உங்களுக்கு ப்ளாக்(blog) எழுதுவது பிடித்திருக்கலாம். இன்னும் பிற கலைகளிலும் ஆர்வம் இருக்கலாம், இவற்றைக் கொண்டு வாழ்க்கை ஓட்டுமளவுக்கு பணம் சம்பாதிக்க முடியுமா?. இவைகளை மட்டும் பிழைப்பாக எடுத்து செய்ய ஆரம்பித்தால் சோறு கிடைக்குமா? இதுவே தங்கள் ஆர்வத்தை பின் தொடர நினைப்பவர்களுக்கு எழும் மிகப் பெரிய கேள்விகள்.

http://scroll.in/article/737961/how-to-be-a-writer-without-giving-up-your-full-time-job
http://scroll.in/article/737961/how-to-be-a-writer-without-giving-up-your-full-time-job

காஃப்காவிலிருந்து லூயிஸ் கேரோல் வரை அனைத்து எழுத்தாளர்களுக்கும் இதே பிரச்சினைதான். பிழைப்புக்கான வேலையும் தேவை. அதே சமயம் உங்கள் மனதிற்குகந்த வேலையும் செய்ய வேண்டும். இந்த இரண்டு குதிரைகளையும் எப்படி ஒரு சேர ஓட்டுவது? எனக்கு தெரிந்த உத்திகள் சிலவற்றைக் கூறுகிறேன்.

உங்களின் கலையார்வத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு நிலையான பகல் வேலையை தேடி கொள்ளுங்கள். அடுத்து, உங்கள் வாழ்முறையை பிறரிடமிருந்து சற்று வேறுபடுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் வேலையை வளர்ச்சிக்கான கருவியாக மாற்றுங்கள்

15 வருடங்களுக்கு முன்னால் நான் இருந்தது ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சிக்கு அருகிலிருக்கும் மெஸ்ராவில்தான். ஆனால் அதன்பின், ஃபிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா என பல நாடுகளுக்கு சென்றுவிட்டேன். அனைத்துக்கும் காரணம் எனது பன்னாட்டு நிறுவன வேலைதான். எல்லா பயணங்களும் எண்ணற்ற புரிதல் சாத்தியங்களை கொடுத்தன. அபரிமிதமான கலாச்சார பரிமாற்றங்கள், தனிமை, வசதியின்மை எனப் பல புரிதல்கள். என் ஊரில் கிடைத்திருக்க முடியாத பல அனுபவங்களை இந்த பயணங்களினூடாக பெற்றேன்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றில் கவனம் செலுத்துவதால் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள், அது தரும் மற்ற முக்கிய பலன்களில் கவனம் செலுத்த தவறுகிறார்கள். தங்களின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டுவதற்கான வாய்ப்பு கிட்டும்போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிநாட்டுப் பயணம் மிரட்சியைக் கொடுக்கலாம். ஆனால் யாருக்கும் கிடைக்காத அனுபவத்தைக் கொடுக்கும். உங்கள் மனம் புது அனுபவங்களால் நிறையும். அவ்வனுபவங்கள் அவற்றுக்கான மட்டத்தை அடைந்தபின் பீறிட்டு, வெளியேற வேறு வழியின்றி ஒரு கலை வடிவத்தை கண்டிப்பாகக் கையில் எடுக்கும்.

அலுவலக விருந்துகளை தவிர்க்கவும்

பி-ஸ்கூலில் படித்த பன்னிரெண்டு வருட காலத்தில் நான் கவனித்தது ஒன்றைத்தான். தத்தம் துறைகளில் உயர்ந்த இடங்களை அடைந்தவரெல்லாம் தாங்கள் செய்யும் வேலையை அர்ப்பணிப்புடன் செய்தவர்கள். உங்கள் வேலையில் சிறந்தவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் அடுத்தவரை பற்றி புறம் பேசுவது, அலுவலக அரசியலை விவாதிப்பது போன்ற சின்னத்தனமான செயல்களை செய்யாதீர்கள். அலுவலக விழாக்களிலும் சமூகத் தொடர்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்பவர்கள் விலைமதிப்பற்ற தம் நேரத்தை விரயமாக்குகிறார்கள் என்றுதான் சொல்வேன். அந்த நேரத்தை தனக்குள்ளிருக்கும் கலையார்வத்தை வளர்த்தெடுக்க அவர்கள் பயன்படுத்தலாம்.

செய்யும் வேலையை முழு மனதாக செய்யத் தயங்காதீர்கள்

இப்படி சொல்வதை அதிக நேரம் நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்பதாக புரிந்துகொள்ள வேண்டாம். இதன் அர்த்தம், உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைத் தாண்டி நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதுதான். உங்கள் துறையில் ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள். உங்கள் வேலையை பாதிக்கக் கூடிய சிறு சிறு கலாச்சார போக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் நிறுவனத்தில் நீங்களல்லாமல் மற்றவர்கள் செய்யும் வேலைகளையும் கவனியுங்கள். ஏனெனில் மற்றவரைப் போல உங்களுக்கு இடப்பட்ட வேலையில் மட்டும் மூழ்காமல், நடப்பவைகளை ஆராய்ந்து புதுச் சிந்தனைகளை உருவாக்கித் தருவதால், நீங்கள் தனித்து தெரியலாம்.

ஒரு சிறு ஓய்வுக்கு விண்ணப்பியுங்கள்

தேவையான அளவுக்கு அனுபவங்களையும் பணத்தையும் சேர்த்தபின் நிறுவனத்திடம் சிறு ஓய்வுக்கு விண்ணப்பியுங்கள். நீங்கள் கடினமாகவும் சுறுசுறுப்பாகவும் வேலை பார்த்திருந்தால், 99% உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் இந்த சிறு ஓய்வு அவசியம்தானா? ஆம், அவசியம்தான். The Seeker-ஐ எழுதியபோதுதான் இதை நான் உணர்ந்தேன். எந்த தொந்தரவும் இல்லாமல் உங்கள் விருப்பமான வேலை பார்க்கும்போது, அதன் உருவாக்கம் இயல்பாக நிகழும் அழகை நீங்கள் காணலாம். அதுவே அதன் முழுமையை உங்கள் வழியாக அடைந்து பரிமளிக்கும். விடுப்பு எடுத்து உங்கள் கலையார்வத்தை, விருப்பத்தை பூர்த்தி பண்ணுவதற்கு பெரும் தைரியம் வேண்டும். ஏனெனில் சிக்கலற்ற பாதுகாப்பு வளையத்தை உடைத்து சாகசம் நிறைந்த மிகை யதார்த்தத்துக்குள் அப்போது நீங்கள் வருகிறீர்கள்.

தன்னிச்சையான முடிவுகள் எடுக்க பழகுங்கள்

உயர்ந்த நோக்கங்கள் இருந்தாலும் பிழைப்பையும் கலையையும் ஒருங்கே கட்டி மேய்ப்பதற்கு லாவகம் தேவை. இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும். தொடர்ச்சியாகவும் நிகழ வேண்டும். சாமானிய மனிதர்கள் ஒற்றை வாழ்க்கை வாழவே சிரமப்படும் காலத்தில், நீங்கள் இரட்டை வாழ்க்கை வாழ்கிறீர்கள். எனவேதான், மந்தை மனோபாவத்திலிருந்து விடுபட்டு தன்னிச்சையான முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும்.

கரன் பஜாஜின் புதிய நாவலான, The Seeker-ஐ Penguin Random House India பிரசுரித்திருக்கிறது.

மேலும் படிக்க: http://scroll.in/article/737961/how-to-be-a-writer-without-giving-up-your-full-time-job

தமிழில்- ராஜசங்கீதன்