http://img.gawkerassets.com/img/17rhx3mevumo9jpg/ku-xlarge.jpg
http://img.gawkerassets.com/img/17rhx3mevumo9jpg/ku-xlarge.jpg

 

உங்கள் செய்திறனை வளர்ப்பதற்கான வழிகள்

நீங்கள் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் இந்த வார்த்தையை அதிகம் கேட்டிருப்பீர்கள். ‘மல்டி டாஸ்கிங் (Multi Tasking)’! ‘பல பணி செய்திறன்’ என மொழிபெயர்க்கலாம். இன்றைய துரித வாழ்முறையில் ஒரு நேரத்தில் பல வேலைகளை செய்வதுதான் வளர்ச்சிக்கான செய்திறனாக கணிக்கப்படுகிறது. ஆனால் உண்மை என்ன தெரியுமா?

மல்டி டாஸ்கிங் எனப்படும் ‘பல பணி செய்திறன்’ உங்களின் புத்திக்கூர்மையை மழுங்கடிக்கும். மூளையைச் சுருக்கும். உற்பத்தித் திறனை குறைக்கும்.

இந்த பல பணி செய்திறன் உங்களுக்கு போதை கொடுத்து அடிமையாக்கி வைக்கும். மல்டி டாஸ்கிங்கால் புத்திக்கூர்மை குறையுமென்பதையும் மூளை சுருங்குமென்பதையும் கூட நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், உங்கள் நேரத்தை, மல்டி டாஸ்கிங் சேமிப்பதற்கு பதிலாக, உற்பத்தித் திறனை  40% அளவுக்கு குறைக்கிறது என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா?

Singletasking: Get More Done–One Thing at a Time நூலை எழுதிய டெவோரா ஸாக் ( Devora Zack)தான் இந்த சதவிகிதத்தை வெளியிட்டுள்ளார். ‘பல பணி செய்திறன்’ என ஒன்று இல்லை என்கிறார் அவர். நீங்கள் தொலைபேசி அழைப்பில் இருந்தபடியே ஓரு ரிப்போர்ட்டை எழுதிக்கொண்டும் மொபைலில் குறுஞ்செய்திகள் படித்துக்கொண்டும் இருப்பதால் மிகத் திறமையாக நேரத்தை மேலாண்மை செய்து ஆற்றலை பெருக்கிக் கொள்வதாக நினைக்கலாம். உண்மையில் உங்கள் மூளை இந்த மூன்று நடவடிக்கைகளால் தொடர்ச்சியாக மாற்றங்களுக்குட்படுத்தப்பட்டு செயல்படுகிறது. விளைவாக, உங்கள் ஆற்றலும் மூளை செல்களும் விரயமாகின்றன. மல்டி டாஸ்கிங் ஓட்டத்திலிருந்து விலகி, இந்த விரயத்தையும் இழந்த ஆற்றல் மற்றும் புத்திக்கூர்மையையும் திரும்ப பெறுவதற்கு உத்திகள் இருக்கின்றன.

ஒரு நேரத்தில் ஒரு செயலை செய்ய வேண்டும்

“ஒரு பணி செய்திறன் ஒரு வேலையை மட்டும் செய்ய உங்களை பணிக்கும். மற்ற வேலைகள் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தக்கூடாது” எனக் கூறுகிறார் ஸாக். “ஒரு வேலையை எடுத்து அதை முழுமையாக முடிக்கும் வரை விடக்கூடாது என்பதல்ல இதன் அர்த்தம். அந்த வேலைக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் அந்த வேலையை மட்டும் செய்ய வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.” என்கிறார் ஸாக்.

கவனத்தை குலைக்காத சூழலை தேர்ந்தெடுங்கள்

நீங்கள் ஒரு மின்னஞ்சல் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். சட்டென இன்னொரு வேலை சார்ந்த ஒரு ஐடியா உங்களுக்கு தோன்றுகிறது. என்ன செய்வீர்கள்? நல்ல வழி என்னவென்றால் கையில் ஒரு குறிப்பேட்டை வைத்துக்கொண்டு அவ்வப்போது தோன்றும் ஐடியாக்களை குறித்துக்கொண்டு செய்து கொண்டிருக்கும் வேலையை முடித்த பின், குறிப்பெடுத்த வேலைக்கு செல்வதுதான்.

கவனச்சிதறல் இல்லாத நேரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

“வேலை பார்க்கும் சூழலை நீங்கள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். உடன் வேலை பார்ப்பவர்களை அவர்கள் எழுப்பும் சத்தத்துக்காக மிக எளிதாக நீங்கள் குற்றம் சொல்லலாம். ஃபேஸ்புக் அறிவிப்புகள், புது மின்னஞ்சல்கள், செல்பேசி அழைப்புகள் போன்றவை எழுப்பும் சத்தங்களையும் குறை சொல்லலாம். ஆனால் உண்மை என்னவெனில் கவனச்சிதறல் ஏற்படாத சூழலை உருவாக்குவது உங்கள் கையில் உள்ளதென்பதே. கொஞ்ச நேரத்துக்கு செல்பேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவை வரா வண்ணம் ப்ளாக் செய்யலாம். மின்னஞ்சலை மூடி வைக்கலாம். எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

கவனம் குவிவதற்காக சற்று நேரம் அமைதியாக இருங்கள்

“சராசரியாக ஒரு மனிதனுக்கு, அவன் கவனம் ஒரு விஷயத்தில் குவிவதற்கு 8 வினாடிகள் பிடிக்கும்” என்கிறார் ஸாக். இது தங்க மீனைவிட ஒரு வினாடி குறைவு எனவும் சொல்கிறார் அவர். ஒவ்வொரு நாளின் நடவடிக்கைகளை தொடங்கும் முன்னமும் சிறிது நேரம் அமைதியாக, நம்மை நாமே உள்நோக்கி கவனிக்க செலவழிக்க வேண்டும்.

இல்லை என சொல்ல தயங்காதீர்கள்

“எல்லா வேண்டுகோள்களையும் ஆமென ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அப்படி ஏற்காமல் நிராகரிப்பது குற்றமுமல்ல. உங்களை சுயநலம் பிடித்தவராகவும் யாரும் எண்ணப் போவதில்லை. ‘என்னால் இப்போது முடியாது’ என சொல்வது ‘என்னால் எப்போதும் முடியாது’ என்பதற்கான அர்த்தத்தை கொடுக்கப் போவதில்லை.” என்கிறார் ஸாக். நீங்கள் இல்லையென சொல்வதன்மூலம் என்ன சுட்டுகிறீர்கள் என்றால் தற்போது செய்யும் வேலையை எப்படி கவனம் சிதறாமல் செய்கிறீர்களோ அதுபோல் அவர்கள் வேண்டும் வேலையையும், நேரம் வரும்போது கவனம் சிதறாமல் செய்வீர்கள் என்பதைத்தான்

மூலம்- http://www.inc.com/minda-zetlin/stop-this-one-bad-habit-and-you-ll-increase-productivity-40-percent.html

தமிழில்- ராஜசங்கீதன்