http://images.idiva.com/media/photogallery/2014/Sep/teens1.jpg
http://images.idiva.com/media/photogallery/2014/Sep/teens1.jpg

எல்லாப் பெற்றோரும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டுமென திட்டங்கள் வைத்திருக்கின்றனர். கட்டுப்படுத்துதல், சுதந்திரமாக விடுதல், நண்பர்களாக பழகுதல் எனப் பல திட்டங்கள். குழந்தைகளாக இருக்கும்வரைதான் இத்திட்டங்கள் எடுபடுகின்றன. பதின்வயதை குழந்தை அடைந்தபின், அதன் மாற்றங்கள் பெற்றோர்கள் கணித்திராத புதுப் பரிமாணங்களில் இருக்கின்றன என்பதுதான் உண்மை. அங்கே பெற்றொர்கள் தடுமாறுகின்றனர். தனது திட்டங்கள் தப்பாகிவிட்டனவோ என எண்ணுகின்றனர். குழந்தைகள் மீது வைத்திருந்த நம்பிக்கையை மெல்ல மெல்ல விலக்க ஆரம்பிக்கின்றனர். நிலைமை இன்னும் சிக்கலாகுகிறது.

குழந்தை என்பது எப்படி ஒரு தனிப்பட்ட உயிரோ அதே போல் அது ஒரு ஈகோவும் (ஆளுமை) கூட.

நாம் எல்லாரும் ஒரு ஈகோவால் உருவாக்கப்பட்டவர்களே. நாம் யார், என்ன, எப்படியிருக்க வேண்டுமென என்பதை நிர்ணயித்திருக்கிறோம் அல்லவா, அதுதான் நம் ஈகோ. குழந்தையிடமும் இந்த ஈகோ முதிர்வு அடையாத நிலையில் இருக்கிறது. வளர வளர ஈகோவும் வளர்கிறது. அதன் சுற்றம், சமூகம், அறிதல் ஆகியவற்றைக் கொண்டு அதற்கான ஈகோவை நிர்ணயிக்கிறது. இவ்வுலகத்துக்கு தான் எப்படி தெரிய வேண்டும் என குழந்தை முடிவுசெய்வது இந்த பதின்வயதில்தான். ஈகோவின் வளர்ச்சி பதின்வயதில் முழுமையடைகிறது.

கவனித்துப் பாருங்கள். கண்ணாடிகள் குழந்தைகளுக்கு தேவைப்படுவதில்லை. தம் தோற்றத்தை பற்றி அவை கவலைப்படுவதில்லை. ஆனால், பதின்வயதில் கண்ணாடிகள் அதிகம் தேவைப்படும். தான் சமூகத்துக்கு எப்படி தெரிய வேண்டுமென்பதில் குழந்தைகள் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுகின்றன. அம்மாவின் அரவணைப்பிலேயே இருக்கும் சிறுவன், பதின்வயது பருவங்களில் அம்மாவின் கைப்பிடித்துச் செல்வதை அவமானமாகக் கருதுவான். தான் முழுமையாக வளர்ந்துவிட்டதாக, யாரையும் சார்ந்திருக்க வேண்டிய வயதைக் கடந்துவிட்டதாக சமூகத்துக்கு அறிவிக்க விரும்பும் செய்கைதான் அது.

இதனால்தான் குழந்தைகள் பதின்வயதை அடைந்ததும் பெற்றோர்களும் அடுத்த படிநிலையை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அப்படி ஏற்றுக்கொள்ளும்போதுதான் பதின்வயது குழந்தைகளின் மாற்றங்களை புரிந்துகொள்ள முடியும். சரியான வழிகளில் அவர்களை செலுத்த முடியும்.

நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க உதவுங்கள்

பதின்வயதில் குழந்தைகள் அதிகம் இருக்கப்போவது பெற்றோர்களிடம் அல்ல. நண்பர்களிடம்தான். நட்பு வட்டம் சரியாக இல்லாத பட்சத்தில் கெட்டப் பழக்கங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ளலாம். எதிர்காலத் திட்டத்திலிருந்து தடம்புரளலாம். ஆகவே, நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள். பெற்றோர்களாக அல்ல, நண்பர்களாக!

வாய்ப்புகளைக் கொடுங்கள்

பதின்வயதுக்குப் பின்னர் உங்கள் குழந்தைகளை அடக்க நினைக்காதீர்கள். அவர்கள் விருப்பங்களை செய்ய விடுங்கள். அது சுதந்திரமாக செயல்பட நினைக்கும் பருவம். அதுவரை கையாண்ட அடக்குமுறைகளை, பதின்வயதிலும் கையாள விரும்பினால் உங்களுக்கும் குழந்தைக்குமான இடைவெளிதான் அதிகமாகும். அவர்களை வழிநடத்த வேறுவகையான முறைகளை கையாளுங்கள்.

ஊக்குவியுங்கள்

சில குழந்தைகள் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். அவர்களை மட்டம் தட்டக்கூடாது. மாறாக, மற்ற விஷயங்களில் ஈடுபட ஊக்குவியுங்கள். அவர்களுக்கு விருப்பமான இலக்குகளை தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள். அப்போதுதான் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஓர் ஆரோக்கியமான உறவு உருவாகும்.

சுதந்திரம் கொடுங்கள்

பதின்வயதில் உங்கள் குழந்தைகள் தன்னிச்சையாக செயல்பட விரும்புவதை அனுமதியுங்கள். எனினும், தூர இருந்து அவர்களின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள். தவறான பழக்கங்களை கைக்கொள்ளும் பட்சத்தில், அவர்களிடம் உரையாடுங்கள். வாதிடாதீர்கள். ஒரு நல்ல நண்பனைப் போல் பேசுங்கள். பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தை அடையாளம் காண முயலுங்கள். அனைத்தையும் நீங்கள் அறிந்துகொண்டபின், பெற்றோர்களாக நின்று, அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

முன்மாதிரியாக இருங்கள்

குழந்தைகளுக்கு நீங்கள்தான் முன்மாதிரி. உங்கள் போக்கில் தவறு நேர்ந்தால் உங்கள் மீதான மதிப்பை குறைத்துவிடும். போலவே, சரியான பாதையில் செல்லும் வரையில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் ரகசியம் காக்க உரிமை உள்ளது. தவறான வழிகளில் செல்லும் பதின்வயது குழந்தைகளை மட்டும் கண்காணியுங்கள்.

ஆரோக்கியமான எல்லைகளை வரையறுங்கள்

எந்தளவுக்கு சுதந்திரம் கொடுக்கலாம், எந்தளவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியம் காக்க அனுமதிக்கலாம் என்பதில் பெற்றோர்களுக்கு கேள்விகள் இருக்கின்றன. ஆரோக்கியமான  அளவில் எல்லைகளை வரையறுத்துக் கொடுங்கள் என்பதுதான் பதில். குழந்தைகளும் ஒப்புக்கொள்ளும் வகையில் வரையறைகள் இருக்க வேண்டும். அவற்றில் ஏதேனும் மாற்றங்களை குழந்தைகள் ஏற்படுத்திக் கொள்ள விரும்பினால், அவற்றை ஆராய்ந்து அனுமதிக்க வேண்டும்.

உங்கள் பதின்வயது குழந்தைகளுடனான உறவை மேம்படுத்த சில வழிகள்:

  • குழந்தைகள் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். புரிந்துகொள்ள முயலுங்கள்.
  • தலைமுறை இடைவெளியை ஒப்புக்கொள்ளுங்கள். புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • உங்களைப் போலவே அவர்களையும் ஆக்க முயலாதீர்கள். அவர்கள் போக்கிலேயே விடுங்கள். தவறானப் போக்கில் சென்றால் மட்டும் மாற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்.
  • சிறு வெற்றியைக் கூடப் பாராட்டுங்கள். தோற்றால் பக்கபலமாக நின்று ஊக்குவியுங்கள்.
  • தேவையான வெளியை அவர்களுக்குக் கொடுங்கள். அவர்களின் விருப்பங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ராஜசங்கீதன்