களுக்கும் உண்டு. உடலுறுப்புகளை பற்றியும் நல்ல-தொடுதல் கெட்ட-தொடுதலையும்,எந்த உறுப்புகளெல்லாம் தொடப்படக்கூடாதவை என்பதையும் கெட்ட தொடுதலை எப்படி எதிர்கொள்ளவேண்டுமென்பதையும் தவறான நடத்தை என்ன என்பதையும் விரும்பாதவற்றைச் செய்ய யாராலும் கட்டாயப்படுத்தமுடியாது என்பதையும் குழந்தைகளுக்கு அவர்கள் தான் கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே சொல்லிக்கொடுப்பதன் மூலம் அவர்கள் விழிப்புணர்வுடன் வளரலாம்.

பாலுறவு என்பது வெறும் செய்கை அல்ல. மிக முக்கியமான, அந்தரங்கமான தருணத்தை பகிர்ந்து கொள்வதும் அதற்கான இருவரின் சம்மதமும்தான் அது. நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு பாலுறவு என்பது மிகச்சாதாரணமான, அன்றாடம் எழுந்து பல் விளக்குவது போன்றதொரு நிகழ்வுதான் என்பதை புரிய வைக்கவேண்டும். நாம் அதற்கு மாறான கருத்தால் தான் போதிக்கப்பட்டிருக்கிறோம். ஒரு பழக்கத்தை மாற்றுவது கடினம் என்றாலும் கண்டிப்பாக சாத்தியம் தான். மனநிலையை மாற்றுவது நம் நாட்டில் பல நூற்றாண்டுகளை எடுத்திருக்கிறது. அந்த மாற்றத்தை நாம் வீட்டிலிருந்து தொடங்குவோம்.

மூலம்- http://www.youthkiawaaz.com/2014/07/accept-kids-will-soon-learn-sex-isnt-better-comes-first/

படம் – http://indiatogether.org/uploads/picture/image/483/edu-notaboo.jpg

ஆசிரியர்-  வேதா நாதேன்லா

தமிழில் – ராஜசங்கீதன்