Children playing in the sea, Kerala, India, 2003
Children playing in the sea, Kerala, India, 2003

பணத்தை வாழ்வின் அச்சாகக் கொண்டு சுற்றும் இன்றைய கல்விச்சூழலில் இயற்கையுடன் கற்றல் என்பது சாத்தியம்தானா?

தேர்வுச்சுமை, வேகமான வாழ்க்கை, அதி நவீன வாழ்க்கைமுறை ஆகியவை இயற்கை அறிதலை குழந்தைகள் கல்வியில் அவசியமற்ற விஷயமாக ஆக்கிவிட்டன.

வளர்ந்தவராகக் கருதப்படும், சொல்லிக்கொள்ளும் எவரிடமும் கேட்டுப் பாருங்களேன், அவர் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்த தருணங்கள் எப்போது என்று. வெளிப்புறங்களில், குறிப்பாக, இயற்கைத் தழுவலில் நண்பர்களுடன் கழித்த பொழுதுகளைத்தான் கூறுவர். ஏனெனில் நம் துரித வாழ்க்கை நம்மை எப்போது ஓட்டத்தில் வைத்திருக்கிறது. இந்த முறை மற்றவர்களுடன் நாம் அளவளாவும் நேரங்களை குறைக்கிறது. அதனால் உலகுடனான தொடர்பு அறுகிறது. நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் இல்லாமல் போகின்றன. மனம் தேடும் நிம்மதி என்றும் கிடைப்பதற்கரிய விஷயமாகிறது.

இயற்கையுடன் இயைதலும் செழித்தலும்

மனிதனைத் தாண்டி இயங்கும் உலகப் பெருவெளியையும் வாழ்வுக்கான உரிமையையும் அர்த்தத்தையும் போதிக்கக்கூடிய கல்வி வேண்டும். வெளிப்புறங்களில் நிகழும் கற்றல் அனுபவம் இத்தகையது. அப்படியே மனதில் பொதிகிறது. உயர்ந்த லட்சியங்களை உருவாக்குகிறது. இயற்கையுடன் அர்த்தப்பூர்வமான உறவை உருவாக்க, கற்றல் நிகழ்வை அறைகளுக்குள்ளிருந்து வெளிக்கொணர்வதுதான் நம் நோக்கம்.

இயற்கைவழி கற்றலில் மரமும் ஓர் உயிர் என்பது விளங்கும். அதன் உயிர்வாழ்சூழலின் அவசியம் புரியும். மரத்தின் உயிர் நிலையும் நம் உயிர் நிலையும் ஒன்றுதான்; உயர்வு தாழ்வு ஏதும் இல்லை என்பது தெளிவாகும். உண்மை அனுபவங்கள்தாம் அடுத்த உயிரின் வலியையும் அவசியத்தையும் கற்றுக்கொடுப்பவை. இந்த கற்றல்தான் ஆரோக்கியமான மனிதத்தை உருவாக்கக்கூடிய அடிப்படை.

மொழிப்பாடங்களை படிக்கையில், இயற்கை வழியிலான கற்றல் உணர்வுப்பூர்வமான அறிதலை ஊக்குவிக்கும். குழந்தைகள் எதை ஆராய்கின்றனரோ அதுவாகவே உணர்வுப்பூர்வமாய் மாற விழைவர். வாசனை பற்றியும் சத்தத்தை பற்றியும் மாணவர்களை விவரிக்கச் சொல்லும்போது மண்ணின் வாசனையை, மரப்பட்டைகளின் கடினத்தை, கிளைகளுக்கூடாக செல்லும் காற்றின் சத்தத்தை தம் மனங்களுக்குள் அவரகள் மறுமுறை உணர்ந்து பார்ப்பார்கள். இப்படியான கற்றலில் புலனுணர்வு சார்ந்த அறிவும் கற்பனாசக்தியும் வளர்கிறது. எழுத்துத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை ஈட்டுக்கொடுக்கிறது.

குழந்தைகள் வெளிப்புறத்தை அதிகம் விரும்புவர். அவர்கள் ஓரிடத்தில் அமர்வதில்லை. நகர்தல்தான் அவர்களுக்கு உலகம். சுற்றுப்புறத்தை நகர்ந்தும் ஓடியும் விளையாடியும் பரிசோதித்தும் அவர்கள் அறிகிறார்கள். நமக்கேக்கூட சிரமங்களை சமாளிக்கவும் நம்பிக்கை வீழ்ந்தொடியாமல் வளரவும் இவ்வழி கற்றல் தேவைப்படுகிறது. தாம் படிக்கும் புத்தகங்களின் தாள் மரத்திலிருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை இன்றைய குழந்தைகளில் எத்தனை பேர் அறிவர்? தாங்கள் செல்லும் பேருந்துகளுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் கிடைப்பது பெட்ரோல் நிலையங்களில் அல்ல, பூமியிலிருந்துதான் என்பதை எத்தனை குழந்தைகள் அறிந்திருக்கும்?

வெளிப்புற கற்றல்

https://gisnewspreprim.files.wordpress.com/2012/08/field-trip-0091.jpg
https://gisnewspreprim.files.wordpress.com/2012/08/field-trip-0091.jpg

வெளிப்புறக் கற்றலுக்கான பல நூறு வழிகளை சொல்ல முடியுமெனினும், தொடங்குவதற்காக சில எளிமையான குழந்தைகளுக்கான நிகழ்வுகள்:

விளையாடச் சொல்லுங்கள். சிறு குழுக்களிலோ அல்லது ஜோடிகளாகவோ குழந்தைகள் ஒன்று சேர்ந்து, கொடுக்கப்பட்ட பட்டியலில் இருக்கும் பொருட்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அந்தப் பட்டியல் பின்வருபவனவற்றைக் கொண்டிருக்கலாம்.

  • இறகு
  • சாப்பிடக்கூடிய பொருள் ஒன்று
  • வாசனை கொண்ட பொருள் ஒன்று
  • ஒரு விதை
  • கடினமான பொருள் ஒன்று
  • கனமான பொருள் ஒன்று
  • மஞ்சள் நிறப் பொருள் ஒன்று
  • மிருகம் ஒன்றின் முடி

வயதுக்கேற்பவும் கற்பனைக்கேற்பவும் பொருட்களை பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். நிறைய பொருட்களை சேகரித்தபின் அவற்றை பல சுவாரஸ்யமான வகைகளில் நீங்கள் பயன்படுத்தலாம். அவை சார்ந்திருக்கும் இனம் என்ன என்பதை பேசலாம். சற்றுக் கடினமானவற்றை பைக்குள் போட்டு குழந்தைகள் அவற்றை தடவி என்ன உணர்கிறார்கள் எனப் பேச வைக்கலாம். இம்மாதிரியான நிகழ்வுகளால் குழந்தைகளின் அறிதல் பண்பும் மொழி ஆற்றலும் விசாலம் அடைகின்றன.

இலைப்புதிர் (Leaf Puzzle) விளையாட்டும் சுவாரஸ்யம் கொடுக்கும். உள்ளங்கை கொள்ளும் அளவுக்கான இலையை எடுத்துக்கொள்ள வேண்டும். குழு எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் நான்கு துண்டுகளாகவோ அதற்கு மேற்பட்டவையாகவோ கிழித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு துண்டை கொடுக்கவேண்டும். மொத்த குழுவையும் ஜோடிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொறு குழுவும் மற்ற குழுவுடன் துண்டுகளை மாற்ற வேண்டும். கொடுக்கப்படும் துண்டுகளை வைத்து இலையை முழுமையாக்க முயல வேண்டும். இந்த விளையாட்டின் வழி குழந்தைகள் இலையின் தன்மையையும் நரம்புகளையும் புரிந்துகொள்வர்.

இயற்கைவழி கற்றல் நம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் சந்தோஷத்துக்கும் நல்ல எதிர்காலத்துக்கும் வழிகோலும். இம்மாதிரியான கற்றல் முறைக்கு கல்வியில் இடம் இருக்கிறதா என  நீங்கள் கேட்கலாம். ஏன் இருக்கக்கூடாது என நாங்கள் கேட்கிறோம். காரணம், இயற்கையை நாம் காக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். மட்டுமல்லாமல், நாம் வாழவே இயற்கையை நம்பித்தான் இருக்கிறோம். இயற்கையை எப்படி பாதுகாக்க முடியுமென அறியும் தலைமுறைக்குத்தான் எதிர்காலத்தில் வாழும் உரிமை இருக்கும்.

மூலம்- http://www.edutopia.org/blog/learning-with-nature-marina-robb-victoria-mew

தமிழில்- ராஜசங்கீதன்