http://2.bp.blogspot.com/-sbmBhbfCFyY/UQfZSoEBF9I/AAAAAAAAADc/-Ip9t0OuQ48/s1600/DSC_0111-2.jpg
http://2.bp.blogspot.com/-sbmBhbfCFyY/UQfZSoEBF9I/AAAAAAAAADc/-Ip9t0OuQ48/s1600/DSC_0111-2.jpg

 

பதின்வயதினர் வளர்ப்பில் உள்ள சிரமங்களையும் தேவைகளையும் பற்றி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்துள்ளனர்.

பெண்ணின் மனதைவிட மர்மமானது டீனேஜ் பருவம்

ஒரு குழந்தை எப்போது கண்ணாடியை பார்த்து தன்னைத்தானே அலங்கரித்துக்கொள்கிறது என கவனித்திருக்கிறீர்களா? பெற்றோர் தலை வாரி விடுவதை தவிர்க்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் அதுவே தன் தலையை வார ஆரம்பிக்கும். அந்த காலத்தில்தான் அதன் சுயம் வடிவமைய தொடங்குகிறது. தலைவாருவதில் தொடங்கி தன் வாழ்க்கையை தன்னால் அமைத்து கொள்ள முடியுமென்கிற எண்ணம் அதற்கு ஏற்படுகிறது பாருங்கள், அதுதான் டீனேஜ் பருவம்.

இன்றைய சமூகச்சூழல் முன்னெப்போதையும்விட வேகம் கொண்டிருக்கிறது. அதிக தொழில்நுட்ப பரிச்சயம், நுகர்வு கலாச்சாரம், உலகமயமாக்கல் போன்றவற்றை நம் தலைமுறைதான் முதன்முதலாக எதிர்கொள்வதால், இவற்றினூடாக பதின்வயதினரை வளர்ப்பதில் ஏராளமான குழப்பங்களை சந்திக்கிறோம்.

“நல்ல சேதி என்னவென்றால், பதின்வயதினர் தங்கள் வாழ்க்கைகளில் இன்னும் பெற்றோரின் பங்கை மறுக்கவில்லை என்பதுதான்” எனக் கூறும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் நான்ஸி ஹில் (Nancy Hill) தொடர்ந்து, “இந்த பங்கு ஈகோ பிரச்சினையாகவோ அதிகாரப் போட்டியாகவோ ஆகிவிடக்கூடாது. தங்கள் பதின்வயது பிள்ளைகள் முயல, வெல்ல அல்லது தோற்க ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் அந்தப் பருவத்திலான அவர்கள் வளர்ச்சிக்கு பெற்றோர்கள் மாத்திரமே காரணமாக இருக்கப் போகிறார்கள்” என்கிறார்.

பாதுகாப்பான சுதந்திரம்

“இது பாதுகாப்புக்கு வலையை பயன்படுத்துவது போல்” என்கிறார் ஹில். அதாவது அனைத்தையும் பிள்ளைகளை செய்யவிட்டு எட்ட நின்று பார்க்க வேண்டும். முயற்சிகள் பல எடுக்கட்டும். தோற்கட்டும். திரும்ப முயலட்டும். ஓடிப்போய் நீங்கள் உதவாமல், அவர்களை செய்யவிடுங்கள். தேவைப்பட்டால் உதவி கேட்பார்கள். அப்போதும் நேரடி உதவியாக அல்லாமல் என்னவெல்லாம் செய்யலாம் என வாய்ப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் எடுத்துக்கூறுங்கள். ஆராய்ந்து அவர்களாகவே முடிவெடுக்க அனுமதியுங்கள். அவர்களின் சுயம் வளர வாய்ப்பு கொடுங்கள்.

வீட்டுச்சூழலை மாற்றுங்கள்

வீட்டுப்பாடங்களை உள்ளடக்கும் வீட்டுச்சூழலை பெற்றோர் உருவாக்க வேண்டும். சிறிது நேரம் படிப்பு , சிறிது நேரம் இளைப்பாறல் என. படிப்பை வளர்க்க உதவும் குடும்ப நடவடிக்கைகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்த சூழல் பதின்வயதினரின் சுயத்தை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும். உதாரணமாக, அவர்கள் வீட்டுப்பாடம் செய்யும்போது, பெற்றோர் அதில் ஈடுபடக்கூடாது என்கிறார் ஹில்.

“உங்கள் பிள்ளை தோற்பதை பார்க்க முடியாதுதான். அவர்களால் கண்டிப்பாக முடியும் என நீங்கள் நினைக்கும் பட்சத்தில், அவர்களாக உதவி கேட்காத வரை செல்லாதீர்கள். தம் செயல்களின் விளைவுகளை புரிந்துகொள்ள அவர்களுக்கு இது உதவும். உதவி தேவைப்படும் தருணங்களை கணிக்கவும் கற்றுக்கொள்வார்கள்.” என்கிறார்.

படிப்பை லட்சியத்துடன் இணையுங்கள்

தங்கள் பிள்ளைகளின் கல்லூரிப்படிப்பை கல்விப்பருவ சாதனையாகத்தான் பெற்றோர்கள் புரிந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்கையில் தற்போதைய படிப்பு எதிர்காலத்தில் எப்படி பயன்பட போகிறது என்பதை பிள்ளைகளுக்கு புரிய வைப்பது நலம். அவர்களின் எதிர்கால லட்சியங்கள், இப்போதைய படிப்பில் அவற்றின் தொடர்பு போன்ற உரையாடல்கள் மூலம் ஊக்கத்தையும் புரிதலையும் பெற்றோர்கள் ஏற்படுத்தலாம்.

அரவணைப்பு கொடுங்கள்

ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வின்படி, மாணவர்களின் பள்ளிக்காலம் அவர்களுக்குள் ஏற்படுத்தும் கற்றல் மற்றும் உளவியல் சிரமங்களை பெற்றோரின்  அரவணைப்பு நீக்குகிறது. பெற்றோரை பிள்ளைகள் பிரிந்திருந்தாலும் இப்பலன் இருப்பதாகவும் கூறுகிறது.

ஹில் மேலும் சொல்கிறார்: “பிள்ளைகள் பெற்றோரை விட்டு சற்று விலகியிருக்க விரும்புவது தங்களை அவர்கள் அங்கீகரிக்க வேண்டியதில்லை என நினைப்பதால் அல்ல. பதின்வயதினர் வளர்ப்பு கள்ளிச்செடியை அணைப்பது போல். நாம் பாசத்தை வெளிப்படுத்தும் தருணங்களை பிள்ளைகள் பொருட்படுத்தாது போனாலும் அவர்களுக்கு பாசம் தேவை. அன்பு பொழிய நாம் இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தியபடி இருக்க வேண்டும். எவ்வளவு சிக்கலான பிள்ளையாக இருந்தாலும் அன்பு, அரவணைப்பு போன்றவற்றை அளிப்பதற்கான வாய்ப்புகளை தவறவிட்டு விடாதீர்கள்.”

மூலம்- http://ww2.kqed.org/mindshift/2015/06/23/as-teens-push-away-what-can-parents-do-to-support-success/

தமிழில்- ராஜசங்கீதன்