http://images.htcampus.com/cmsmedia/uploads/ckeditor/Anand%20Kumar.jpg PIX By-RANJAN RAHI
http://images.htcampus.com/cmsmedia/uploads/ckeditor/Anand%20Kumar.jpg PIX By-RANJAN RAHI

(சூப்பர் 30 என்னும் நிறுவனத்தின் குரு,நிறுவனர் திரு.ஆனந்த குமார்  செய்யும் விமர்சனம் – ஐ.ஐ.டி.ஐயும் அதன் நுழைவுத்  தேர்வும் ; எந்தத் தேர்வுக்காக ஏழை மாணவர்களைத் தயார் செய்து, தொடர்ந்து வெற்றி காண்கிறாரோ அதைப் பற்றிய குமாரின் கடுமையான விமர்சனம் ).

” நான் ஒரு போதும் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு (IIT -JEE ) எழுதியதில்லை; அது பற்றியும் எனக்கேதும் விசனமுமில்லை “

ஆனால்  பல நூறு மாணவர்களை தயார் செய்து வெற்றியும் பெற உழைத்திருக்கிறேன் – வெற்றி பெற்று ஐ.ஐ.டியிலும் இடம் பெற்ற 333 மாணவர்கள் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த புத்திசாலிகள் – எனது சூப்பர் 30 வகுப்பில் தயாரானவர்கள். பலரும் இன்னும் என்னுடன் தொடர்பு கொண்டுள்ளனர், என்னிடம் அடிக்கடி தங்கள் படிப்பு,வேலை பற்றி கலந்து ஆலோசிக்கும் தகுதியால்,ஐ.ஐ.டி. பற்றி எனக்கு ஒரு தெளிவான பார்வை உண்டு. என்னை கவலை கொள்ளச் செய்வது சமீபத்திய நடப்புகளே.
இந்த தொடர் வெற்றி – பல பிரபல வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள்  பார்வையில் பட்டு, என்னை பேச அழைத்தும் இருக்கின்றனர் . அவ்வாறு நான் சென்ற உலகின் உயர்தரம்  வாய்ந்த பல்கலைக் கழகங்கள், அங்கு வகுப்புகள் எவ்வண்ணம் நடத்தப் படுகின்றன என்பதை நேரில் நுகரும் அனுபவம்  பெற்றேன். அத்தகைய பல கழகங்களில் நான் பொதுப் பண்பாக நான் உணர்ந்தது – அது ஹார்வர்ட் என்றாலும், எம்.ஐ.டி என்றாலும், டோக்கியோ பல்கலைக் கழகம் என்றாலும் சரி – மாணவர்களுக்கும்,பேராசிரியர்களுக்கும் இடையே இருக்கும் ஒரு நட்புணர்வு, மிக எளிதாக கலந்து உரையாடும், விவாதிக்கும் பண்பு , மிகக் கடினமான பாடமென்றாலும் எளிமையாக விரிவுரை அளிக்கும் பேராசிரியர்கள் – என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.
இதற்கு நேர் எதிர் ஐ.ஐ.டி அனுபவங்கள்: பெரும்பாலான மாணவர்கள் சொல்வது – போரடிக்கும், எந்த விளக்கமும் புரியாத வண்ணம் பேசுவதில் தேர்ந்த ஆசிரியர்கள், வெறும் புத்தகப் படிப்பே பொறியியல் படிப்பாக அமைந்துவிட்ட கொடுமை, கரும்பலகையும் சாக்பீஸும் மட்டுமே வருடங்கள் தோறும் மாறாது வரும் நிலை … இந்த வகுப்பில் அமரும் மாணவர்கள் பெரும்பான்மையினர் தங்கள் லேப்டாப்பில் வலைத்தளங்களை மேய்ந்து கொண்டும், வாட்ஸ்அப்பில் செய்திகள் பரிமாறிக்கொண்டும் பொழுதைக் கடத்துகின்றனர்.

ஐ.ஐ.டி என்பதன் புகழ்,பெருமை மங்கி வருவதையே இது காட்டுகிறது . எனக்குத் தெரிந்து  JEE -யில் உயர் ரேங் பெற்றவர்கள்  பலரும் பாதியிலே படிப்பை விட்டு விட்டு போகுமளவுக்கு (காண்க : பெட்டி செய்தி ) நிலைமை மோசமாக உள்ளது

இத்தனை புகழ் வாய்ந்த ஒரு அமைப்பு தன்னை சுய சோதனை செய்து ,காலப் போக்கிற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் பண்பை எப்போதோ கைவிட்டு விட்டது. மனிதவள மேம்பாட்டு அமைச்சரகமும் சரி, ஐ.ஐ.டி.நிர்வாகிகளும் சரி -அதன் பழம் பெருமையில் குளிர் காய்ந்தவண்ணம் பல ஆண்டுகள் வாளாவ இருந்துவிட்டனர் ; இன்று இடிந்து கொண்டிருக்கும் கோட்டைக்குள் இருக்கிறோம் என்பதைக் கூட உணரமுடியா அதி மேதாவிகள் இவர்கள் !.
உலகத்திலே மிகக் கடினமான நுழைவுத் தேர்வு என்றொரு பெயர் பெற்றுவிட்ட JEE – தற்போது தவறான கேள்விகள் தட்டுப்படும் நிலைக்கு வந்து விட்டது.சென்ற வருடம் 18 மதிப்பெண்கள்  பெறும் கேள்விகள் தப்பு என்பது கண்டுபிடிக்கப் பட்டு, அந்தக் கேள்விகளை அட்டெம்ப்ட் செய்த அனைத்து மாணவர்களுக்கும் 18 மதிப்பெண்கள் வழங்கும்படியானது . இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹிந்தியில் அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாளில் தவறுகள் இருந்தன .
ஐ.ஐ.டி என்றால் தவறுகளே இருக்காது என்ற நம்பிக்கையில், மூளையை கசக்கி விடை எழுதும் மாணவர்களை முகத்தில் கரி பூசும் நடவடிக்கை இது அல்லவா ? எத்தனை நேரம் வீணாக செலவிட நேரிடும் -மாணவர்களுக்கு ?
சென்ற வருடம் ஐ.ஐ.டி கள் அனைத்திலும் நிரம்பாத இருக்கைகள் எண்ணிக்கை 769; தேர்வு பெற்றும் சேர விருப்பம் இல்லா மாணவர்கள் இத்தனை பேர் என்பதை – அதுவும் 2005 இல் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்த தகவல் – ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இடம் பெறுவதைக் காட்டிலும் கடினமான ஒன்றாக இருப்பது நம் ஐ.ஐ.டி – அதன் இன்றைய இழிவு இத்தகையது . மேற்சொன்ன அனைத்து காலி இடங்களும் புதிதாகக் திறக்கப்பட்ட 15 ஐ.ஐ.டி களில் உள்ளவை என்பது தெளிவு; எந்த ஒரு கட்டமைப்பும் உருவாக்கப்படாமல்,வாடகைக் கட்டிடங்களில் அவசரக் கோலத்தில் அமைக்கப் பட்ட ஐ.ஐ.டிகள்  இவை .

தீடீரென புது ஐ.ஐ.டி க்கள் துவக்க வேண்டிய கட்டாயம் என்ன ?

http://flippaisa.com/blog/blog/2015/06/29/does-increase-in-no-of-iits-decrease-there-brand-value/
http://flippaisa.com/blog/blog/2015/06/29/does-increase-in-no-of-iits-decrease-there-brand-value/

ஐ.ஐ.டி என்னும் உயர் கல்விக் கூடம் – அதன் உள்ளமைப்பு சிதைந்து வருவதையே இது தெரிவிக்கிறது. நீண்ட காலமாக இருந்து வரும் 6 பழைய ஐ.ஐ.டிகள்  இந்த சீரழிவை இப்போது எதிர்கொள்ளாவிட்டாலும் வெகுவிரைவில் சந்திக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு – ஐ.ஐ.டி பட்டம் பெரும் மாணவர்கள் – பலரும் கைவசம் மூன்றோ, நான்கோ வேலை வாய்ப்புகள் பெற்று வெளிவந்தனர் ; எதைத் தேர்ந்தெடுப்பது, எதை விடுவது என்பதே மிகப் பெரிய சவாலாக இருந்த கால கட்டமிது. இன்று, வெளிவரும் மாணவர்களில் 35 சதவிகிதம் எந்தவொரு வேலையும் இன்றியே வெளிஉலகில் கால் பதிக்கின்றனர் .ஆனால் இதுபற்றிய கவலையோ , விசனமோ ஏதுமின்றி இருப்பது நமது மனித வள அமைச்சரகம்; பிரபல ஐ.ஐ.டி மாணவர் – இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி ” ஐ.ஐ.டி – அதன் பிராண்ட் மதிப்பை  இழந்துவிட்டது “ என்று சொன்னபோதே விழித்துக் கொள்ளாத நிர்வாகம் மற்றும் அமைச்சரகம், இப்போதா உரிய நடவடிக்கை எடுக்கும்? மனித வள அமைச்சரகம் UPA ஆட்சிக் காலத்தில் புதிய மாற்றம் கொண்டு வந்தது ; நிறைய கோச்சிங் வகுப்புகள் மூலமாக ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதைத் தடுக்கவே இந்த மாற்றம் என்று காரணம் சொல்லியது –  ஒரு தேர்வு என்ற நிலையை மாற்றி இரண்டு அடுக்குத் தேர்வுகள் என்பதே அது. ஆனால் நேரெதிராக விளைவுகள் ஏற்பட்டன. கோச்சிங் வகுப்புகள் பெருகின ( ஓரடுக்கு தேர்வு ஈரடுக்கு என்றால் ஆகும்தானே ). 12 ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண்களும் நுழைவுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் (முன்பு, 12 ஆம் வகுப்பு தேறினால் மட்டுமே போதுமானதாக இருந்தது ) என்று புதிய சட்டம் வந்ததால், மாணவர்கள் மூன்று நிலைகளில் கோச்சிங் வகுப்புகள் செல்லத் துவங்கினர் : 12 ஆம் வகுப்பு உயர் மதிப்பெண்கள் பெற ஒன்று ; ஐ.ஐ.டி மெயின் தேர்வு வெற்றி பெற இரண்டாவது; அதையும் கடந்து ஐ.ஐ.டி – அட்வான்ஸ் தேர்வு மூன்றாவது … இது குறித்து நான் மனித வள அமைச்சருடன் பேசினேன். எனது பேச்சு பெரும்பாலும் ஹிந்தியில் இருந்ததாலோ என்னவோ அமைச்சர் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை . இந்த புதிய ஈரடுக்கு தேர்வுமுறையின் குறைபாடுகள் என நான் கணிப்பது :

பல்வேறு மாநில கல்வி கட்டமைப்புகளில் இருந்து வரும் மாணவர்கள் – இவர்களில் உயர் 20 சதவிகித மதிப்பெண்கள்  பெற்றவர்கள் மட்டுமே இந்த புதிய முறையில் ஐ.ஐ.டி யில் இடம் பெற முடியும்

பல ஆசிரியர்களும் புரிந்துகொள்ள இயலாத வண்ணம் அத்தனைக் குழப்பமான உத்தி இது. என்னைப் பொறுத்த மட்டில் எந்த 12 ஆம் வகுப்பு மாணவனும் – 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவன் நுழைவுத் தேர்வு எழுத  அனுமதிக்கப் படவேண்டும் .

நுழைவுத் தேர்வு ஒரு மாறாத கட்டமைப்பில் இருப்பதில்லை. ஒருமுறை – இரண்டு பத்திகளில் இருப்பதைப் பொருத்திக் காட்டு என்றும், காலி இடங்களை நிரப்பு என்று சொற்றொடர்களும், கடினமான கணக்குப் புதிர்களும் என கலந்து கட்டி கேள்வித் தாள்கள் இருக்கின்றன (கோச்சிங் வகுப்புகளை தோற்கடிக்கும் நடவடிக்கையாம் இது !).

கேள்விகள் பலவும் ஒரு மாணவனின் அறிவை சோதிப்பதாக இல்லாமல், அவன் ஞாபக சக்தியை உசுப்பும் ஒன்றாகவே உள்ளது

http://www.careerindia.com/img/2013/11/27-jeeaspirants.jpg
http://www.careerindia.com/img/2013/11/27-jeeaspirants.jpg

இடைவிடாமல் இது போன்ற கேள்விகளை குறைவான நேரத்தில் பதில் எழுதத் தூண்டும் செய்கைகள் – கோச்சிங் வகுப்புகளின் ஆதார சுருதி இதுவே – வெற்றிபெற உதவும். உருப்போட்டு படிப்பவர்கள் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் இந்த புதிய முறையில் …

படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களையும், படிப்பே என்றால் வெறுக்கும் அளவுக்கு இந்தத் தேர்வு முறைகள் அமைந்துள்ளன

இவ்வாண்டு நடைபெற்ற JEE தேர்வில், ஒரு கேள்வியும் அதற்கான சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும்படி – நான்கு பதில்கள் வழங்கப் பட்டிருந்தன ; முந்தைய ஆண்டுகள் போல்தான் என்றாலும் இவ்வாண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான   இருந்தன. ஒரு உதாரணத்திற்கு – ஒரு கேள்வி – மூன்று சரியான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், அதில் மூன்றையும் குறிப்பிடும் மாணவன் முழு மதிப்பெண் – 4 பெறுவான்.  வேறொரு மாணவன் அதே கேள்விக்கு இரண்டு சரியான விடைகளைக் குறிப்பிட்டால், அவன் பெரும் மதிப்பெண் : மைனஸ் 2. இந்தக் கேள்வியை பதிலளிக்காமல் விடும் மாணவன் பெரும் மதிப்பெண் – 0 ; எனவே இரண்டு சரியான விடைகளைக் குறிப்பிட்ட மாணவன் தண்டிக்கப் படுகிறான் !

மதிப்பெண் வழங்குவது – ஒரு விடையை ஊகிப்பதைத் தவிர்க்கவே என்று சொல்கிறார்கள் ; அனால் நடைமுறை அவ்வண்ணம் இல்லை ; விஞ்ஞான பூர்வமாகவும் இல்லை.

பல கேள்விகள் பல பன்னாட்டு தேர்வு பேப்பர்களில் இருந்து ‘சுடப்பட்டு’ JEE- இல் இடம் பெறுகின்றன

கணித ஒலிம்பியாட் மற்றும் இயற்பியல் (physics) ஒலிம்பியாட் பேப்பர்களில் வந்தக் கேள்விகள் இங்கு பதிப்பிக்கப் படுகின்றன; அதில் கொடுமையென்ன வென்றால் ஒலிம்பியாடில் ஒரு கேள்விக்குத் தரப்படும் நேரம் 45 நிமிடங்கள் ; இங்கோ அதே கேள்விகள் மூன்றோ நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாகவே .

முந்தைய UGC சேர்மன் – பேராசிரியர் யஷ்பால் போன்ற மற்ற பிரபல பேராசிரியர்கள் பலரும் டீவி பேட்டியில் குறிப்பிட்டதைப் போல – கேள்வித் தாள்களை அமைக்கும் நபர்கள் அதே பேப்பரை அதில் குறிப்பிட்ட மூன்று மணி நேரத்தில் விடையளிக்கவே முடியாது .

மேற்சொன்ன காரணங்களால், ஐ.ஐ.டி நிர்வாகம் கேள்விகளின் சரியான விடைகளை மட்டுமே அவர்களின் வலைத்தளத்தில் பதிப்பிகின்றனர் ; தெளிவான விடையை அணுகிய வழிமுறை பதிப்பிக்கவே படுவதில்லை. நான் தகவல் அறியும் சட்ட உதவியுடன் விண்ணப்பம் அனுப்பினேன் – இன்றுவரை எந்த பதிலும் இல்லை.

இதில் இருந்து நான் கொள்ளும் முடிவாவது : ஒன்று – கேள்வி செட் செய்யும் ஆசிரியர்கள் பொறுப்பற்ற தன்மையோடு கேள்விகள் அமைக்கிறார்கள் ; இரண்டு-  மாணவர்களை கோச்சிங் வகுப்பு நோக்கி செலுத்தும் கயவாளித்தனம் .

ஒன்று மட்டும் உறுதி : ஐ.ஐ.டி – நகர்புற மாணவர்கள் ,நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பிரபல பள்ளிகளில் படிப்பவர்கள், புத்தகங்கள்,லேப்டாப்  என வாங்கிக் குவிக்கும் பணம் படைத்தவர்கள் ,கோட்டா (ராஜஸ்தான் )சென்று கோச்சிங் வகுப்பில் சேரும் வசதி கொண்டவர்கள்  – இவர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாக்கி விட்டது

கிராமப் புற மாணவர்கள், ஏழை என்றாலும் புத்திக் கூர்மை உள்ள மாணவர்களை தயார் செய்து ஐ.ஐ.டி க்கு அனுப்பிய வண்ணமிருக்கும் நான் சொல்வது இதுதான் : ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்திற்காக ஒதுக்கப்படும் இந்த ஏழை புத்திசாலி மாணவர்கள் ஐ.ஐ.டி வாழ்க்கைக்கு ஒத்துப் போகப் படும் பாடு நான் அறிவேன் ; இதே வகைத் துன்பம் – சைனா, ஜப்பான், பிரான்ஸ்,ஜெர்மனி தேசத்து மாணவர்கள் பக்கம் எட்டிக் கூடப் பார்ப்பதில்லையே ? யோசிக்கவும் …

பெட்டி செய்தி : 

2006 ஆம்  நடைபெற்ற JEE இல்  முதலிடம் பெற்ற மாணவன் – ரகு மகாஜன் . ஐ.ஐ.டி டெல்லியில் சேர்ந்து இரண்டாண்டு படித்தபின் ,படிப்பைக் கைவிட்டு, 2008 ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்று எம்.ஐ.டி இல் சேருகிறான்.  வெற்றிகரமாக படிப்பை முடித்து தற்போது ஸ்டான்போர்ட்  கழகத்தில்  ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறான். ஐ.ஐ.டி மற்றும் எம்.ஐ.டி  பற்றிய ஒரு ஒப்பீடு 

ஐ.ஐ.டி விடுதி வாழ்க்கை கொடுமையானது. ஒரு சிறிய அறையில் மூன்று பேர். குளியலறைகளும் கழிப்பிடங்களும்  மகா மட்டம்; பலமுறை விடுதி மெஸ்ஸில்  குடிநீர்  அசுத்தமாகி பலமாணவர்கள் வயிற்றுக் கோளாறால்  அவதிப்பட நேர்கிறது. விடுதியே இந்த கதியில் இருந்தால் படிப்பு எப்படி சிறக்கும் ?
முதல் வருடம் எல்லா பிரிவு மாணவர்களுக்கும் ஒரே சிலபஸ்தான்; அனைத்து  கோர்ஸும்  கட்டாயம் எல்லோரும் படித்தே தீரவேண்டிய ஒன்று – விருப்பமான  பிரிவு, பாடங்கள் என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை. முதல் செமஸ்டரில் கணிதம் மற்றும் இயற்பியல்  பாடங்கள்  கற்பிக்க  பயன்படுத்தும் புத்தகங்கள் – எம்.ஐ.டி யில்  மூன்றாம் அல்லது நான்காம் ஆண்டு  மாணாக்கர்கள்  (அதுவும் கணிதமோ,அல்லது பிசிக்ஸ் மேஜராகக் கொண்ட BS பட்ட மாணாக்கர்கள்) பயன்படுத்துவது. முதலாமாண்டு எம்.ஐ.டி வேதியல் பாடங்கள் – நாங்கள்  JEE க்காக தயார் செய்தபோது படித்தவை; இதன்  மூலம் ஐ,ஐ.டி யே  சிறப்பு என்று நான் சொல்லவில்லை . தேவையே இல்லாத  உயர்நிலைப்  பாடங்கள்  – மாணவர்களை உருப்போடவே செய்தது  ஐ.ஐ.டி யில்.
எம்.ஐ.டி யில் மிக விரிவான  விருப்பப் பாடங்கள் தேர்வு செய்துகொள்ளும் வசதி முதல் செமஸ்டரிலே ஆரம்பமாகிறது .  பட்டம் பெறத் தேவையான  கோர்ஸ்களில் – ஒரு செமஸ்டருக்கு நான்குதான் ; அதிலும் இரண்டு – நாம் எந்தத் துறையில் மேஜராக உள்ளோமோ  அதற்கு சற்றும் சம்பந்தமே இல்லாத பிற துறைகள்  பற்றி கற்க வேண்டும் .
ஒரு சராசரி மாணவன் கிரகிக்கக் கூடிய அளவில்தான் பாடங்கள், செய்முறைகள் அமையும். புத்திசாலி  மாணவர்கள் அதற்கும் மேல்  செல்ல, அனுபவம் பெற  வாய்ப்புகள் எப்போதும் இருக்கும். எந்தத் துறையிலும் ஒரு விசாலமான  அறிவு பெறும்வகையில்  பாடங்களும் தேர்வுகளும் அமையும்.
ஐ.ஐ.டி யில்  சோதனைக் கூடங்களில்  நடத்தப் பெறும் கோர்ஸ்கள்  மிக சிலவே; வகுப்பு அறை கோர்ஸ்கள்தாம் அதிகம். பொறியியல் துறைகளில் ஒரு மாணவன்  கையில் கீரிஸ் கறையுடன் வேலை செய்து, ஒரு கருவியை  பிரித்து ஆய்வு செய்யும், கற்றுக் கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு !
ஐ.ஐ.டி ஆசிரியர்கள் ஆராய்ச்சி துறையில்  சற்றும் பரிச்சயம் இல்லாதவர்கள். டெல்லி ஐ.ஐ.டி இல்  பிஸிக்ஸ் துறை சார்ந்த ஆசிரியர்கள் அனைவரும் அதே துறையில் வேலை செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் ; வெளி பல்கலைக் கழகங்கள்,வெளிநாட்டு  பல்கலைக் கழகங்கள்- இங்கிருந்து வந்திருந்தால் ஒரு வேளை புதிய சூழல் உருவாக வாய்ப்பு இருந்திருக்கும். 
 
மூலம்- http://www.outlookindia.com/article/isnt-iit-obvious-stupid/294651
தமிழில்- சங்கர் கணபதி