elon musk tesla_docpage
Photo credit- http://i.ytimg.com/vi/yKORsrlN-2k/maxresdefault.jpg

இந்தியாவில் எது இருக்கிறதோ இல்லையோ மின்வெட்டு நிச்சயம் இருக்கும். மின் உற்பத்தியில் மாற்று வழிகளையும் பயன்படுத்தினால் மட்டுமே தன்னிறைவு அடையலாம் எனப் பல வல்லுநர்கள் கூறிய பின்பும் நம் அரசுகள் செவி சாய்க்கத் மறுக்கின்றன. அவர்களுக்கு ஆதாயம் வேண்டுமே! மட்டுமல்லாது மத்திய-மாநில அரசு வரையறை பிரச்சினைகள் வேறு. ஆனால் நமக்கு மின்சாரம் வேண்டும். என்ன செய்வது?

டெஸ்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் Powerwall நல்ல பதிலாக இருக்கலாம். நம் விஞ்ஞானிகளும் அரசுகளும் சற்று சிரத்தை எடுத்துக்கொண்டால் இந்தியாவுக்கு Powerwall மூலம் ஒளிமயமான எதிர்காலத்தையே கொடுக்கலாம்.

எலான் மஸ்க் (Elon Musk) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இணையம் வழி பணம் செலுத்தும் முறையான Paypal-ஐ நிறுவியவர். டெஸ்லா மோட்டர்ஸ் என்கிற நிறுவனத்தையும் நடத்துகிறார். மின்சாரக் கார் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டுமென்பதுதான் அந்நிறுவனத்தின் விருப்பம். மட்டுமல்லாமல், விண்வெளிப் பயணங்களிலும் ராக்கெட் தொழில்நுட்பங்களிலும் முன்னோடியாக இருக்க வேண்டுமென்ற விருப்பத்துடன் SpaceX என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். Powerwall-ஐயும் இந்த மனிதரின் நிறுவனம்தான் கொண்டு வருகிறதெனில், அதன் தரத்துக்கு வேறென்ன சான்று இருக்க முடியும்?

கலிஃபோர்னியா ஹாதோர்னில் (Hawthorne), சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மஸ்க் Powerwall-ஐ அறிமுகப்படுத்தினார். இதுவும் பேட்டரி வகைதான். சுவரில் பொருத்திக் கொள்ளக் கூடியது. மின்வெட்டுகளில் பயன்படுத்த மின்சாரத்தை சேமித்து வைத்துக் கொள்ளலாம். நம் நாட்டுக்கு கண்டிப்பாக தேவையான சமாச்சாரம். சூரிய ஒளியிலிருந்து எடுக்கப்படும் மின்சாரம் சேமிக்கப்பட்டு பயன்படுத்துவதால் மின் உற்பத்தியின்போது வெளிப்படும் கழிவுகளும் தவிர்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 30 கோடி பேர் இன்னும் மின்சார வசதி பெறாத திருநாட்டில் இத்தொழில்நுட்பம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டிருப்பது நிச்சயம். இதன் முழு உபயோகத்தை ஆரம்பக்கட்டத்தில் இந்தியா அறிந்துகொள்வது சாத்தியமில்லையெனினும், பயன்பாட்டின் வழியாக காலப்போக்கில் அந்த சாத்தியங்களை கண்டறிந்து பலன் பெரும் வாய்ப்புகள் உண்டு.

“Powerwall ஐ  வீடுகளில் வழக்கமான இன்வெர்ட்டர் பேட்டரி போல் பயன்படுத்தலாம். சூரியத் தகடுகளின் வழி மின்சாரத்தை சேமித்துக்கொண்டு, தேவைப்படும் நேரங்களில் அந்த மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்வெட்டுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும்” என்கிறது டெஸ்லா நிறுவனம்.

நாம் சாதாரணமாக வீடுகளில் பயன்படுத்தும் இன்வெர்ட்டரும் இதையொத்த செயல்முறை கொண்டதுதான். ஆனால் Powerwall  நம் வழக்கமான பேட்டரிகளைப் போல கையாள்வதற்கு சிரமமானதன்று. தற்போது பயன்படுத்தப்படும் பேட்டரிகள் அதிக பராமரிப்பை வேண்டுபவை. எல்லா நேரங்களிலும் கை கொடுப்பவை என சொல்ல முடியாது.

தொழில்துறை பயன்பாடு

Powerwall  இரண்டு வகைகளில் வருகிறது. 7 KW/hr யூனிட் ஒன்று, 10 KW/hr யூனிட் ஒன்று. ஆற்றல் ஒப்பிடும் USwitch போன்ற நிறுவனங்களின் ஆரம்பக்கட்ட ஆய்வுப்படி, 1 KWh யூனிட்டைக் கொண்டு ஒரு லேப்டாப்பை, ஒரு வாஷிங்மெஷினை மற்றும் ஒரு மின்சாரத்தில் இயங்கும் கெட்டிலை (kettle) இயக்கிவிட முடியுமாம்.    
வீடுகளில் பயன்படுத்தும்போது பெரியளவில் இது பணத்தை மிச்சப்படுத்தாது என்றாலும் தினசரி மின்சார பயன்பாட்டை கணக்கில் எடுத்துக்கொண்டால் கணிசமான அளவுக்கு பணம் மிச்சமாகும். ஆனால் அதுவே, Powerstack எனப்படும் பெரிய அளவில் தொழில்களுக்காக சேமிக்கப்படும்போது, பெருமளவில் செலவைக் கட்டுப்படுத்தும். அமெரிக்காவில் குறிப்பாக கலிஃபோர்னியாவில், தொழில்துறைக்கு பேட்டரிகளை வழங்குவதில் முன்னணி வகிக்கும் டெஸ்லா, அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற பெருநிறுவனங்களையும் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் Powerwall-ன் 7KWh வகை இந்திய மதிப்புக்கு ரூ.1,91,700 ஆகவும் ($3000) 10kWh வகை ரூ.2,23,260 ($3500) ஆகவும் இருப்பதும்தான் நம் மக்களை சற்று யோசிக்க வைக்கும்.

முடிவிலா சாத்தியங்கள்

 இந்தியாவைப் பொறுத்தவரை மின்மயமாக்கம் என்பது கிராமவாரியாகத்தான் செயல்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு மின்சார லைனைக் கொண்டு 50 வீடுகள் இருக்கும் கிராமம் ஒன்றில் ஒரு வீட்டில் மட்டும் வெளிச்சத்தை உண்டு பண்ணினாலும் அக்கிராமமே மின்சாரம் பெற்றதாக அர்த்தம். இதற்கு காரணம் வழக்கமான மின்சார உற்பத்தி மற்றும் வினியோக முறைகளில் உள்ள சிக்கல்கள். இச்சிக்கல்கள் அனைத்தையும் ஒருங்கே சரி செய்யுமளவுக்கு நிதி வசதியும் கிடையாது. அதனால்தான் டெஸ்லாவின் Powerwall-க்கு அதிக சாத்தியங்கள் இந்தியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

சொல்லப்போனால், அணு ஆற்றல் உயிர்பலிக்கான, வளங்கள் அழித்தலுக்கான சாத்தியங்களை அதிகம் கொண்டிருந்தாலும் மின்சாரம் கிடைக்கும் என்கின்ற ஒரே காரணத்துக்காக கொண்டாடப்படுகிறது.  மஸ்க்கின் இந்தக் கண்டுபிடிப்பு எதிர்காலமாக மாறும்போது அணு ஆற்றலின் மின்சாரம் தேவையில்லாமல் போய்விடும். இந்தியா போன்ற நாடுகள் அதனால் பலனடையப் போவதும் நிச்சயம். Powerwall-ன் காப்புரிமையும் open source-ஆக இருப்பதையும் கவனிக்க வேண்டும். இதை வாய்ப்பாக பயன்படுத்தி இந்திய அரசும் விஞ்ஞானிகளும் நம் நாட்டின் தேவைக்கேற்ப இதை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். இந்த தொழில்நுட்பம் இந்தியாவின் எதிர்காலத் திட்டங்களான ஸ்மார்ட் நகரங்களில் தொழில்நுட்ப மேம்பாடுக்கான வாய்ப்புகளை வழங்குவதோடு கழிவற்ற மின்சார உற்பத்தியை குறைவான செலவில் கொடுக்கவும் வல்லது.

மூலம்- http://scroll.in/article/725876/can-this-wall-mounted-battery-solve-indias-power-crisis

தமிழில்- ராஜசங்கீதன்