RTI
நல்ல தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பம் எழுதச் சிறந்த வழிமுறைகள்

பெரும்பாலான இந்தியர்களுக்கு தகவல் உரிமைச்சட்டத்தை பற்றித் தெரியும். ஆனாலும் பயன்படுத்துவதில் இந்த பெரும்பான்மை இல்லை. ஏன்? தயக்கம். முக்கியத் தகவல் பெற விரும்பும் பலரும் தகவல் கோரி விண்ணப்பிக்கும் முறை தெரியாமல் இந்தச் சட்டத்தை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

உண்மையில் தகவல்கோரும் விண்ணப்பம் என்பதே தகவல் அதிகாரியை நாம் கேட்க விரும்பும் கேள்விகளின் தொகுப்புதான். இதற்கென பிரத்யேக முறை ஏதுமில்லை.

உங்களின் முதல் விண்ணப்பத்துக்கு நீங்கள் செய்ய வேண்டியது:

  1. கேள்விகளை முதலில் எழுதுங்கள். அவற்றை எண்கள் கொண்டு வரிசைப்படுத்துங்கள்.
  2. கடிதம் போன்ற ஒரு முகப்புப்பகுதியுடன் ஆரம்பியுங்கள். இது வழக்கமானகடிதம் – “மதிப்புக்குரிய அய்யா, தயைகூர்ந்து பின்வரும் தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”– போலிருக்கலாம். இந்தப் பகுதியை தொடர்ந்து நீங்கள் வரிசைப்படுத்திய கேள்விகள் வரவேண்டும்.
  3. அடுத்துவரும் முடிவுப்பகுதியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த நீங்கள் பயன்படுத்திய பண அஞ்சலின் வரிசை எண்ணை எழுதுங்கள். நீங்கள் கேட்க விரும்பும் தகவல் பொதுத் தகவலா அல்லது எந்த ரகம் சார்ந்தது என்பதையும் தகவல் கோரும் காரணத்தையும் இந்த முடிவுப்பகுதியில் இணைக்கலாம். கடைசியாக உங்கள் கையொப்பம்.
  4. ‘2005ம்ஆண்டின் தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையில் தகவல் கோரும் விண்ணப்பம்’ என கடிதத்துக்கான பொருளை அமைக்கலாம்.
  5. பெறுனர் பகுதியை சரியாக நிரப்பவும்.
  6. பண அஞ்சலை உங்கள் கடிதத்துடன் இணைக்கவும். கடித உறைக்குமேல் பெறுனர் முகவரியை எழுதவும். அவ்வளவுதான், உங்களின் தகவல் கோரும் விண்ணப்பம் தயார்.

நல்ல விண்ணப்பம் எழுத ஏழு குறிப்புகள்

ஒரு சிறந்த தகவல் கோரும் விண்ணப்பம் மளிகை சாமான் பட்டியல் போல சலிப்பை தரக்கூடியது. எந்த காரணகாரியமும் இல்லாமல் வெற்றுத் தகவல் பட்டியலாக அது இருக்கும்.

விண்ணப்பத்தின் முதல் வரைவு சுவாரஸ்யமாக இருந்தால், ஏதோ தவறு இருப்பதாக அர்த்தம். சுவாரஸ்யமான பகுதிகளை நீக்குங்கள். எதற்கு விண்ணப்பம் போன்ற காரணகாரிய விளக்கங்களையும் நீக்குங்கள். நீங்கள் மனதில் கொண்டுள்ள மொத்தப் பிரச்சனையின் தன்மையையும் வெளிப்படுத்தக்கூடாது. எந்த நோக்கத்துக்காக அந்த தகவலை கேட்கிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்தாதீர்கள். உதாரணமாக, அந்த தகவலைக்கொண்டு நீங்கள் வழக்குப்பதியலாம். துப்பறியும் நிறுவனங்களுக்கு போகலாம். ஆனால் இவை எதையும் விண்ணப்பத்தில் வெளியிடக்கூடாது. இந்த தகவல் உங்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதையோ அல்லது இதை பெறுவதற்கு நீங்கள் அலைக்கழிக்கப்பட்ட விதத்தையோ உங்கள் விண்ணப்பம் விவரிக்கக்கூடாது.

சிறந்த தகவல்கோரும் விண்ணப்பம் என்பது குறைவாகவும் தகவல் அதிகாரி புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும் இருக்கவேண்டும்.

மோசமாக எழுதப்பட்ட விண்ணப்பம் தகவல் அதிகாரிக்கு சவால் தரக்கூடியதாக இருக்கும். சொல்லப்போனால் “என் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து விட முடியுமா உன்னால்?” என்பது போன்ற தொனியைக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட விண்ணப்பத்தை படிக்கநேரும் அதிகாரியாக  நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? நானாக இருந்தால் வெவ்வேறு காரணங்கள் சொல்லி அந்த விண்ணப்பத்தை தாமதித்துக்கொண்டிருப்பேன்.

உங்களுக்கு நிறையத் தகவல் தேவைப்பட்டால், சிறிய விண்ணப்பங்கள் பலவற்றை எழுதுங்கள்.

நீளமான ஒற்றை விண்ணப்பம் தகவல் அதிகாரியை அச்சுறுத்தக்கூடும். அவர் அந்த விண்ணப்பத்தை தவிர்க்கக்கூடச்செய்யலாம். பதிலாக, 3 அல்லது 4 கேள்விகள் மட்டும் கொண்ட சிறிய விண்ணப்பம் எழுதுங்கள். அதற்கு பதில் கிடைத்த பின் அடுத்ததை அனுப்புங்கள். அதற்கு பதில் கிடைத்ததும் மீண்டும் அடுத்ததென உங்களுக்கு தேவையான மொத்தத்தகவலும் கிடைக்கும் வரை விண்ணப்பங்களை அனுப்புங்கள்.

இந்த உத்தியில் உள்ள பயன் என்னவென்றால், ஒருவேளை இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு பதிலளிக்கவில்லையெனில் தகவல் அதிகாரி அபராதம் (ரூ.250 x தாமதிக்கப்பட்ட நாட்கள் எண்ணிக்கை x பதிலளிக்கப்படாத விண்ணப்பங்கள் எண்ணிக்கை) கட்டவேண்டும். ஒரு விண்ணப்பத்திலிருந்து தப்பினாலும் மற்ற விண்ணப்பங்களுக்கான அபராதத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டேனும் அதிகாரி பதிலளித்துத்தான் ஆகவேண்டும்.

கோருகிற தகவலின் காலத்தை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள். அதீதலட்சிய வேட்கை கொள்ளாதீர்கள்.

தகவல் கோருபவர்மிக எளிதாக “1981லிருந்து இன்று வரை அளிக்கப்பட்ட துப்பாக்கி உரிமங்களின் நகல்களைக் கொடுங்கள்” போன்றொரு கேள்வியை எழுதி விண்ணப்பித்து விடலாம். ஆனால்தகவல்அதிகாரியை பொறுத்தவரை, இது 30 வருடங்களின் கோப்புகள். பழைய கோப்புகள் அழுக்கடைந்து எங்கேனும் அடித்தளத்தில் போடப்பட்டிருக்கலாம். ஆக, உண்மையில் உங்களுக்கு இத்தனை பழமையான தகவல் வேண்டுமா என்று எண்ணிக்கொள்ளுங்கள். ஐந்து வருடத்திய தகவல்கள் பூர்த்தி செய்யக்கூடிய தேவைகளுக்காக 30 வருடத்தியத் தகவலை கேட்காதீர்கள்.

குற்றத்துக்கெதிரான தகவல் கோரும் விண்ணப்பம்.

சம்பந்தப்பட்ட அதிகாரியே (PIO) குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் பட்சத்தில் சம்பந்தமில்லாத பல தகவல்களைக் கேட்டு விண்ணப்பியுங்கள். இது உங்கள் நோக்கத்தை மறைக்கும். உதாரணமாக, அனுமதியில்லாமல் ஒரு கட்டிடம் கட்டப்பட்டதாக நீங்கள் சந்தேகிக்கலாம். அதற்கான வழக்கு தொடுக்க, அனுமதிக்கப்பட்ட கட்டிட வரைபடம் போன்ற தகவல்கள் உங்களுக்கு தேவைப்படலாம். அதற்கான தகவல்களை சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளிடமே கேட்கையில் அவை தாமதிக்கப்படலாம், மறுக்கப்படலாம் அல்லது தேவையான கோப்புகள் தொலைந்து விட்டதாகக்கூட காரணங்கள் கூறப்படலாம்.

கேள்வி:இந்த மாதிரியான முக்கியமான ஆவணங்கள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

பதில்:அதே பகுதியிலுள்ள தொடர்பில்லாத மற்ற ஐந்து கட்டிடங்களின் ஆவணங்களை கேளுங்கள். கூடவே இந்தக்கட்டிடத்துக்கான ஆவணங்களையும் தற்செயலாக கேட்பதுபோல் கேளுங்கள். கண்டிப்பாக, இந்த தேவையற்ற ஆவணங்களை நகலெடுக்கும் பொருட்டு அவர்கள் நூற்றுக்கணக்கில் பணத்தை செலவு செய்வார்கள். உங்களுக்கு தேவையான ஆவணங்கள் எந்த தாமதமும் தடங்கலுமின்றி கிடைக்கும் வரை, இத்தகை பண, கால விரயம் அவசியம்தான்.

நீங்கள் இந்த நாட்டின் குடிமகன். துப்பறியும் நிபுணன் அல்ல உங்களின் குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் நீங்கள் ஆதாரம் காட்ட தேவையில்லை. முதலில் புகார் கொடுங்கள், தகவலுக்கான விண்ணப்பங்களை அப்புறம் கொடுக்கலாம்.

பல நேரங்களில் நாம் சந்தேகிக்கும் குற்றங்களை புகார்களாக பதிவு செய்யும்முன் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த விழைகிறோம். அந்த குற்றங்கள் சம்பந்தமான தகவலை விண்ணப்பங்களின் மூலம் பெறவே முதலில் முற்படுகிறோம். இது தேவையில்லை. நீங்கள் இந்த நாட்டின் குடிமகன் தானே தவிர துப்பறியும் நிபுணனல்ல. முதலில் புகாரை பதிவு செய்யுங்கள். அதை துப்பறியத்தான் அதற்கான நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு அந்த வேலைகளை அவர்கள் செய்யட்டும். அதற்குபின், அந்த குற்றம் தொடர்பான தகவலையும் ஆவணங்களையும் வெளிக்கொண்டுவர, நீங்கள் விண்ணப்பம் எழுதுங்கள். ஆனால், இது இரண்டாம் கட்டம்தான், முதற்கட்டம் அல்ல.

உங்கள் விண்ணப்பத்தின் முதல் வரைவை அனுப்பாதீர்கள்; அது கண்டிப்பாக மோசமாகத்தான் இருக்கும்.

உங்கள் தகவல் கோரும் விண்ணப்பத்தின் (அல்லது புகார்) முதல் வரைவை எழுதியதும், இரண்டு நாட்கள் காத்திருங்கள். அதன் பின், மீண்டும் படித்துப்பார்த்து தேவையான மாற்றங்களை செய்யுங்கள். தேவைப்பட்டால் உங்கள் நண்பர் ஒருவரிடம் காட்டி அவர் கூறும் மாற்றங்களையும் செய்யுங்கள்.

மூலம்- https://www.saddahaq.com/humaninterest/rtiapplication/rti-for-beginner-a-simple-format-and-tips-for-writing-good-rti-applications

Photo Credit- http://kolkata.aidindia.org/docs/resources/RTI/aidkol_RTI_poster1.jpg

ஆசிரியர் – Bimal Khemani

தமிழில்- ராஜசங்கீதன்