childrens playing video games_doclarge
குழந்தை வளர்ப்பில் தொழில்நுட்பம் பெரும்பங்கு வகிப்பதை இன்றைய பெற்றோர் மறுப்பதற்கில்லை. எண்பதுகள்வரை (தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்கூட) விளையாட்டு மற்றும் சினிமாவை தவிர்த்து ஒரு குழந்தைக்கான பொழுதுபோக்கென்று வேறு இருந்ததில்லை. அதிகபட்சமாக காமிக்ஸ் புத்தகங்களை வேண்டுமானால் கணக்கில்கொள்ளலாம். தொழில்நுட்ப அறிமுகம் பலவகையான வாய்ப்புகளை அவர்களுக்கு திறந்து விட்டுள்ளது. ஐபேட், ஸ்மார்ட்ஃபோன் என்றால் என்ன என்பதை மூன்று வயது குழந்தையும் அறியும். ஐந்து வயது குழந்தை இணையத்தின் தேடுபொறிகளில்(Search Engines) எப்படி தேடுவது என்பதை புரிந்து கொள்கிறது. அது போலவே விளையாட்டுகளிலும் குழந்தைகள் நாடுவது ப்ளேஸ்டேஷன் (Play Station), எக்ஸ்பாக்ஸ் (Xbox), நிண்டெண்டோ (Nintendo) போன்ற தொழில்நுட்ப சாதனங்களைத்தான். குழந்தைகளின் வாழ்வில் பிரிக்கமுடியாத அளவுக்கு தொழில்நுட்பம் இயைந்திருக்கிறது. அனைத்துக்கும் உச்சமாக இருப்பது தொலைக்காட்சி. குழந்தைகளின் இவ்வகைபொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்வதைத்தவிர இன்றைய பெரியவர்களுக்கு வேறு வழி இருப்பதில்லை.

குழந்தைப்பருவ பொழுதுபோக்குகள்

முன்பிருந்த தலைமுறை குழந்தைகளுக்கு பொழுதுபோக்க குறைந்த வாய்ப்புகளே இருந்தன. கிரிக்கெட், கைப்பந்து, கேரம் போன்ற விளையாட்டுகளையும், பூங்காக்களில் ஒன்றுகூடும் தருணங்களையும் நம்மால் மறக்க முடியுமா? கொஞ்சகாலத்துக்குப்பின் தொலைக்காட்சி நமக்கு அறிமுகமாகியது. அதுவும் ஒரே சேனல் தான், தூர்தர்ஷன்! ஞாயிற்றுக்கிழமை காலைகளில் ஒளிபரப்பாகும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளுக்காக வாரம் முழுக்க காத்துக்கிடந்து அவற்றைப் பார்த்து அடுத்த ஞாயிறுவரை அவற்றையே அசைபோட்டுக்கொண்டிருப்போம். ஆர் கே நாராயணன் எழுதிய மால்குடிடேஸ் (Malgudi Days) போன்ற தொடர்களைக்கூட  வாரத்துக்கு ஒரு முறைதான் ஒளிபரப்பப்பட்டன. ஆனால் அவற்றின் ஒரு அத்தியாயத்தைக் கூட இன்றுவரை நாம் மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறோம். பரந்தகடலில் கிடைத்த அரிய முத்துக்கள் போன்று அவை நம் மனங்களில் பாதுகாக்கப்படுகின்றன. பூந்தளிர், அம்புலிமாமா, ராணிகாமிக்ஸ் மற்றும் டிங்கிள் காமிக்ஸ் ஆகியவை குழந்தையின் பொழுதுபோக்குகளில் முதன்மையானவையாக இருந்தன. இவற்றின் காலம் அதிகமாக இருந்தது. தேவைப்பட்ட நேரங்களில் மீண்டும் வாசிக்கப்பட்டன. குழந்தைகளிடம் வாசிப்புப்பழக்கத்தை ஏற்படுத்தி அறிவை விசாலப்படுத்தின. அரிதாய் டி.வி.யும், அவ்வப்போது புத்தகவாசிப்பும், நிறைய நண்பர்களுமாக அந்தக்கால குழந்தைப்பருவம் இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். 

மாறிப்போன குழந்தைப்பருவம்

நின்ஜாடர்ட்டுல்ஸ் (Ninja Turtles), பேட்மேன் (Batman) போன்ற கதாபாத்திரங்கள் தனியார் தொலைக்காட்சிகள் வழியாக நம் வீடுகளை வந்தடைந்த போது குழந்தைகள் அவற்றை அதீத ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினர் . 2000ம் ஆண்டில் அவர்களுக்கென பிரத்யேக சேனல்களும் உருவாயின. மொத்தப் பொழுதுபோக்கும் கைவசம் இருந்ததால் நண்பர்களின் தேவை குறைய ஆரம்பித்தது. இதற்கெல்லாம் பிறகு, யாரும் யூகித்திராத ஒரு மிகப்பெரிய வரம் குழந்தைகளின் கைவசம் வந்தது. இணையம்! அது வானிலிருந்து இறங்கி வந்த நட்சத்திரமாக கொண்டாடப்பட்டது. பெரியவர்கள் அதற்கு மிக எளிதாய்ப் பழக்கப்பட்டனர். வீடுகளில் கணினி அத்தியாவசியப் பொருளாய் இடம்பெற்றது. குழந்தைகளிடம் வீடியோ கேம்களும் குறுந்தகடுகளும் புழங்கின. இணையம் குழந்தைகளுக்கு பெரும் போதையை உருவாக்கியது. பெரியவர்களும் இந்த போதைக்கு விதிவிலக்கல்ல. தங்கள் குழந்தைகளின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை அவர்கள் தங்களின் பெருமையாகக் கருதினர். இந்தக் காலகட்டத்தில் இன்னும் தொழில்நுட்ப- விளையாட்டுகள் உபகரணங்களைக் கொண்டுதான் விளையாடப்பட்டன.  நினைத்துப்பார்க்க முடியாத அளவில் தொழில்நுட்பச் சாத்தியங்கள் வருங்காலத்தில் நிகழப்போவதை யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. ஸ்மார்ட்ஃபோன்களும், தொடுதிரை சாதனங்களும் (Touch based gadgets)தான் அந்த சாத்தியங்கள். 

தொடுதிரை சாதனங்கள் –வரமா,சாபமா?

தொடுதிரை சாதனங்கள் அறிமுகமான அதே நேரத்தில் நவீனகாலக் குழந்தைகள் அவற்றுடன் மிகப்பெரிய உறவை நிர்மாணிக்க தயாராகிக்கொண்டிருந்தன. அப்பாவின் ஃபோன்களிலுள்ள பொத்தான்களை தங்களின் மென்விரல்களால் அழுத்தி புகைப்படங்கள் எடுக்கவும், பாடல்கள் ஒளிபரப்பவும், படங்கள் பார்க்கவும் தயாராக இருந்தனர். ஒரு நான்கு வயது குழந்தை கூட வயதுவந்தோருக்கான வீடியோகேமை (Video Game)அநாயாசமாக விளையாடிவிட முடியும். சாதனங்கள் மீதான ஆர்வம் அடிமைத்தனமாக மாறி குழந்தைகள் வெளியேச் சென்று விளையாடவே மறுக்கின்றன. அவர்கள் பொம்மைகளை விரும்புவதில்லை. புதுப்புது வீடியோகேம் விளையாட்டை விரும்புகின்றனர். பள்ளிகளிலிருந்து திரும்பியதும் இவ்வகை விளையாட்டுகளை விளையாடுவதில் கழிக்கின்றனர். படங்கள், கார்ட்டூன் தொடர்கள் என்று அவர்கள் வாழ்க்கை இன்னும் சொகுசானதாகவும் சோம்பலானதாகவும் மாறிவருகின்றன. 

தொழில்நுட்ப உபகரணங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்

வெளிவிளையாட்டுகள் விளையாடாமல் வீட்டிலேயே குழந்தைகள் தேங்கிக்கிடப்பது எந்த பெற்றோருக்கும் சந்தோஷமளிக்க முடியாது. வீடு, கார், ரயில் என எங்கு பார்த்தாலும் ஒரு மூலையில் அமர்ந்து குழந்தைகள் கேம் விளையாடிக்கொண்டிருப்பதை பார்க்கையில் ஒரு மிகப்பெரியத் தவறு நிகழ்ந்து கொண்டிருப்பதை உணரலாம். அவர்களின் கற்பனை சக்தி வளராமல் அந்த தொழில்நுட்ப உபகரணங்களுக்குள்ளேயே நசுக்கப்படுகிறது. அந்தவிரல்கள் பொத்தான்களை தவிர்த்து வேறு எதையும் ஸ்பரிசிக்க விரும்புவதில்லை. அந்த குழந்தை அதன் சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்து ரசிக்க விரும்புவதில்லை. ‘விளையாடுவதை நிறுத்து’ என நாம் சொல்வதை தவிர்த்து நம் குழந்தைக்கும் நமக்குமிடையே பெரிய உரையாடல் எதுவும் நடைபெறுவதில்லை என்பதை உணரும்போது தான் குழந்தைப்பருவம் அன்னியமாக மாறிக் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்கிறோம். 

குழந்தைகளும் தொழில்நுட்பமும்

தொழில்நுட்பம் கண்டிப்பாக நம் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறது. தொலைக்காட்சி, செய்தி, ஊடகம், இணையம், தொலைபேசிகள் என எல்லாவகையிலும் உலக மொத்தத்தையும் வீடுகளுக்குள் கொண்டுவந்திருக்கிறது. விஞ்ஞானம், மருத்துவத்துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விண்வெளிக்குக் கூட பறக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இந்த முன்னேற்றங்களால் நம் குழந்தைகள் என்னவாக  மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்கத் தவறிவிட்டோம். அவர்கள் ஐந்துவயதிலேயே பெரியவர்களாகிறார்கள். அவர்கள் பலவற்றை பார்த்து, அறிந்து கொள்கிறார்கள். பார்க்கப்படக்கூடாததும் இதில் அடக்கம்.

வயதுக்கு தேவையான அறிவை மட்டும் குழந்தைகளுக்கு சேர்ப்பிக்கும் பொறுப்பு பெரியவர்களுக்கு முன்னெப்போதையும் விட இன்று அதிகமாகியிருக்கிறது. தொழில்நுட்பம் மற்றொரு தீமையையும் சமூகத்துக்குள் புகுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான சமூகவெளி மற்றும் சமூகப்புரிதலை அது அழித்துவிட்டது. இன்றைய குழந்தைகளுக்கு நட்பு, நண்பர்கள் தேவையில்லை. முகமறியா நண்பர்களை எளிதாய் வீட்டுக்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்ளும்போது, உண்மையான நண்பர்களின் அவசியத்தை அவர்கள் அறிவதில்லை.

அதிலும் இந்த தொழில் நுட்பங்களை சுமந்து வரும் உபகரணங்களின் தாக்கம் அளவுக்கதிகமாகி உள்ளது. கேள்விகள் கேட்காத, விரும்புவதை மட்டும் செய்கிற இந்த உபகரணங்கள்தாம் குழந்தைகளுக்கு இன்றைய வளர்ப்புமிருகங்கள். அப்படியானால் இந்த உபகரணங்கள் உருவாக்கப்படுவது தவறா? அப்படியில்லை. அவசியத்துக்குத்தான் தொழில் நுட்பமே தவிர நுகர்வுக்கு அல்ல. அதிக நுகர்வு அதிக உற்பத்தியையும் புதுத்தயாரிப்புகளையும் உருவாக்கும். பெரியவர்கள் வெற்று நுகர்வுக்காக உபகரணங்கள் வாங்குவதை முதலில் தவிர்க்க வேண்டும். 

அதீத தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான தீர்வு

பெரியவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை சற்று மாற்றினால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். தொழில்நுட்ப பயன்பாட்டை குறைத்துக் கொண்டு விளையாட்டு, உடலுழைப்பு மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குழந்தைகளின் வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை கொண்டுவரும். நல்ல வாழ்க்கை உதாரணங்களை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும். தொழில்நுட்பமும் வாழ்வுக்கு தேவைதான் ஆனால் முழுவாழ்க்கையையும் ஆக்கிரமிக்கும்வகையில் அல்லாமல் தேவைகளின் போது மட்டும் பயன்படுத்தும்வகையில் அவற்றைக் கட்டிருத்த வேண்டும். உங்கள் குழந்தைகள் தொழில்நுட்ப உபகரணங்களில் செலவு செய்யும் நேரத்தின் அளவுக்கு வெளி விளையாட்டு, படிப்பு போன்றவற்றிலும் நேரத்தை செலவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள். அவ்வப்போது ஏதும் செய்யாமல் அமைதியாக  அந்த தருணத்தை அனுபவிக்கவும் கற்றுக்கொடுங்கள்.

ஒரு குழந்தையின் மனம் முழுமையடைய அனைத்துத்துறைகளுக்கும் அதை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தொழில்நுட்பம் மட்டுமல்ல, ஓவியத்திறமை தன்னிடம் இருக்குமானால் அதை வளர்த்தெடுப்பதில் தப்பேதுமில்லை என உணரவேண்டும். ஓவியம் போன்ற மற்றத் துறைகளிலும் வேலைவாய்ப்பு இருக்குமென்கிற உண்மையை அது அறிய வேண்டும். குழந்தையின் மனம் களிமண் போன்றது. அதை எந்த உருவமாகவும் மாற்றலாம். அது ஏதேனும் ஒரு உருவத்தை அடையவேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர எந்த உருவத்தை அடையவேண்டும் என்பதல்ல. எந்த உருவமுமடையாத களிமண், இறுக்கமாகி, யாருக்கும் பயன்படாமல் போகும்.

மூலம்- http://www.caleidoscope.in/nostalgiphilia/children-and-technology

ஆசிரியர்- காயத்ரி தேவுலப்பள்ளி

தமிழில்- ராஜசங்கீதன்