இணையத்தின் உதவிகொண்டு குழந்தைகள்  தாங்களே படிக்க பள்ளிகள் அனுமதிக்க வேண்டுமென விரும்புகிறார் TEDன்  வெற்றியாளர் – சுகதா மித்ரா

future of learning 03

சுகதா மித்ரா இங்கிலாந்தில் உள்ள New Castle  பல்கலைக்கழகத்தில் கல்வி தொழில்நுட்ப (Educational Technology) பேராசிரியராக பணிபுரிகிறார். Hole-in-the-Wall என்னும் சோதனையை  புதுதில்லியின் சேரி ஒன்றில் செய்து 2013ம் ஆண்டின் TED பரிசை வென்றார்.  அந்த சோதனையில்  அவர் செய்தது  ஒரு கணினியை  அங்கு நிறுவி   அதில் குழந்தைகளை  விளையாடுவதற்கு   ஊக்குவித்தார், விளையாடுவதில்  இருந்து  குழந்தைகளால் கற்க முடியும் என நம்பினார், முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இவரின் இந்த  சோதனையே விகாஸ் ஸ்வரூப் தனது முதல் நாவல் எழுத ஆதாரமாக இருந்தது , அதுவே படமாக எடுக்கப்பட்டு, 2009ம் ஆண்டு ஆஸ்கர் விருதையும் வென்றது. அந்தப் படம் Slumdog Mllionaire. இவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். Cognitive Scienceலும் கல்வி-தொழில்நுட்பத்திலும் 25க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார். NIITல் முதன்மை விஞ்ஞானியாகவும் இருந்தவர். இப்படி பல துறைகளில் அனுபவம் பெற்றவர்  தனது 61 வயதிலும் இளமையுடனும், ஆர்வத்துடனும்  கல்வி கற்றலின் மேம்பாட்டிற்காக செயல்படுகிறார்.

 

Sugata Mitra_future of learning01பள்ளிக்கல்வி அமைப்பைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

Data Processing  எனப்படும் தரவு செயலாக்கம் 20ம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கப்பட்டது. அப்போது செய்திக்கும், தகவல் தொடர்பு தொழில்நுட்பமாக  இருந்தவர்கள்  மனிதர்கள்தான் .  அதனால் அன்று  எல்லா தகவல்களும் காகிதத்தில் எழுதப்பட்டு , மனிதர்களால்  தரவு செயலாக்கப்பட்டது, அன்றைய ஆங்கில விக்டோரிய அரசால் இந்த அமைப்பு செம்மைப்படுத்தப்பட்டது. இந்த வலுவான அமைப்பு,உலகின் வெவ்வேறு பகுதிகளில் வேலைபார்த்த மனிதக் கணினிகளின் வலைப்பின்னலால் (மனிதர்களால்) உருவாக்கப்பட்டது. உலகில் எந்தப் பகுதியிலும் உள்ள இயந்திரத்தில் பொருத்திக்கொள்ளும் மனிதர்கள்தான் இதன் ஆதாரம். இந்த மனிதர்களை உற்பத்தி செய்யத்தான் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. ஒரே மாதிரியான பாடத்திட்டம், கற்றல் முறை மற்றும் தேர்வு முறையைக் கொண்டு, பத்து வருடங்களில் குழந்தைகளை ஒரே மாதிரியான  திறன்மிக்க இயந்திரமாக உருவாக்கும் அமைப்பு.

வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதம் ஆகியவற்றை மட்டும் முதன்மை திறமைகளாகக் கொண்ட அறிவை புத்தகங்களில் அடைத்து மனித மூளைகளில் சேமிக்கப்படுகிறது. இந்த அறிவை சேமிக்கவும், நினைவாற்றலை கூட்டவுமே பள்ளிகள் உதவுகின்றன. இதன் உள்ளடக்கம் எது என்பதை தீர்மானிக்க அரசும், மதங்களும், ராணுவமும் கைகொடுக்கின்றன. இந்த பாணியை பின்பற்றித்தான் கணினி உருவாக்கப்பட்டு தொலைபேசிகளுடன் இணைக்கப்பட்டது . விளைவாக இணையம் உருவாகி வெகு வேகமாக பரவியும் விட்டது. அந்த பழைய, பெரிய மனித இயந்திரத்துக்கான பாகங்களைத்தான் பள்ளிகள் இன்னும் உருவாக்கி கொண்டு இருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் அந்தப் பழைய இயந்திரம் இப்போதில்லை, அதில் பொருந்தி போகின்ற  அவ்வகை மனிதர்களின் தேவையும் இன்று இல்லை.

இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோம்?

இணைய யுகம் வந்துவிட்ட சில ஆண்டுகளில் நிறுவனங்களின் ஸ்தூலமான இருப்பு (Physical Presence) தேவையற்றதாகிவிட்டது. இணையத்தின் Cloud என்னும் அழிக்கமுடியாத, எங்கும் நிறைந்திருக்கிற நகர்வால் வங்கித்துறை, கலை, பணம் ஆகியவை வடிவமுள்ளவையாக நீடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

Cloud உடனான உங்கள் அனுபவம் பற்றி?

1999ம் ஆண்டு ‘The Hole in the Wall’ முயற்சியின்போது எதிர்பாராமல்தான் Cloud பற்றி தெரிந்துகொண்டேன். இந்தியத் தெருக்களில் வாழும் சிறுவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லையென்றாலும் சரி, கணினியை முன்பின் பார்க்காமலும், பயன்படுத்தத் தெரியாமலிருந்தாலும் சரி அவர்களால் கணினியையும், இணையத்தையும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள முடியுமென்பதை இந்த முயற்சியின்போதுதான் நான் கண்டுபிடித்தேன். என்னுடைய இந்த சோதனை ஐந்து வருடங்கள் நீடித்தது. தொடர்ந்து, 2009ல் பாடம் நடத்த, கற்பிக்க ஆசிரியர்களை இதுவரை செல்லாத இடங்களுக்கு இணையத்தின் வழியாக கொண்டு செல்ல முடிந்தது. தாமாகவே குழந்தைகள் கற்றுக்கொள்ளும் செயலை ஊக்குவிக்க விரும்பினேன். விளைவாக, 2012ம் ஆண்டில் உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் ஆசிரியர்கள் இந்த SOLE (Self Organised Learning Environments) எனப்படுகிற, ‘தங்கள் வசதிக்கு தாமே உருவாக்கிக் கொள்கிற கற்றல் சூழல்’ முறையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதில் இணைய வசதி கொண்ட கணினியொன்றை சுற்றி குழந்தைகள் கூடி பெரிய விஷயங்களை கண்டறிந்து விவாதிப்பார்கள். இந்த கற்றல் நிகழ்வதை ஆசிரியர்கள் பின்னிருந்து வெறுமனே வேடிக்கைதான் பார்ப்பார்கள்.

குழந்தைகளிடம் நான் எப்போதும் கேட்கும் கேள்வி, “நம் கை கால்களில் ஏன் ஐந்து விரல்களைக் கொண்டிருக்கிறோம்? ஐந்து என்பதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது?” என்பதுதான். பல தடவை கேட்டிருக்கிறேன். காரணம், குழந்தைகள் இக்கேள்விக்கு சொல்லும் பதில்கள்தாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அவர்கள் சிந்திக்கும் விதம் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். அதே நேரம், தற்போதைய கல்விச்சூழலில் படிக்கும் குழந்தையிடம், “எப்படி இரு எண்களை பெருக்குவது?” எனக் கேட்டுப் பாருங்கள். “தன் ஃபோனின் மூலம் ” என்று பதில் வரும்.

அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?

நமக்கு புதுவகை பாடத்திட்டம் தேவை. ‘தாமே கற்றுக்கொள்ளும் வகை’ சார்ந்த கற்பித்தல் முறையும் குழந்தைகள் பேச, பகிர, இணையத்தைப் பயன்படுத்த, விவாதிக்க ஏதுவான தேர்வு முறையும் அது கொண்டிருக்க வேண்டும். மக்கள் இனி இயந்திரங்களாக இருக்க வேண்டியதில்லை. Cloudகளின் காலத்தில் பள்ளிகளும் Cloudகளை சார்ந்தே இயங்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவது அரசுகளுக்கு வேண்டுமானால் கடினமான காரியமாக இருக்கலாம், ஆசிரியர்களுக்கு அல்ல. அவர்கள் சற்றே ஒதுங்கி, Cloudக்கு வழிவிட வேண்டும். அவ்வளவுதான் தேவை.

Hole-in-the-Wall பற்றி மேலும் தெரிந்துகொள்ள www.hole-in-the-wall.com வலைத்தளத்துக்கு செல்லவும்.

முதல் பதிப்பு – The New Indian Express on Jun 3, 2013

ஆசிரியர்- ப்ரீத்தி ஆன் தாமஸ்

தமிழில் ராஜசங்கீதன்