http://tamilculture.com/wp-content/uploads/2013/05/mentalhealthbanner.jpg
http://tamilculture.com/wp-content/uploads/2013/05/mentalhealthbanner.jpg

எனக்கு ஏதேனும் உடல் நலக் குறைவு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

மேலே உள்ள வரியை படிப்பவர்கள் என்னை பைத்தியக்காரியாகவும் நோயற்ற வாழ்வு கொடுத்த இயற்கைக்கு நன்றி கெட்டவளாகவும் நினைக்கக்கூடும். 

17 வயதில் எனக்கு ஸ்கிசோஅஃபக்டிவ் (Schizoaffective) எனப்படும் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) எனப்படும் மனச்சிதைவு நோய்வகையை சேர்ந்தது. பைபோலார் டிசார்டர் (Bipolar Disorder) என சொல்வார்கள். மனநிலை மாறுபாடு நோய். ஒன்பது வருடங்கள் ஓடி விட்டன. குணமடைந்து ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு வந்துவிட்டாலும், இன்னும் ஸ்கிசோஃப்ரினியா பயம் கருமேகமாய் வாழ்க்கையை சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது.

பிரச்சினை ஏற்படுகையில் என்னால் சொல்லவும் முடியாது. மற்றவர்களாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான் சொல்கிறேன். மனநல சிக்கல்களைவிட உடல் சிக்கல்கள் தேவலாம் என; அவற்றை வெளியில் சொன்னாலும் புரிந்துகொள்வார்கள். 

மன நலத்துக்கான  இந்த மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளில்  உடல் எடை அதிகரிப்பு, கவனமின்மை, கை நடுக்கம் எல்லாம்  சிலவைதான். யாரால் வாழ்நாள் முழுக்க மருந்து உட்கொள்ள முடியும்?அவற்றை விட்டுவிட சொன்னால் சந்தோஷமாக விட்டுவிடுவேன். ஆனால் விட்டால் தலைவலி வந்து குருடாகி விடுவது போல் பிய்த்து எடுத்து விடும்.

ஸ்கிசோஃப்ரினியா என்பது என்ன? உண்மை எது கற்பனை எது என கண்டுபிடிக்க முடியாத மனச்சிதைவு நிலை

இதை கண்டுபிடிக்க ‘பாஸிட்டிவ்’ அறிகுறிகள் மற்றும் ‘நெகட்டிவ்’ அறிகுறிகள் என இருக்கின்றன. மனச்சிதைவு நோயுள்ளவருக்கு மட்டும் நேரும் அறிகுறிகள் ‘பாஸிட்டிவ்’ அறிகுறிகள். இயல்பான மனநிலை கொண்டவர்களிடம் இந்த அறிகுறிகள் தென்படாது. கற்பனையான காட்சிகள், சப்தங்கள் போல. இயல்பானவர்களிடம் தென்படுகிற, ஆனால் ஸ்கிசோஃப்ரினியா நோயாளிகளிடம் இல்லாத அறிகுறிகள் ‘நெகட்டிவ்’ அறிகுறிகள். கவனமின்மை, சோம்பல், இயல்பற்ற சிந்தனை போன்றவை.

இந்த குறைபாட்டின் நுணுக்கங்கள் புரிவதற்கு கடினமாக இருக்கும். ஆனால், அவற்றின் அனுபவம் பயங்கரமானது. இல்லாத விஷயங்களை கற்பனை செய்து அவற்றினூடாக சிந்தித்து வாழ்ந்து பயந்து கொண்டே நீடிப்பதெல்லாம் திகில் படங்களுக்கு நிகரானவை. அடுத்தவரிடம் அவற்றை சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விளைவு? எதையும் எவரையும் சந்தேகிக்க ஆரம்பிப்பீர்கள்.

இப்போதுகூட, இந்த யதார்த்த உலகில் எனக்கு பிடிப்பு இல்லை. இங்கும் அங்குமாக என் மனம் அலைந்து கொண்டிருக்கிறது. சின்ன விஷயங்களை கூட செய்ய சிரமப்பட்டு அதிக கவனம் செலுத்த வேண்டும். நேராக நடக்கக்கூட முடியாது. குடிகாரன் போல்தான்.

இந்த நோய்க்கு ஆட்படும்வரையில் நிறைய நண்பர்களை கொண்டிருந்தேன். என் நிலையை சொன்னதில் ஒவ்வொருவராக ஆரம்பித்து அனைவரும் விலகிவிட்டனர். பல பேருக்கு புரியவில்லை. பலருக்கு எப்படி என்னை கையாள்வது என தெரியவில்லை. பயந்துபோன சிலரும் இருந்தனர். ஆனால் பெரும்பாலானோர் நான் கதை கட்டுவதாக நினைத்தார்கள் என்பதுதான் நிஜம்.

அதனால்தான் சொல்கிறேன். உடலில்  நோய் என சொன்னால்கூட நம்பிவிடுவர். எனக்கு நீரிழிவு நோய் இருந்தால், என் மருந்து இன்சுலினை காட்டலாம். ஆஸ்துமா இருந்தால், ஏதேனும் சிக்கல் ஏற்படும்பட்சத்தில் ஆஸ்துமா அட்டாக் என சொல்லி கொள்ளலாம். கொடுநோய்கள் கொண்டிருப்பவர்களை குறைத்து சொல்வதாக நினைக்க வேண்டாம். அவர்கள் வலியை புரிந்துகொள்கிறேன். இரக்கப்படுகிறேன். அவர்களை போல நானும் என் நோயுடன் வெளிப்படையாக போராட விரும்புகிறேன். அவ்வளவுதான். என் சிக்கலை வெளியே சொல்ல நான் தயங்குமளவுக்கு சமூகச்சூழல் இல்லாமலிருக்க விரும்புகிறேன்.

மூலம்- http://www.youthkiawaaz.com/2015/09/schizophrenia-personal-experience/

தமிழில்- ராஜசங்கீதன்