Make in India

செவ்வாய்க்கு கலம் அனுப்பியதில் கண்ட வெற்றி இந்திய தொழில்நுட்ப வல்லமைக்குக் கிடைத்த வெற்றி என அறிவிக்கப்படுகிறது. எங்கள் நாட்டிலுள்ள பொறியியல் நிபுணத்துவத்தை பயன்படுத்தி உங்கள் பொருட்களைத் தயாரித்துக் கொள்ளுங்கள் எனப் பிரதமர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறார். எல்லாம் சரி, இந்த அறிவிப்புகள் கொண்டாடும் சிறப்பில் இந்திய பொறியியல் வல்லமை உண்மையில் இருக்கிறதா எனப் பார்ப்போம்.

  • 97% பேர் மென்பொருள் துறையிலும் பொறியியலின் முக்கியத் துறைகளிலும் வேலைகளை விரும்பினாலும் அதில் 3% பேர்தான் மென்பொருள் துறையில் பணிபுரியும் திறமை பெற்றிருக்கிறார்கள். 7% பேர்தான் மற்ற முக்கியப் பொறியியல் துறைகளில் வேலை பெறுமளவுக்கு திறமை கொண்டிருக்கிறார்கள்.
  • 11% பேருக்குத்தான் தாம் படித்த துறைகளில் வேலை கிடைக்கும். ஏனெனில் மற்றவரிடம் தேவையான அளவுக்கு ஆங்கிலத் திறனோ(74%), பகுப்பாயும் திறனோ(58%) இருப்பதில்லை.

இந்த புள்ளிவிவரம், புதுதில்லியிலுள்ள Aspiring Minds என்னும் நிறுவனத்தின் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டவை. 520 பொறியியல் கல்லூரிகளில் 2013ம் ஆண்டு படிப்பை முடித்த 1,20,000 பொறியியல் மாணவர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு.

இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைப் பொறுத்தவரையில், இந்தியாவில் 6214 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 29 லட்சம் பொறியியல் மாணவர்கள் இருக்கின்றனர்.

பணியிலமர்த்தப்பட முடியாத ஆனால் வேலைகளுக்கு காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாவது ஒரு நல்ல பொருளாதாரத்துக்கு அழகல்ல. சமூகம் தன் ஸ்திரத்தன்மையை இழந்துவிடும். அதிலும், தேர்ச்சி பெறும் பொறியியல் பட்டதாரிகளின் எதிர்பார்ப்புக்கும், இருக்கும் வேலைகளுக்கும் இடையிலான முரண் பெருமளவிலான ஏமாற்றத்துக்கு வழிவகுக்கும்.

Aspiring Minds  ஆராய்ந்த பொறியாளர்கள் ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் பணிகளில் இருப்பவர்கள்தாம். 90% பொறியியல் பட்டதாரிகள் மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரிக்கல், சிவில் பணிகளைத்தான் விரும்புகின்றனர். உண்மை என்னவென்றால், வெறும் 7.49% பேர்தான் இந்தப் பணிகள் கிடைப்பதற்கான அறிவைப் பெற்றிருக்கிறார்கள். கணக்கெடுப்பின்போது, 53% பேர் மென்பொருள் துறை வேலைகளையும் 44% பேர் மற்ற முக்கிய பொறியியல் துறைகளின் வேலைகளையும் விரும்புவது தெரிய வருகிறது.

மென்பொருள் துறையில் இந்த பொறியியலாளர்கள் கொண்டு வரும் திறமைகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ஓராண்டில் தேர்ச்சி பெறும் 600,000 பொறியியலாளர்களில் 18.43% பேர்தான் மென்பொருள் சேவைத்துறையில் பொறியியலாளர்களாகிறார்கள். 3.95% பேர் மாத்திரம் தான் மென்பொருள் உருவாக்கும் பணிகளில் ஈடுபடும் திறமையைப் பெற்றிருக்கின்றனர்.

ஆதலால்தான் பெரும்பாலான பொறியியலாளர்கள் ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் பணிகளைச் சென்றடைகின்றனர். தொழில்நுட்பம் சாராத பிரிவில் அதிக வேலைவாய்ப்பு உள்ளதென்றாலும் இவை பெரும்பாலும் பிபிஓ எனப்படும் தொழில்நுட்பச் சேவை மையப் பணிகளாகத் தான் இருக்கும். அந்தந்த நிறுவனங்களின் தொழில்நுட்பச் சேவையை விற்கும் பிரதிநிதிகளாக இந்த பொறியியலாளர்கள் பணிபுரிவர்.

நல்ல வருமானத்தை ஈட்டும் KPO (Knowledge Processing Operations) துறையில்கூட வெறும் 11.5% பொறியியலாளர்களால்தான் business analystகளாக தேற முடிகிறது. இந்த குறைவான எண்ணிக்கைக்குக் காரணம் ஆங்கிலப் பேச்சாற்றலி ல்லாததும் (73.63% பேர் தகுதியிழக்கின்றனர்) பகுப்பாயும் திறமைகள் (Analytic Skills) இல்லாததுமே ஆகும். (57.96%)

படிக்கும் துறையின் பரிச்சயமோ, படித்த படிப்பின் அடிப்படைகளை வாழ்க்கை சிக்கல்களில் பொருத்தி தீர்வு-காணும் திறமையின்மையும் தான் வேலைவாய்ப்பு இல்லாமல் போவதற்கான முக்கியக் காரணமாக கணக்கெடுப்பு சொல்கிறது. “கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களில் 91.8% பேரும் மற்றத் துறைகளை சார்ந்தவர்களில் 60% பேரும் துறைசார்ந்த பணிகளுக்கு தேவைப்படும் கள-அறிவு (domain knowledge)இல்லாமல் இருக்கின்றனர். இதற்கான படிப்பு கல்லூரிகளின் கல்வித்திட்டத்தில் இருந்தாலும் அதை கற்பிப்பதிலும் கற்பதிலும் இடைவெளி இருக்கிறது”

அது போலவே, கல்லூரிகளுக்கும் அவை இருக்கும் நகரங்களுக்கும் ஏற்றார் போல் வேலைவாய்ப்பு மாறும். மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முதல் தர நகரங்களில் படித்தவர்களுக்கு, 18.26% மென்பொருள் துறையில் வேலை நிச்சயம். புனே, நாக்பூர், சூரத் போன்ற இரண்டாம்தர நகரங்களின் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு 14.17%தான் வேலைவாய்ப்பு இருக்கிறது.சரியாகச் சொல்வதென்றால், அதிக எண்ணிக்கையில் பொறியியலாளர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கும் நிலை இருக்கிறது.

மூன்றாம் தர கல்லூரிகளில் படிப்பவரின் பாடுதான் சோகமானது. முதல் தரக் கல்லூரியில் படித்தவருக்கு நிகரான திறமை கொண்டிருந்தாலும் அவரின் வேலைவாய்ப்பு அந்த முதல் தர கல்லூரி மாணவரைவிட 24% குறைவானது. அப்படியே வேலை கிடைத்தாலும் அவரின் ஒரு வருடத்திய வருமானம் 66,000 ரூபாய் முதல் தரக் கல்லூரி மாணவரைக் காட்டிலும் குறைவாக இருக்கும்.

இதற்கான முக்கியக் காரணமாக பணிக்கு தேர்ந்தெடுக்கும் முறையைக் கூறலாம். பெரும்பாலான நிறுவனங்கள் பணியாட்களை தெரிவு செய்ய பெயர்பெற்ற கல்லூரிகளையே தேர்ந்தெடுக்கின்றன. உதாரணமாக, வேலை விண்ணப்பங்களைப் (Resume) பரிசீலிக்கும்போது, கல்லூரியின் பெயர்கள் முக்கியமாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன. பெயர் பெற்ற கல்லூரிகளின் மாணவர்கள் சரியான தேர்வுகளாக இருப்பர் என நிறுவனங்கள் நம்புகின்றன. ஆனால், இந்த நடைமுறை வேலைவாய்ப்புச் சந்தையின் சமநிலையைக் குலைக்கிறது. சமூகத்தின் ஒரு சாராருக்கு மட்டும் வேலைவாய்ப்பை அதிகம் அளிப்பதாக மாற்றிவிடுகிறது. இதனால் நிறுவனங்களுக்கும் தகுதியுள்ள பல மாணவர்களை அணுக முடியாமலேயே போய்விடுகிறது.

முன்பைப் போல் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் சீரான வளர்ச்சி தற்போது இல்லை. ஆரம்ப நிலை வேலைகளுக்கான வாய்ப்பும் வெகுவாக குறைந்துவிட்டது. ஓரளவுக்கு அனுபவமுள்ளவர்களையே நிறுவனங்கள் தேர்ந்தெடுக்க விரும்புகின்றன. இந்த சூழல்கள் தொடருமானால், பொறியியலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுக்கும் துறையாக தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறை நீடிப்பது சந்தேகம்தான். இந்த சூழலில் கல்வி நிறுவனங்கள்  மாணவர்களிடையே பாடப்புத்தக அறிவு மட்டுமன்றி  பகுப்பாய்வு திறனையும், வேற்று மொழி கற்றலையும் ஊக்குவிப்பது மிக அவசியமாகும்.

மூலம் – http://www.indiaspend.com/coverstory/makeinindiabutbewaretheengineers-54702/print/

தமிழில்- ராஜசங்கீதன்