http://i.dailymail.co.uk/i/pix/2012/09/09/article-0-14ED814B000005DC-143_634x420.jpg
http://i.dailymail.co.uk/i/pix/2012/09/09/article-0-14ED814B000005DC-143_634x420.jpg

குழந்தைகளை கனிவாக வளர்த்தல் என்றால்?

பரிசுகளும் கிடையாது, தண்டனைகளும் இருக்காது. நல்ல செயல்களை செய்கையில் லஞ்சமாக பரிசுகள் இல்லை. தவறான செயல்கள் செய்தால் தண்டனையாக அடிகளும் இல்லை. குழந்தைகள் சரியான நடத்தைக்கு இயல்பாக வந்து சேர வேண்டும். பரிசுகள் மற்றும் தண்டனைகள் வழியாக இருக்கக்கூடாது. இப்படி யோசித்து பாருங்கள். பரிசுகள் வாங்கி நல்ல செய்கைகள் செய்யும் குழந்தைகள், வாழ்க்கை நல்ல செய்கைகளுக்கு பரிசுகளை வழங்குவதில்லை என புரிந்துகொள்ளும்போது என்னவாகும்? விபரீதம்தான்.

எது ஒழுக்கம்?

ஒழுக்கம் என்பது புரிதல் சார்ந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக மாறும். உண்மையில் ஒழுக்கம் தற்சார்பு கொண்டது. ‘சுய’ ஒழுக்கம் என்பதுதான் ஒழுங்கு. சுயத்தில் இருந்துதான் ஒழுக்கம் தொடங்குகிறது. புரிதல் இல்லாமல் இது சாத்தியமில்லை. பெரும்பாலானோர் பரிசுகளும் தண்டனைகளும் இல்லாமல் நல்வழி படுத்துதல் சாத்தியமல்ல என கூறுவர்.


குழந்தை வளர்ப்பு என்பது தங்களை தாங்களே அவர்கள் கையாள கற்று தருவதாக இருக்க வேண்டும். உணர்வுகள், நடத்தை போன்றவற்றில் சரி தவறு என பகுத்தறியும் தார்மீக அளவுகோளை குழந்தைகள் உருவாக்கி கொள்ளத்தான் பெற்றோர் விரும்ப வேண்டும்.


நம் குழந்தைகள் பாராட்டை எதிர்பார்த்து நல்ல விஷயங்களை செய்ய வேண்டியதில்லை. நல்ல விஷயங்களை செய்யவில்லையெனில் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தாலும் செய்ய வேண்டாம். நல்லவற்றை நல்லவை என தெரிந்ததால் செய்பவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அதாவது, நல்ல விஷயங்களை செய்ய அடிப்படையில் விரும்புபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.

ஊக்கம் அகம் சார்ந்து இருக்க வேண்டும்

நன்னடத்தைக்கான ஊக்கம் வெளியிலிருந்து பெறப்பட வேண்டுமென குழந்தைகள் போதிக்கப்படுகின்றனர். அது நல்லதல்ல. மாறாக நன்னடத்தைக்கான ஊக்கம் உள்ளிருந்து வர வேண்டும். ஒரு நல்ல விஷயம் செய்கையில் ஆத்மதிருப்தி ஏற்பட வேண்டும். மனம் பூரணம் கொள்ள வேண்டும்.


பணியிடங்களில் ஊக்கம் தொடர்பாக பல ஆய்வுகள் நடந்துள்ளன. புறம் சார்ந்த ஊக்கங்கள்- பணம், நல்ல அலுவலகம், சான்றிதழ் போன்றவை – கொடுக்கப்பட்டாலும் பணியாட்கள் செய்யும் வேலைகளில் பெரிய முன்னேற்றம் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

அகம் சார்ந்த ஊக்கங்கள்-  பணியாட்கள் எப்போது சந்தோஷம் அடைகிறார்கள்? மதிக்கப்படும்போது சந்தோஷம் அடைகிறார்கள். எப்போது மதிக்கப்படுகிறார்கள்? தங்கள் வாழ்க்கை தங்கள் கைகளில் இருக்கையில் மதிக்கப்படுவதாக உணர்கிறார்கள். 

அதே நேரம், குழந்தைகளை தன்னிச்சையாக செயல்படவும் விட்டுவிட முடியாது. கத்திகளோடு விளையாடக்கூடும். நெருப்பு வைத்து கொள்ளக்கூடும். எரிவாயு சிலிண்டரை பற்ற வைக்கலாம். 

அவர்களுக்கு வரையறை தெரிந்திருக்க வேண்டும். எது பாதுகாப்பானது எது பாதுகாப்பற்றது என அறிய வேண்டும். பாதுகாப்பற்றதை செய்யக்கூடாது என சொல்லிக்கொடுக்க தண்டனைகளை சொல்லி மிரட்டக் கூடாது. பதிலாக நீங்கள் செய்ய வேண்டியவை:

தடுங்கள்: ரோட்டுக்குள் குழந்தை ஓட முயன்றால் தடுத்து தூக்கிக் கொள்ளுங்கள். ஒரு நாயை அடிக்க சென்றால், தடுங்கள். கையில் ஏதேனும் அடிக்க வைத்திருந்தால், பிடுங்குங்கள். சூடான பொருளை தொட எத்தனித்தால், பொருளை தள்ளி வையுங்கள். குழந்தைகள் கோபம் கொண்டால் அதையும் நீங்கள்தான் தடுக்க வேண்டும்.


நீங்கள் தடுப்பதை வார்த்தைகளில் விவரியுங்கள். “அது பாதுகாப்பற்றது. அதை நீ செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்” என்பது போல. ரோட்டுக்கு ஓடுகிறார்கள் என்றால், “ரோட்டுக்கு செல்வது ஆபத்தானது; நீ ரோட்டுக்கு ஓடுவதை நான் அனுமதிக்க மாட்டேன்” என கூறுங்கள். கோபப்பட்டால், “நீ சொன்னது என்னை காயப்படுத்திவிட்டது. இதை நீ திரும்ப உன் சகோதரியிடமோ அல்லது மற்றவரிடமோ சொல்ல நான் அனுமதிக்க மாட்டேன்” என சொல்லுங்கள்.

குழந்தைகள் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக அவர்கள் சுயத்தை மறுக்க தேவையில்லை. ஒரே ஒரு கேள்வியை மனதுக்குள் வைத்துக்கொண்டால் போதும்.

“என் குழந்தையின் இடத்தில் நான் இருந்தால் மற்றவர் என்னை எப்படி நடத்த வேண்டுமென விரும்புவேன்?”

 

மூலம்- https://theconversation.com/how-to-discipline-your-children-without-rewards-or-punishment-39178

தமிழில்- ராஜசங்கீதன்