http://www.fastcompany.com/3048850/how-to-be-a-success-at-everything/how-to-dramatically-improve-your-memory
http://www.fastcompany.com/3048850/how-to-be-a-success-at-everything/how-to-dramatically-improve-your-memory

 

கடைக்குள் நுழைந்துவிட்டு எதையோ வாங்க வந்தோமே என யோசித்திருக்கிறீர்களா? தெருக்களில் அறிமுகமாகும் நண்பர்களிடம் பேசிவிட்டு சற்று தூரம் நடந்தபின் ‘என்ன பெயர் சொன்னார்?’ என கூட யோசிப்போமே? ஏன் தெரியுமா?

‘மெட்யூல்லோ ப்ளெம்னோஃபிஸியஸ்’ என்கிற மறதி நோய்தான் காரணம். மூளையை தாங்கி நிற்கும் மெட்யுல்லா ஆப்லங்கட்டா என்னும் பகுதியிலுள்ள குறைந்த நேர ஞாபக பதிவு அமைப்பு சிக்கல் அடைகையில் இந்த பிரச்சினை நேர்கிறது. 

இப்படி எதாவது சொன்னால் கூட மக்கள் நம்பிவிடுவார்கள். ஆனால் மறதியெல்லாம் இதற்கு காரணம் அல்ல. ஞாபக சக்தியை பயன்படுத்துவதற்கான பயிற்சியின்மைதான் காரணம் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இதுதான் உண்மை.

நான் சொன்னால்தான் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். இதையே பிழைப்பாக வைத்திருக்கும் ஞாபக சக்தி பயிற்சியாளர் ஹேரி லோரேய்ன் (Harry Lorayne) சொன்னால்? அவர் எழுதிய How to Develop A Super Power Memory என்கிற புத்தகத்தில் கூறுகிறார்: “மறதி என்றெல்லாம் ஒன்றுமில்லை. பயிற்றுவிக்கப்பட்ட ஞாபக மனம், பயிற்றுவிக்கப்படாத ஞாபக மனம் என்றுதான் இருக்கிறது”

உங்களுக்கு மறதி இருக்கிறது என நீங்கள் சொன்னால் உங்களுக்கு படைப்புத்திறன் இல்லை என சொல்வதாகத்தான் அர்த்தம். ஏன் தெரியுமா?

டோனி புசான் (Tony Buzan) என்னும் கல்வி ஆலோசகர் ஞாபக மனதை பற்றி இவ்வாறு சொல்கிறார்: ஞாபக சக்தியை பொதுவாக குருட்டு மனப்பாடம் என்றுதான் புரிந்து வைத்திருக்கிறோம். அதாவது, உங்கள் மூளையை முழுக்க தகவல்களால் நிரப்பி வைப்பதென. உண்மை என்னவெனில், ஞாபக சக்தி என்பது படைப்பு சம்பந்தப்பட்டது. சொல்லப்போனால், கற்றல், ஞாபகம் மற்றும் படைப்பு அனைத்தும் அடிப்படையில் ஒன்றுதான். நோக்கங்கள் மட்டும்தான் வேறுவேறு.

உங்கள் ஞாபக சக்தியை ஒரு படைப்பு வேலையாக கருதுங்கள்

சற்று யோசித்து பாருங்கள். ஞாபகம் என்பது என்ன? ஒரு விஷயத்தை மனதில் பதிவு செய்து வைத்துக்கொள்வது. படைத்தல் என்பது என்ன? பதிவு செய்த தகவலை பயன்படுத்தி ஒரு விஷயத்தை படைப்பது. மூளையின் ஒரே பகுதிதான் இரண்டுக்கும் பயன்படுகிறது.

அதனால்தான் மாத்திரை, கீரையைவிட படைப்பு பயிற்சிகளை பயன்படுத்துதல் ஞாபக சக்தியை வளர்க்க உதவும். சில பெயர்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமெனில் அப்பெயர்களை கொண்டு சம்பந்தமில்லாத ஒரு கதையை உருவாக்கிக் கொள்ளுங்கள். கண்டிப்பாக பெயர்களை மறக்க மாட்டீர்கள். இதுபோன்ற உத்திகள் அதிக நேரம் பிடித்தாலும் அவற்றின் சுவாரஸ்யம் நம்மை சோர்வடைய செய்யாது. மற்ற உறுப்புகள் பயிற்சியில் உறுதியடைவதுபோலத்தான் மூளையின் ஞாபக மனமும் பயிற்சியில்தான் வலுவாகும்.

அதிக படைப்புத்திறன் அதிக ஞாபக சக்தி கொடுக்கும்

லுக்கா லேம்பரியெல்லோ (Luca Lampariello) 10 மொழிகள் பேசும் திறன் படைத்தவர். அவரை பொறுத்தவரை எதை ஞாபகம் வைத்துக்கொள்கிறோம் என்பதுதான் ஞாபகத்தின் ஆயுளை தீர்மானிக்கிறது. அதாவது உள்ளடக்கம். உதிரி தகவல்களை மூளை ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. அதுவே கதைகளை, அவற்றின் உள்ளடக்கம் கொண்டு சுலபமாக மனம் ஞாபகம் வைத்துக்கொள்கிறது. ஏனெனில் காரணம் கொண்டுதான் மூளை ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளும். உதிரி தகவல்களில் காரணங்கள் இருப்பதில்லை. அவற்றுக்கு ஒரு கதையை உருவாக்கி பாருங்கள். வெகு அழகாக ஞாபகத்தில் நிற்கும்.

அனர்த்தமான கற்பனைகள் கதைகளைவிட சிறந்தவை

வினோதமான காட்சிகள் கொண்ட கற்பனைகளை எளிதாக மனம் உள்வாங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு மொழியை கற்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு காட்சியை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு பட்டியலை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமெனில் ஒரு பயங்கரமான கதையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக பவர் சோப்பும் டிவி ரிமோட் பேட்டரியும் அம்மா வாங்கி வர சொன்னால், பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் ஆஸ்கர் விருது வாங்குவதை டிவியில் நீங்கள் பார்ப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். சத்தியமாக மறக்காது.

நியூ யார்க் டைம்ஸ்ஸில் ஃபோயர் (Foer) சொல்கையில், “அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் சாதாரண பொருட்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதில்லை. அதுவே, வித்தியாசமான, நம்பமுடியாத, சிரிப்பு வரவழைக்கக்கூடிய விஷயங்களை கேள்விப்பட்டால் ஞாபகத்தில் நீண்ட காலம் வைத்திருக்கிறோம்” என்கிறார்.

உணர்ச்சி மிகுந்த கதைகள் இன்னும் சிறந்தவை

ரொம்ப வலுவான நினைவு என்ன என்பதை யோசித்து பாருங்கள். அது கண்டிப்பாக ஒரு வலுவான உணர்ச்சியில் விளைந்ததாக இருக்கும். நகைச்சுவை, பரவசம் போன்றவொரு உணர்ச்சியாக இருக்கும்.

1969ம் ஆண்டில் இது சம்பந்தமாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஜேம்ஸ் ஜென்கின்ஸ்ஸும் (James Jenkins) தாமஸ் ஹைட்டும் (Thomas Hyde) மாணவர்களை இரு குழுக்களாக பிரித்துக்கொண்டனர். இரண்டு குழுக்களுக்கும் ஒரே வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. தேர்வுக்காக அந்த வார்த்தைகளை மனப்பாடம் செய்யுமாறு ஒரு குழுவிடம் சொல்லப்பட்டது. இரண்டாம் குழுவில் அந்த வார்த்தைகள் தேர்வுக்கல்ல என சொல்லப்பட்டது. மேலும் முதற்குழுவில் ‘E’ எழுத்து வரும் வார்த்தைகளை ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி சொல்லப்பட்டது. மற்றதில் ஒவ்வொரு வார்த்தையும் நன்றாக இருக்கிறதா இல்லையா எனப் பார்த்து சொல்லும்படி சொல்லப்பட்டது. தேர்வு இருப்பதாக சொல்லப்பட்ட மாணவர்களின் ஞாபக சக்தியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்கவில்லை.

நன்றாக இருக்கிறதா இல்லையா எனப் பார்க்க சொன்ன மாணவர்களிடம் பெருமளவில் முன்னேற்றம் இருந்தது. அந்த வார்த்தைகளை அவர்கள் பல விஷயங்களுடன் பொருத்தி தம் கற்பனைத் திறன் கொண்டு முயன்றதே அதற்கு காரணம்.   

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அரவிந்த்சாமி ஒரு முறை கலந்துகொண்டார். பிரகாஷ்ராஜ் கேட்டுக்கொள்ள அரவிந்த்சாமி ஒரு விளையாட்டு விளையாடுவார். இருபது வீட்டுப்பொருட்களை ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தி பிரகாஷ்ராஜ் எழுதிவைத்துக்கொள்வார். ஒருமுறை அர்விந்த்சாமிக்கு பட்டியலை படித்து காண்பிப்பார். ஒரு முறைதான். பிறகு, குறுக்கும் நெடுக்குமாக பிரகாஷ்ராஜ் கேட்கும் எண்களுக்கு உரிய வீட்டுப்பொருட்களை அர்விந்த்சாமி சொல்வார். எங்கும் பிழையில்லை. மனிதர் பிரமாதப்படுத்தியிருந்தார். எப்படி தெரியுமா?

நூறு வரை எண்களுக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் எதையாவது அர்விந்த்சாமி மனதில் வைத்திருப்பாராம். விளையாட்டின்போது சொன்ன பொருட்களை அக்காட்சிகளுடன் பொருத்திக் கொள்வாராம். அதாவது பத்தாம் நம்பருக்கு அவருடைய கீ அல்லது காட்சி, கூவம் நதி. பிரகாஷ் ராஜ் பத்தாம் எண்ணின் பொருளாக சொன்னது கம்ப்யூட்டர். அர்விந்த்சாமி அதை கூவத்தில் மிதக்கும் கம்ப்யூட்டர் என மனதில் எண்ணிக்கொண்டாராம். பத்தாம் நம்பர் கேட்கப்பட்டதும் மனதில் கூவம் வந்துவிடும். கூவத்தில் கம்ப்யூட்டர் மிதப்பது ஞாபகம் வரும். அப்படித்தான் அவர் ஞாபகம் வைத்துக்கொள்வாராம். அவர் நடிகர் மட்டுமள்ள ஒரு ஆன்ட்ரப்ரனாரும்கூட என்பதை கவனிக்க வேண்டும். ஆகவேதான் ஞாபகம் படைப்பை சார்ந்தது என சொல்கிறோம். இதை புரிந்துகொண்டால், நீங்களும் அர்விந்த்சாமி ஆகலாம்!  

மூலம்- http://www.fastcompany.com/3048850/how-to-be-a-success-at-everything/how-to-dramatically-improve-your-memory

தமிழில்- ராஜசங்கீதன்