http://youth24x7.com/wp-content/uploads/sex_education.jpg
http://youth24x7.com/wp-content/uploads/sex_education.jpg

 

ஹிந்தியில் வன்புணர்வுக்கு ‘பலாத்கார்’ (balaatkaar) என ஒரு வார்த்தை உள்ளது. பெண்கள் அதிகம் பயன்படுத்தாத வார்த்தை இது. பதிலாக அவர்கள் பயன்படுத்துவது izzat lootna என்ற வார்த்தையை. இதன் அர்த்தம் ‘ஒருவர் கவுரவத்தை இழந்தார்’ என்பதாகும்.

வன்புணர்வுக்கு வழங்கு தமிழில் கற்பழிப்பு என்பார்கள். இச்சொல்லில் அழிப்பவர் எங்கும் குறிக்கப்படவில்லை என்பதை கவனியுங்கள். கற்பு இருப்பதாக ஒரு வாதத்துக்கு எடுத்துக்கொண்டாலும், குற்றம் புரிபவர் குறிக்கப்படாமல் பாதிக்கப்படுபவரை மட்டும் குறிக்கும் சொல் புழக்கத்தில் இருப்பது என்ன மாதிரியான அரசியல்? என்ன மாதிரியான நியாயம்?

இந்தியாவில் கற்பு என்பது பெண்ணுக்கு உரித்தானது. அது அவளின் கவுரவம். சாதி, மதம், குடும்பம், சமூகம் அனைத்தின் கவுரவத்துக்கும் பெண்தான் ஜவாப்தாரி. தன் உடல் மீது ஒருவர் இயற்கையாக கொண்டிருக்கும் உரிமை அவளுக்கு மறுக்கப்படுகிறது. அந்த உடல் ஒரு குடும்பத்துக்கானது. ஒரு சாதிக்கானது. ஒரு மதத்துக்கானது.

அழுத்தமான சமூகப்பார்வை மூலம் பெண் மீதான அதிகாரமும் கட்டுப்பாடும் தக்க வைத்துக்கொள்ளப் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, திருமணமாகாத பெண்கள்தான் இந்த பார்வைக்கு இலக்கு. பொது இடங்களில் அவர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் திரும்பத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி அடக்கமான, பெண்மை போற்றும் விதங்களிலேயே அவர்களும் நடந்து கொள்கிறார்கள்.

இதே பார்வையை நகரங்களில் எந்த அமைப்புகள் கட்டமைக்கின்றன என ஃபாட்கே, கான் (Phadke and Khan) போன்ற ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். நகரங்களில் மேற்சொன்ன அமைப்புகளின் தாக்கம் குறைவெனினும், வேறு நிறுவனங்கள் இவ்வேலையை செய்கின்றன. முக்கியமாக பள்ளிகள் பெண்ணடிமைத்தனத்தின் தோற்றுவாயாக செயல்படுவதுதான் வேதனையான விஷயம். அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மூலமாக.

பள்ளிகளில்தான் பாலினம், பாலியல் போன்றவற்றை பற்றிய கருத்துக்களை முதன்முதலாக பிள்ளைகளுக்கு மத்தியில் ஆலோசிக்கப்படும். ஒரினச்சேர்க்கை, இளம்பெண்கள் பற்றிய மதிப்பீடு, ஆண்-பெண் சேர்க்கை மட்டும்தான் இயல்பான சேர்க்கை என்பதுபோன்ற கருத்தாக்கங்கள் இங்குதான் உருவாக்கப்படுகின்றன  என்கிறார் ஆய்வாளர் கெஹிலி (Kehily). பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் கலாசாரம் போன்றவை வழியாக பாலியல் பண்புகள் புகுத்தப்படுவதாக கூறுகிறார்.

மேலும் கெஹிலி சொல்கையில், “என் முனைவர் பட்ட ஆய்வுக்கு நான் எடுத்துக்கொண்ட கரு, மும்பை குப்பங்களில் வசிக்கும் 15-லிருந்து 22 வரையிலான வயதுகொண்ட பெண்களின் பாலியல் குறித்தான பார்வை என்பதுதான். அவர்களின் ஆசிரியர்கள் பாலியல் குறித்து அவர்களிடம் என்ன பேசுவார்கள் என கேட்டறிந்தேன்.” 15 வயதான சரிகா, 19 வயதான மன்சி மற்றும் 17 வயதான ஆராதனா ஆகியோர் எப்படிப்பட்ட பாலியல் போதனைகளை ஆசிரியர்கள் தங்களுக்கு அளிக்கிறார்கள் எனக் கூறுகையில்:

சரிகா: பெண்களுக்கு ஆண்களைவிட சக்தி உள்ளதென எங்கள் ஆசிரியர்கள் கூறுவார்கள். தன்னை நோக்கி வரும் நபரின் நோக்கத்தை பெண்கள் கண்டுபிடித்துவிட முடியும். உதாரணமாக, ஒரு பையன் ஒரு பெண்ணை நோக்கி வந்த சம்பவத்தை குறிப்பிட்டேன் அல்லவா! அவன் தன்னை உரசத்தான் வருகிறான் என பெண் கண்டுபிடித்துவிட்டாள். அவள் சுதாரித்து அவன் உரசும் முன்னமே வழியிலிருந்து நகர்ந்து விட்டாள்.

மன்சி: “நல்ல பெண் எப்படி இருக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கூறுவார்கள். வெளி ஆண்களை பற்றி கூறுவார்கள். இப்போது ஹெச்ஐவி நோய் வேறு இருப்பதால், பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆண் பிள்ளைகளிடம் எப்படி பேச வேண்டுமெனவும் சொல்வார்கள். அவர்களுடன் பழகலாம். ஆனால் எல்லை தெரிந்து பழக வேண்டும். ஆண் பிள்ளையும் சரி பெண் பிள்ளையும் சரி தங்கள் எல்லை தெரிந்துதான் பழக வேண்டும். இப்போதெல்லாம் ஆணும் பெண்ணும் அதிகமாக பழகுவதால், என்னென்னவோ ஆகிவிடுவதாக கூறுவார்கள். (சிரிக்கிறார்). இதை (பாலுறவு) செய்யாதீர்கள். செய்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அசிங்கம். கவுரவம் போய்விடும்.”

ஆராதனா: “உடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டுமென (ஆசிரியர்கள்) சொல்வார்கள். துப்பட்டா சரியான இடத்தில் இருக்க வேண்டும். ‘பின்’ செய்திருக்க வேண்டும். ஆண்களுக்கு முன் குனியக்கூடாது, ஆண்களை தொடக்கூடாது, ஆண்களுடன் பேசக்கூடாது, ஆண்கள் உங்களை தொட விடக்கூடாது என்றெல்லாம் கூறுவார்கள்”

பாலியல் பற்றி பேசும் துணிச்சலான பெண்களை பற்றி ஆசிரியர்கள் நல்ல அபிப்பராயம் தெரிவிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை பெண்கள் ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும். திருமணத்துக்கு முன் பாலுறவு கொள்ளக்கூடாது. ஒரு மேனிலைப்பள்ளி ஆசிரியர் சொல்கையில்: “பெண் பிள்ளைகளுக்கு அவர்களின் அங்கங்கள் ஆபரணங்கள் என சொல்லிக்கொடுக்க வேண்டும். அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கண்டவரிடமும் காட்டக்கூடாது” என்கிறார்.

ஆண் பிள்ளைகளுக்கு இந்த போதனைகளை ஆசிரியர்கள் கொடுப்பதில்லை. ஏனெனில், “பெண் இடம் கொடுத்தால்தானே, ஆண் எதையும் செய்வான். ஆகவே, பெண்ணை கட்டுப்படுத்தினால் போதும்.” என்பதுதான் அவர்களின் எண்ணம். அதிலும் நகைச்சுவை என்னவெனில், பெரும்பாலான பெண் பிள்ளைகள், ஆண் பிள்ளைகளிடம் இவற்றை சொல்வது பயனற்றது என்பதுதான். ஏனென்றால் அவர்கள் முட்டாள்களாம். ஆசிரியர்கள் சொல்வதை மதிக்க மாட்டார்களாம்.

பெண்மைக்கு அடையாளங்களாக பரிசுத்தத்தையும் கற்பையும் ஆசிரியர்கள் போதிப்பது, பழமைக்கும் அடிப்படைவாதத்துக்கும்தான் தலைமுறையை இட்டுச்செல்லும். என் ஆய்வின்படி இந்த உத்திகள் பயனற்றவை. ஏனெனில், பெரும்பாலான பள்ளி செல்லும் பெண் பிள்ளைகள் திருமணத்துக்கு முன்பே காதல், நெருக்கம் போன்ற காரணங்களுக்காக விதிகளை மீற விரும்புகிறார்கள். மட்டுமல்லாமல் அந்த உத்திகள் ஆபத்தானவை. காரணம், பாலியல் துன்புறுத்தலால் பெண் பிள்ளைகள் பாதிக்கப்படுகையில், ஆசிரியர்களே அவர்களுக்கெதிராக நிற்பார்கள். உடை, பேச்சுவிதம், நடத்தை ஆகியவற்றை காரணம் சொல்லி பெண்பிள்ளைகளை பழிப்பார்கள்.

எதிர்காலத்தில், பாலியல் கல்வியை கொண்டு வரும் முன், பள்ளிகளில் நிலவும் பாலியல் பற்றிய கருத்தியலை அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிமுக்கியமாக, வல்லுனர்கள் கொண்டு ஆசிரியர்கள் மத்தியில் இருக்கும் ‘பெண்மை பாதுகாக்கும் முறை’ பற்றிய கருத்துக்களை தெளிவுப்படுத்த வேண்டும்.

மூலம்- http://www.tarshi.net/blog/voices-dont-let-your-foot-slip-messages-on-appropriate-femininity-by-school-teachers-in-mumbai-2-aug-2015/

தமிழில்- ராஜசங்கீதன்