http://seratalternativa.altervista.org/blog/wp-content/uploads/2015/06/4Q6D4374_B.jpg
http://seratalternativa.altervista.org/blog/wp-content/uploads/2015/06/4Q6D4374_B.jpg

ஃபோட்டோ லண்டன் (Photo london)’ நிகழ்வில் செபாஸ்டியோ சல்கடோவின் (Sebastião Salgado) உரையை கேட்க நேர்ந்தது. 71 வயது போட்டோகிராஃபரான செபாஸ்டியோவின் வாழ்வு, படைப்பை குறித்து லியோ ஜான்சன் (Leo Johnson) பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மாணவர்களின் கேள்விகளுக்கு செபாஸ்டியோ பதிலளித்தார். ஒளிப்பதிவில் பணியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு அவர் வழங்கும் அறிவுரை என்ன என்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு செபாஸ்டியோ:

“நீங்கள் இளைஞராக இருந்தால், இன்னும் காலம் இருந்தால், போய் படியுங்கள். மானுடவியல், சமூகவியல், பொருளாதாரம், புவிசார் அரசியல் எனப் படியுங்கள். அப்போதுதான் நீங்கள் படமெடுப்பவற்றை சார்ந்த அரசியல், தேவை என்ன எனப் புரிந்துகொள்ள முடியும்” என்றார்.

இந்த பதில் மிக முக்கியமானது. ஏனெனில் இப்படியான கேள்விக்கு வழக்கமாக கொடுக்கப்படும் பதில்கள் என்ன தெரியுமா? “செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லுங்கள். படங்கள் எடுங்கள்”, “ஒளிப்பதிவின் நிபுணத்துவத்தை கற்றுக்கொள்ளுங்கள்”, “பயிற்சி, பயிற்சி, பயிற்சி. பயிற்சிதான் முக்கியம்” போன்றவைதான். இதுவரை எவரும் போய் பொருளாதாரம் படியுங்கள் என்று சொன்னதில்லை. ஆனால் செபாஸ்டியோ சொல்கிறார். ஏன்?

செபாஸ்டியோவின் வாழ்க்கையே சிறந்த பதிலைக் கொடுக்கும். பிரேசிலில் 7 -மகள்களை கொண்ட ஒரு விவசாயிக்கு பிறந்தவர் சல்கடோ. நாட்டில் இருந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடினார். பொருளாதாரம் படித்தார். பாரிஸுக்கு புலம்பெயர்ந்தார். அங்கு ஒரு சர்வதேச காபி நிறுவனத்தில் பணிபுரிந்தார். வேலை நிமித்தமாக அடிக்கடி ஆப்பிரிக்காவுக்கும் சென்று வந்தார்.

20 வயதுகளின் பிற்பகுதியில்தான் கேமரா வாங்கினார். வேலையை விட்டுவிட்டு உலகம் சுற்ற ஆரம்பித்தார். பாரிஸில் இருந்த குடும்பத்தைவிட்டு 4-5 மாதங்கள் தொலைதூரங்களில் தங்கியிருப்பார். கேமரா வழி சொல்ல முடிந்த கதைகளுக்கென தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். தான் ஓர் ஆவணப்பட ஒளிப்பதிவாளர் என்றோ புகைப்பட பத்திரிகையாளர் என்றோ அழைக்கப்படுவதை சல்கடோ விரும்பியதில்லை. அவரைப் பொறுத்தவரை ஒளிப்பதிவுதான் அவர் வாழ்க்கை. அவர் வாழ்க்கையே அதற்கு சான்றும் கூறுகிறது.

http://www.polkagalerie.com/docs/artistes/Sebastiao-Salgado/Les-mains-de-lhomme/Sebastiao-Salgado-Les-mains-de-lhomme-Mines-de-Charbon-de-Dhanbad-2.jpg
http://www.polkagalerie.com/docs/artistes/Sebastiao-Salgado/Les-mains-de-lhomme/Sebastiao-Salgado-Les-mains-de-lhomme-Mines-de-Charbon-de-Dhanbad-2.jpg
http://www.polkagalerie.com/docs/artistes/Sebastiao-Salgado/Exodes/Sebastiao_Salgado_EXODES_Church_Gate_station_Mumbai_India_1995.jpg
http://www.polkagalerie.com/docs/artistes/Sebastiao-Salgado/Exodes/Sebastiao_Salgado_EXODES_Church_Gate_station_Mumbai_India_1995.jpg

சல்கடோ எடுத்த ஆரம்பகால புகைப்படங்களை பார்த்தாலே சமூகநீதியின்பால் அவர் கொண்டிருந்த பற்று தெரியும். அவர் எடுத்த படங்கள் அவரின் நம்பிக்கையை எடுத்துக்கூறும். அவர் எதை செய்கிறோம் என்பதில் தெளிவாக இருந்ததால் அவர் எடுத்த புகைப்படங்கள் வலிமையாக அமைந்தன. சமூக அநீதி நிகழும் இடத்தில் அவர் வெறும் பார்வையாளராக  இருந்திருந்தால் சுற்றுலா புகைப்படைகாரராகத் தான் இருந்திருக்க முடியும். நடக்கும் அவலங்களை முழுமையாக புகைப்படங்களில் காட்டியிருக்க முடியாது.

புகைப்படக் கலைஞர்களாக விரும்புபவர்களுக்கு என்ன தேவை?

எதைக் காட்ட வேண்டும் எனப் புரிந்துகொள்ளுங்கள். உங்களின் புகைப்படம் என்ன விளைவை ஏற்படுத்த முடியுமென புரிந்துகொள்ளுங்கள். உலகத்தை அசைத்துப் பார்க்க எதனால் முடியுமென்பதை கண்டறியுங்கள். கேமராவை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு சராசரி நபரைப் போல் சிந்திக்காதீர்கள்.

சல்கடோவில் பேச்சில் நெகிழ வைத்த தருணங்களும் இருந்தன. குடும்பத்தைவிட்டு தள்ளியிருந்தது எவ்வளவு கடினமாக இருந்ததென நினைவுகூர்ந்தார். அவர் மனைவி லெலியாவும் மகனும் பாரிஸில் இருக்கையில் பல மாதங்களுக்கு பிரேசில் மலைகளில் ஒற்றையாளாக அலைந்திருக்கிறார். ஒரு ஞாயிறன்று மலையேறி முடித்ததும் வெடித்து அழுதிருக்கிறார். சூழ்நிலையை அவரால் மாற்ற முடியவில்லை. பல வார காலப் பயணம். கையில் காசில்லை, ஆனால் அவர் வேலையை முடிக்க வேண்டும்.

அந்த அர்ப்பணிப்புதான் அவரின் அடையாளம். புகைப்படங்கள் எடுக்கும் கருவிகளும் புகைப்படங்களும் பெருகிவிட்ட காலத்தில் இந்த அர்ப்பணிப்பு உணர்வைத்தான் நாம் மறந்துவிட்டோம். ஆம், நாம் அனைவரும் இன்று புகைப்படக் கலைஞர்கள்தான். ஆனால், சொல்ல வேண்டியப் பிரச்சினைகளை சொல்வது சிலர்தான்.

மூலம்- http://blog.eyeem.com/2015/06/sebastiao-salgados-advice-for-young-photographers-today/

தமிழில்- ராஜசங்கீதன்