RTI02_docpage
இந்திய ஜனநாயகம் தன் குடிமக்களுக்கு கொடுத்த உரிமைகளிலேயே தலையாயது தகவல் அறியும் உரிமைச் சட்டம் எனலாம். அரசிடமிருந்தும் அதன் இயந்திரத்திடமிருந்தும் தேவையான தகவலைப் பெறுவது தற்போது உங்களது  உரிமையானாலும், இந்தச் சட்டத்தின் நடைமுறை பயன்பாடு அவ்வளவு எளிதில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இங்குதான் பிரதீப் பட்டும், வினோத் ரங்கனாதனும் உதவிக்கு வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவது சிக்கலான நடைமுறை கொண்டது. ஆகவே, அதை எளிமைப்படுத்தி அதற்கு தேவையான அனைத்து தகவல்களும் விண்ணப்பங்களும் ஒரே வலைத்தளத்தில் http://onlinerti.com/ கிடைக்க ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

ஏன் ஆன்லைன் RTI?

வினோத் சிங்கப்பூரில் இருந்த சமயம். மத்திய அரசுக்கு ஒரு தகவல் அறியும் விண்ணப்பத்தையும் தமிழக அரசுக்கு ஒரு விண்ணப்பத்தையும் அனுப்ப விரும்பினார். அதற்கான முறைகளை பற்றி அவர் நிறையப் படிக்க வேண்டியிருந்தது. விண்ணப்பம் கிடைக்கும் இடம், நிரப்பும் முறை, கட்டணம் செலுத்தும் முறை என்று நிறைய. ஒரு விண்ணப்பத்துக்கே இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டிய அளவுக்கு வேலைகள் இருந்ததால் இவற்றை எளிமையாக்குதல் நலம் என்று நினைத்தார். அவரே அதை முன்னெடுத்தும் செய்தார்.

விண்ணப்பத்தின் வடிவத்தில் வேறு ஒரு சிக்கல் இருக்கிறது. எந்த வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஒரு வரையறை இல்லை. இதற்கான முறையும் நாடு முழுமைக்கு ஒருங்கே கிடையாது. இதன் முக்கிய வடிவங்கள் மாநிலத்துக்கேற்றவாறு மாறுகின்றன.

விண்ணப்பத்தை எங்கே அனுப்ப வேண்டுமென்பதை அறிந்துகொள்வதற்கே வினோத் அதிக நேரம் செலவிட்டார். அதிலும் சரியான கேள்விகள்தான் கேட்க வேண்டுமென்பதால் அதற்கான ஆராய்ச்சிக்கென தனி நேரச்செலவு வேறு. விண்ணப்பம் நிராகரிக்கப்படக்கூடாது என்பது முக்கியம். அதற்கு கேள்விகள் தெளிவாக இருத்தல் அவசியம். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கேள்விகள் கேட்கும் முறையை அவர் தெரிந்துகொண்டார். ஆக, இந்த வகை விண்ணப்ப முறை தேவையிருப்பவர்களை குழப்பமடையத்தான் செய்யும் என்பதை அவர் புரிந்துகொண்டார். விண்ணப்பிக்கும் முறை இன்னும் எளிமைப்படுத்தப்படாவிட்டால் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் எனவும் அறிந்துகொண்டார். விண்ணப்ப முறை எந்தளவுக்கு நேரவிரயத்தை வேண்டுகிறதோ அதே அளவுக்கு சிக்கல்களை கொண்டதாகவும் இருக்கிறது. விண்ணப்பிப்பவருக்கு அரசாங்க முறைமைகள் அத்துப்படியாக இல்லாமலிருக்கும் பட்சத்தில் வெறும் அலைக்கழிப்புதான் மிஞ்சும். இந்த ஆன்லைன் RTI குழு Let’s Venture https://letsventure.com/ மூலம் 50 லட்சம் ரூபாய் நிதியைத் திரட்டி அமைப்பை விரிவாக்கும் வேலைகளை தொடங்கியுள்ளது.

ஆன்லைன் RTI  இந்த விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்குகிறது. சமூக, பொருளாதார பின்புலங்களின்றி எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் RTI  விண்ணப்ப முறையை உதவும் வண்ணம் எளிமையாக்கியுள்ளார்கள். மிகச் சுலபமாக, ஒரு இந்தியன் தன் தகவல் அறியும் உரிமையை பிரயோகிக்க உதவியுள்ளார்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் உண்மையில் பயன்படுகிறதா?

சர்வதேச ஜனநாயகங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, இதுமாதிரியான உரிமையை வெற்றிகரமாக பயன்படுத்துவதில் இந்தியாவும்  முதன்மையாக உள்ளது. ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் இதற்கென்றே பிரத்யேகமாக ஒரு பொது தகவல் அதிகாரி (Public Information Officer) இன்று இருக்கிறார். இவரின் தலையாயக் கடமையே தகவல் உரிமை விண்ணப்பங்களுக்கு பதிலளிப்பதுதான்.

முதல் முறை விண்ணப்பத்துக்கும் மேல் முறையீட்டு விண்ணப்பத்துக்கும் தனித்தனியே முறைமைகள் உள்ளன. உங்களின் விண்ணப்பத்துக்கான பதில் தாமதிக்கப்பட்டாலோ அல்லது திருப்திகரமாக இல்லாவிட்டாலோ நீங்கள் முதல் மேல்முறையீட்டுக்கும் அதற்கு பிறகு இரண்டாம் மேல்முறையீட்டுக்கும் விண்ணப்பிக்கலாம். சரியான முறையில் அரசு நிறுவனங்களால் ஒவ்வொரு கேள்வியும் பதிலளிக்கப்பட வேண்டியது இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை.

ஒரு குடிமகன் RTI விதிகளை பின்பற்றி சரியான கேள்விகளைக் கேட்டு, சரியான முகவரிக்கு விண்ணப்பம் அனுப்புவாரேயானால், கண்டிப்பாக அவர் பதில் கிடைக்கப் பெறுவார்.

தாக்கம்

இந்திய அமைப்பில் RTI கொண்டு வந்துள்ள தாக்கத்தை யாரும் மறுப்பதற்கில்லை. அரசு இயந்திரம் செயல்படும் விதத்தை மக்கள் புரிந்துகொள்வதற்கு கண்டிப்பாக உதவியுள்ளது. ஊழலை ஒழிக்கவில்லையெனினும் குறைக்கவேனும் செய்திருக்கிறது.

வினோத் சொல்லுகையில் நிலுவையிலிருந்த பாஸ்போர்ட் பிரச்சினைகள் பல ஆன்லைன் RTI யின் உதவியால் சரியாகியுள்ளதாகக் கூறினார். குறிப்பாக ஆறு மாதங்களாக தாமதிக்கப்பட்ட ஒரு பாஸ்போர்ட், ஆன்லைன் RTI-ல் விண்ணப்பித்த 10 நாட்களில் கிடைக்கப் பெற்றதாகக் கூறினார்.

ஆன்லைன் RTI  பல அதிர்ச்சிக்குரிய விவரங்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தியிருக்கிறது. ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின் போன சீஸன் பார்த்திருப்பீர்களேயானால், அமீர்கான் OnlineRTI.com பற்றி பேசியதை தவற விட்டிருக்க மாட்டீர்கள்.

இந்த வலைத்தளத்துக்கு வருபவர் சராசரியாக ஒரு விண்ணப்பத்துக்கு மூன்று நிமிடங்கள் செலவழிக்கிறார். விண்ணப்பம் நிரப்பும் சரியான வழிமுறைகளை, அதற்கான அல்காரிதம்களால் (Algorithms) இந்த தளத்தில் செயல்படுத்தியிருக்கிறார்கள். இன்றுவரை, இவர்கள் மொத்தமாக 12000 RTI விண்ணப்பங்களை அனுப்பியிருக்கிறார்கள்.

இதன் தாக்கத்தைப் பற்றி சொல்லுகையில் “விண்ணப்ப முறைகளில் இருக்கும் சிக்கல்களை வெகுவாக குறைத்து எளிமையாக்க விரும்பினோம். உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அரசு அலுவலகங்களில் வரிசைகளில் இனி காத்திருக்க வேண்டியதில்லை. உங்கள் வேலைகளை செய்வதற்கு அதிகாரிகளுக்கும் எழுத்தர்களுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. இது ஒரு ஜனநாயக நாடு. அரசு அமைப்புகளில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள எல்லா குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது” என்றார் பிரதீப்.

RTIல் வர வேண்டிய மாற்றங்கள்

RTI விண்ணப்பத்துக்கான கட்டணம் வெவ்வேறாக பல மாநிலங்களில் இருப்பது சரியாக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் கட்டணம் ரூ.10லிருந்து ரூ.250 வரை வேறுபடுகிறது. முதல் விண்ணப்பதாரர்களை இந்த கட்டணங்கள் குழப்பக்கூடும். அதே போல், விண்ணப்பத்தில் இருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கைக் குறித்து பல விதிமுறைகள் இருக்கின்றன. இந்த மாதிரியான முறைகள் நாடு முழுமைக்கும் ஒன்றாக சீரமைக்கப்பட வேண்டும். போலவே, பல அரசு அலுவலகங்களின் முகவரிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை அவற்றிற்கான வலைத்தளங்களில் மாற்றப்படவில்லை. அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்போது அவை சரியான முறையில் வலைத்தளங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். அரசாங்கத்தின் இந்தப் போக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சரியான தகவல்கள் வலைத்தளங்களில் இருந்தாலே பல குடிமக்கள் பெருமளவுக்கு பயன்பெறுவார்கள். அதிலும் 2005ம் RTI சட்டத்தின் பகுதி 4(1)-ன் படி, அரசு அமைப்புகள் முடிந்த மட்டிலும் அதிகமான தகவல்களை தங்கள் வலைத்தளங்களில் அளித்திருக்க வேண்டும். ஆனால் இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

நாடு முழுக்க இருக்கும் பரவலான இணையத்தின் பயன்பாட்டாலும் ஸ்மார்ட்ஃபோன்களும் மலிவாகிவிட்டதாலும் வட்டார, மாநில ரீதியிலான அரசு அமைப்புகள் பற்றிய RTI  தகவல்களும் அதிகம் வலைத்தளங்களில் இடம்பெற வேண்டும். இந்த தகவல்கள் மாநில மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இணையத்தில் கிடைக்க அரசு வழிவகைச் செய்ய வேண்டும்.

மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அரசு ஊழியர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். வரிசைகளில் நிற்கும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க அதிக அளவில் பொதுத் தகவல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட வேண்டும். இருக்கும் சாதனங்களை வைத்துக்கொண்டு விண்ணப்பங்களுக்கும் முறையீடுகளுக்கும் சரியான கவனத்துடன் பதிலளிக்கப்பட வேண்டும்.

எதிர்கால மாற்றங்கள்

RTI சட்டத்தை இன்னும் எளிமையாக்கி வலிய ஆயுதமாக மாற்றுவதன் மூலம் நல்ல ஆட்சித் திறனையும் வெளிப்படைத்தன்மையையும் நாட்டில் ஏற்படுத்த முடியும் என்பதே இக்குழுவின் எண்ணம்.

ஆன்லைன்RTI  தொலைபேசி அழைப்புகள் மூலம் விண்ணப்பிக்கும் முறையையும் சோதித்து வருகிறது. இந்தியாவின் பல இடங்கள் இணைய வசதி இல்லாமலிருப்பதாலும் தொலைபேசி என்பதே அனைவருக்கும் சாத்தியமான வழியாக இருப்பதாலும்தான் இந்த முயற்சி. கர்நாடகாவிலும் மகாராஷ்டிராவிலும் இம்முயற்சி சோதனையில் இருக்கிறது. அவர்கள் ஜூன் 2015 வாக்கில் ஒரு லட்சம் பதிலளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் என்னும் இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள். RTI  சட்டம் அதிகாரத்தை மக்களிடம் தந்துள்ளது. ஆன்லைன் RTI போன்ற முயற்சிகள், இந்த உரிமைகளை எந்த தடையுமின்றி, எளிமையாக மக்கள் பயன்படுத்த உதவுகின்றன.

அவர்களின் இணையதளத்துக்கு செல்ல இங்கே சொடுக்கவும் http://onlinerti.com/

மூலம்- http://blog.onlinerti.com/2014/11/06/your-story-onlinerti-is-simplifying-rti-2015/

Image credit- http://goo.gl/tnbWSl

ஆசிரியர் – Subodh Kolhe

தமிழில்  – ராஜசங்கீதன்