மாணவர்களிடம் தங்களுக்குள் பேசும் போது இயல்பாக கேட்கப்படுவது “இந்த தேர்வு, வீட்டுப்பாடம் இதெல்லாம் யார் தான் கண்டுப்பிடித்தாரோ?” என்னும் சலிப்பான புலம்பலை.

https://theconversation.com/what-indian-parents-teach-us-about-helping-with-homework-24189
வீட்டுப்பாடம் அவசியமா? https://theconversation.com/what-indian-parents-teach-us-about-helping-with-homework-24189

தேர்வு, சரி அர்த்தமுள்ள புலம்பல் தான். வீட்டுப்பாடத்துக்குமா என யோசிக்கிறீர்களா? நமது காலம் வேறு. வீட்டுப்பாடம் செய்ததை விட மாலையில் விளையாண்ட நேரம் தான் அதிகமாக இருக்கும். ஆனால் மாறிவரும் கல்விமுறை தற்போது வீட்டுப்பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதை நம்மால் மறுக்க முடியாது. சராசரியாக ஒரு மேல்நிலை பள்ளி மாணவன் ஒரு வாரத்திற்கு 7 மணி நேரம் வீட்டுப்பாடத்திற்காக செலவிடுவதால், அது உண்மையிலேயே பயனுள்ளதாக தான் இருக்கின்றதா என்னும் கேள்வி எழுவது நியாயமாக தான் இருக்கின்றது.

ஆராய்ச்சி முடிவுகள்

உலகளவில் நடத்திய வீட்டுப்பாடம் பற்றிய ஆராய்ச்சியின் முடிவுகள் உங்களுக்கு வீட்டுபாடத்தின் மேல் உள்ள அபிப்பிராயத்தை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு அல்ல. அவை

  • வீட்டுப்பாடம் மேல்நிலை பள்ளி மாணவர்களிடம் நல்ல பயனையும், நடுநிலை பள்ளி மாணவர்களிடம் ஓரளவு பயனையும், ஆரம்பநிலை பள்ளி மாணவர்களிடம் மிகக் குறைந்த பயனையுமே அளிக்கும்.
  • வீட்டுப்பாடம் மதிப்பெண் அளவில் பயனுள்ளதாக இருப்பினும், குழந்தைகள் வீட்டில் பெற்றோருடன் செலவிடும் நேரத்தை அது வெகுவாக விழுங்கிவிடுகிறது.
  • அதிகப்படியான வீட்டுப்பாடம் செயல்திறனை குறைக்கும்.
  • மாணவர்களின் வீட்டுப்பாடம் செய்யும் திறன், அவர்கள் கட்டிற்குள் இல்லாத பல விஷயங்களை சார்ந்துள்ளது.

ஆக மொத்தத்தில் நமது நோக்கம் வீட்டுப்பாடம் தேவையில்லை என்பது  அல்ல. அதை பயனுள்ளதாகவும், மாணவர்களின் அறிவுக்கு வேலை குடுப்பதாகவும் மாற்றி அமைப்பதே ஆகும்.

பெற்றோர்களின் பங்கு

மிகச்சரியான வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளின் கல்வித் திறனை மட்டும் அதிகரிக்காமல் பெற்றோர்களுக்கும் பள்ளிக்கும் ஒரு பாலமாகவும் அமைகிறது. எப்படி என்று யோசிக்கிறீர்களா? வீட்டுப்பாடம் இருப்பதால் தானே உங்கள் குழந்தை என்ன பயிலுகிறது என்று உங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் நீங்கள் உங்கள் குழந்தையுடன் அதை பற்றி தினமும் பேசவும் ஒரு வாய்ப்பு அளிக்கிறது. இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்கள் பள்ளியை பற்றியும், படிக்கும் சூழ்நிலை பற்றியும் தெரிந்து கொள்கிறீர்கள். இது உங்கள் குழந்தைகள் சிறப்பாக கல்வி பயில நீங்கள் துணை நிற்கவும் வழிவகுக்கிறது.

என்னதான் இருப்பினும் ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் அல்லவா? அளவுக்கு அதிகபடியான பெற்றோரின் பங்கு, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எப்போதெல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உதவுவதாக எண்ணி அவர்கள் வேலையை தானே செய்து கொடுக்கின்றனரோ  அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை குறைக்கின்றனர். மேலும் குழந்தைகள் தானாக ஒரு செயலை திட்டமிட்டு செய்யும் திறனும் இதனால் இல்லாமல் போகின்றது.

உலகளவில் வீட்டுப்பாடம்

உலகளவில் மாணவர்களின் திறனை அளவிட பயன்படும் பிஇஎஸ்எ (PISA) எனப்படும் தேர்வை உருவாக்கிய பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு 2014 ஆம் ஆண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன் ஆராய்ச்சியின் படி உலகளவில் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு 5 மணி நேரம் வீட்டுப்பாடத்திற்காக செலவிடுகின்றனர்.  இதில் ஆச்சரியம் என்னவென்றால், பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் மாணவர்கள் 2-3 மணி நேரமே வீட்டுப்பாடத்திற்கு செலவிட்ட  போதும் அவர்களின் பிஇஎஸ்எ (PISA) தேர்வு மதிப்பெண்கள் அதிகபடியாக உள்ளது. இதற்கு காரணம் அவர்களது கல்விமுறை, வீட்டுப்பாடத்தை கொண்டு மட்டும் கற்கும் திறனை மேம்படுத்தாமல் இருப்பதே ஆகும்.

வீட்டுப்பாடத்தின் இரு முகங்கள்

உலகில் எல்லாவற்றிற்குமே நன்மையும் உண்டு தீமையும் உண்டு அல்லவா? வீட்டுப்பாடம் மட்டும் என்ன விதிவிலக்கா? வாங்க அதையும் ஆராய்வோமே..

வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்தால் தேர்வில் மதிபெண்கள் கூடும். பெற்றோர்களுக்கும் பள்ளிக்கும் உரிய பாலம் உறுதிபடும். தானாக பகுத்தறிந்து செயலாற்றும் திறன் கூடும். தன் வேலைகளை தானே திட்டமிட்டு செய்யும் பழக்கம் உருவாகும். கற்றவற்றை ஞாபகப்படுத்தும் சக்தி அதிகரிக்கிறது. மேலும் ஆசிரியரால் மாணவர்களின் முன்னேற்றத்தை கண்டுகொள்ள முடியும். இவை எல்லாம் உண்மைதான். ஆனால் நாளடைவில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ள பிணைப்பை அது பாதிக்குமா? ஆம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பெற்றோர்களுடன் செலவிடும் நேரம் குறைவது மட்டுமில்லாமல் குறைந்த தூக்கம், மனதளவிலும் உடலளவிலும் சோர்வு, படிப்பின் மீது ஆர்வக்குறைவு என பல பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. வீட்டுப்பாடத்தை செய்யாமல் இருக்கும் பட்சத்தில் அது நன்கு  படிப்பவர்கள், படிக்காதவர்கள் என்னும் (பிரிவினை /பாகுபாட்டை) உருவாக்குகின்றது. இதனால் ஏமாற்றுவதற்கும், பெற்றோரின் கட்டாயத்திற்கும் ஆளாகுகின்றனர்.    

வீட்டுப்பாடத்தின் அளவுகோல் தரமே, எண்ணிக்கை அல்ல

நீங்கள் வீட்டுப்பாடத்தை ஆதரிப்பவராக இருந்தாலும் சரி, இல்லை அதெல்லாம் வீணான நேரச் செலவு என எண்ணுபவரானாலும் சரி, ஆராய்ச்சியின்படி எது நடைமுறைக்கு சரிப்படும், எது சரிவராது என்பது தெள்ளத்தெளிவாக தெரிய வந்துள்ளது. அதனால் இப்போது கேள்வியே மாறுகிறது. இனி வீட்டுப்பாடம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி நாம் சிந்திக்க தேவையில்லை. வீட்டுப்பாடத்தை பயனுள்ளதாகவும், புலங்களை முழுமையாக பயன்படுத்துவதாகவும் கல்வித்திறனை ஆதரிப்பதாகவும் எவ்வாறு மாற்றுவது என்பதே நாம் சிந்திக்க வேண்டியதாகும். என்ன சரிதானே?

மூலம்- http://www.edutopia.org/blog/research-trends-is-homework-effective-youki-terada?utm_source=pinterest&utm_medium=link&utm_campaign=research-trends-is-homework-effective-youki-terada&crlt_pid=camp.lD20Nj8wFzzD

தமிழில்- ஜெயஸ்ரீ ரமேஷ்