http://ideas.ted.com/what-motivates-us-at-work-7-fascinating-studies-that-give-insights/
http://ideas.ted.com/what-motivates-us-at-work-7-fascinating-studies-that-give-insights/

“மனிதர்கள் வேலை பார்க்கும் வாழ்க்கையை சற்று விலகி நின்று யோசித்துப் பாருங்களேன். ஒரு வளைக்குள் மாட்டிய பல எலிகள் தான் ஞாபகம் வரும்,” என்கிறார் நடத்தை சார் பொருளாதார நிபுணர் (Behaviourial Economist) டேன் ஏரியலி (Dan Ariely).

அவரைப் பொறுத்தவரை மனிதர்கள் வேலை பார்ப்பது வெறும் பணத்துக்காக மட்டுமல்ல. வேலை பார்ப்பதை பல வழிகளில் நியாயப்படுத்திக் கொள்கிறோம். வேலைகளுக்கு அர்த்தங்களை கற்பித்துக் கொள்வது, வேலை பார்த்தால்தான் அடுத்தவர் பாராட்டுவர் என எண்ணிக்கொள்வது, கடினமாக உழைப்பதாக தம்மைத் தாமே மெச்சிக் கொள்வது என பல வழிகள். வேலை எவ்வளவுக்கெவ்வளவு கடினமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நாம் பெருமை கொள்கிறோம்.

“நாம் செய்யும் வேலைக்கான மதிப்பை அதற்கு கிடைக்கும் ஊதியத்தை வைத்தே மதிப்பிடுகிறோம். ஆனால் உண்மையில் உழைப்புடன் அதற்கான அர்த்தம், உருவாக்கம், சவால்கள், உரிமை, அடையாளம் போன்றவற்றையும் இணைத்துதான் யோசிக்க வேண்டும்” என்கிறார் ஏரியலி.

நம் வேலைகளில் எந்த அம்சங்கள் அவ்வேலைகளை தொடர்ந்து செய்ய வைக்கின்றன என எரியலியும் அவர் போன்ற ஆய்வாளர்கள் பலரும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். அவற்றில் சில சுவாரஸ்யமான தரவுகள் உங்களுக்காக:

நம் உழைப்பின் விளைவுகளைக் காண்பது

ஆய்வு: Man’s search for meaning: The case of Legos-ல் எரியலி, பங்குபெற்றவர்களிடம் பொம்மைகளை  (5-16 வயதினர் விளையாடும் பொம்மை) உருவாக்கச் சொன்னார். ஒவ்வொரு தடவை பொம்மைகள்  செய்யப்படும் போதும் குறைவான பணம் கொடுக்கப்பட்டது. அதாவது முதலாவதுக்கு $3, இரண்டாவதுக்கு $2.70 என்பதாக. ஒரு குழுவின் உருவாக்கங்கள் முடிவின்போது கலைப்பதற்காக மேஜைக்கு அடியில் எடுத்து வைக்கப்பட்டன. மறுகுழுவின் உருவாக்கங்கள் அவர்கள் செய்ய செய்ய எடுத்து கலைக்கப்பட்டன. “தொடர்ச்சியாக அவர்கள் உருவாக்கியதை நாங்கள் கலைத்துக் கொண்டிருந்தோம்” என்கிறார் ஏரியலி.

முடிவுகள்: முதல் குழு 11 பயனிக்கள்களை செய்தனர். இரண்டாம் குழு 7 மட்டும் செய்தனர். பின் விலகிக்கொண்டனர்.

பெரிய மாற்றமெல்லாம் ஒன்றுமில்லை. தாம் செய்தவை யாவும் முடிவில் கலைக்கப்படும் என முதல் குழு அறிந்திருந்தாலும் தம் உழைப்பின் விளைவுகளை கண்ணால் காண்பது அவர்களை இன்னும் ஒரு படி  அதிகமாக உழைக்க ஊக்குவித்துள்ளது.

குறைவாக அங்கீகரிக்கப்படும் வேலைக்கு அதிக ஊதியம்

ஆய்வு:ஏரியலி MIT மாணவர்களிடையே ஓர் ஆய்வு மேற்கொண்டார். ஒரு காகிதத்தில் பல எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. திரும்ப எழுதப்பட்டிருக்கும் ஒரே எழுத்துக்களை கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் முதல் சுற்றைவிட குறைவான பணம் கொடுக்கப்பட்டது.

முதல் குழுவில் இருந்தவர்கள், காகிதத்தில் தங்கள் பெயர்களை எழுதி மேற்பார்வையாளரிடம் கொடுக்கின்றனர். அவர் மேலோட்டமாக அதைப் பார்த்து, அலட்சியமாக ஒர் “ஹூம்”மை உதிர்த்துவிட்டு கோப்புக்குள் வைக்கிறார்.

இரண்டாம் குழுவில் இருந்தவர்கள் காகிதங்களில் தங்கள் பெயர்களைக்கூட எழுதாமல் மேற்பார்வையாளரிடம் கொடுக்கின்றனர். அவற்றை அவர் ஒரு பார்வை கூட பார்க்காமல் அப்படியே கோப்புக்குள் வைக்கிறார்.

மூன்றாம் குழு மாணவர்கள் கொடுத்த காகிதங்கள் அப்படியே கிழித்தெறியப்படுகின்றன.

முடிவுகள்: கிழித்தெறியப்பட்ட காகிதங்களை எழுதிய குழு முதலாம் குழுவை விட இரட்டிப்பு பணம் வேண்டும் என எதிர்பார்த்தனர். வேலைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு கவனிக்கப்படாத இரண்டாம் குழுவும் கிட்டத்தட்ட மூன்றாம் குழு எதிர்பார்த்த அளவுக்கு பணம் எதிர்பார்த்தனர்.

“உழைப்பை உழைத்தவர்களின் கண் முன்னாடியே அழிப்பதற்கு நிகரானது அந்த உழைப்பை அங்கீகரிக்க மறுப்பதும்” என்கிறார் ஏரியலி.

கடின வேலை பெருமையை கொடுக்கிறது

ஆய்வு: ஓரிகமி (Origami) பற்றி தெரியாதவர்களிடம் காகிதத்தை கொடுத்து எப்படி செய்ய வேண்டும் என்ற விவரம் கூறிவிட்டு உருவங்களை உருவாக்க சொல்கிறார் எரியலி. பின் வேலை செய்தவர்களிடமும், வேடிக்கை பார்த்தவர்களிடமும் அந்த உருவாக்கங்களுக்கு எவ்வளவு விலை கொடுக்கலாம் என கேட்கப்பட்டது. இரண்டாவது தடவை பங்கேற்றோருக்கு எப்படி செய்ய வேண்டுமென்ற விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை. உருவாக்கங்கள் கடினமாகவும், அவலட்சணமாகவும் உருவாக்கப்பட்டது.

முடிவுகள்: முதல் சோதனையில், உருவாக்கியவர்கள் ஐந்து மடங்கு விலை கேட்டனர், இரண்டாவது சோதனையில், விளக்கங்கள் கொடுக்கப்படாமல். அவலட்சணமாக வந்த உருவாக்கங்களுக்கு, முதலில் உருவாக்கப்பட்டவைகளுக்கு கொடுக்கப்பட்ட விலையைவிட அதிக விலையை உருவாக்கியவர்கள் கேட்டனர். அதே சமயம் பார்வையாளர்கள் விலை குறைத்து கேட்டனர்.

நாம் செய்த வேலைக்கான மதிப்பை நாமே போடுகையில் அதற்கு செலவழித்த உழைப்பை முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோம் அதோடு, நாம் மதிப்பிடுவது போன்றே மற்றவர்களும் நம் வேலைகளுக்கு மதிப்பிடுவார்கள் என தவறாக நினைத்துக் கொள்கிறோம்.

அடுத்தவருக்கு உதவும் எண்ணம் விதிகளை பின்பற்ற வைக்கிறது

ஆய்வு: க்ராண்ட்(Grant) நடத்திய ஆய்வில், மருத்துவமனையின் கை கழுவும் இடங்களில் இரு வகையான வாசகங்களை வைக்கிறார். “கையை சுத்தமாக வைப்பதால் உங்களை நோய்கள் அண்டாது” என்பதாக ஒன்றும் “கையை சுத்தமாக வைத்திருப்பது நோயாளிகளை நோய்களிலிருந்து காக்கும்” என ஒன்றும்.

முடிவுகள்: மருத்துவர்களும், செவிலியர்களும் 45 சதவிகிதம் அதிகமான சோப்பை, நோயாளிகள் பற்றிய வாசகங்கள் இருக்கும் இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அடுத்தவர்களுக்கு உதவுவதால் சமூக ஆதரவு நடத்தையை (Prosocial Behaviour) நாம் கொள்கிறோம் என்ற எண்ணமே நம்மை அச்செயல்கள் செய்ய ஊக்குவிக்கிறது.

இந்தப் பதிவு TED வலைப்பூவில் ஏப்ரல் 2013-ல் பிரசுரிக்கப்பட்டது.

மூலம் – http://ideas.ted.com/what-motivates-us-at-work-7-fascinating-studies-that-give-insights/

தமிழில்- ராஜசங்கீதன்