fault in our syllabus

கலாச்சாரம்தான் சிறந்தக் கருத்தடை இந்தக் கருத்து சாதாரணமாக அறிவுபூர்வமாக யோசிப்பவர்களுக்கு மிக அபத்தமாகத் தெரிந்தாலும் பெரும்பாலான இந்திய மக்களின் கருத்தாக இருக்கிறது. அதிலும் நமது நாட்டின் அமைச்சரே இந்த மக்களின் ஒருவராக இருக்கும்பட்சத்தில் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. சிறிது நாளைக்கு முன் தான்  அமைச்சர் ஒருவர் ‘தம்பதிகளுக்குள் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கை மட்டுமே எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும்’ என திருவாய் மலர்ந்திருக்கிறார். இவரின் இந்த கருத்துக்கு அடிநாதமாக இந்த கலாச்சாரமும், ஒழுக்கமும் இருப்பது புலனாகும். ஆக, இந்தச் சூழலில் பாலியல் கல்வி பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டால் அந்தப் புத்தகங்களில் என்ன இருக்கும்? பூக்களில் தேனருந்தும் வண்டுகளும், அன்றில் பறவைகளும்தான்.

இது ஒரு உதாரணம்தான். அதுவும் இந்தக் கருத்து பல சர்ச்சைகளை உருவாக்கியதால்தான் கவனிக்கப்பட்டது. உண்மையில் CBSE, ICSE, ISC  பள்ளிகளில் இருக்கும் பாடப்புத்தகங்கள் மிகத் தெளிவாக, சரியாகத் திட்டமிடப்பட்டு துணுக்குச் செய்திகளுடனும், படங்களுடனும், குறிப்புகளுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பாடப்புத்தகங்களின் முதல் சில பக்கங்களில் விரிவான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் முறைமை அளிக்கப்பட்டிருக்கும். எந்த பாடங்களுக்கு எத்தனை வகுப்புகள் ஆசிரியர் எடுக்க வேண்டும் என்பதிலிருந்து எந்த தலைப்புக்கு எத்தனை மதிப்பெண் வரை கொடுக்கப்படும் என்பதுவரை இந்த அட்டவணையில் இருக்கும். அதை தாண்டி வேறு எந்தவிதமான சிந்தனைக்கும் விவாதத்திற்கும் அங்கே இடம் இருப்பது இல்லை.

கணிதம் மற்றும் அறிவியல் வகுப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏனைய மற்ற பாடங்களுக்குத் தருவதில்லை. அறிவியல் பாடங்களுக்குத்தான் அதிகமாக பிரத்யேக வகுப்புகள் (tuition) எடுக்கப்படுகின்றன. இப்படித்தான், தங்கள் பிள்ளைகளை மருத்துவராக அல்லது பொறியாளராக மாற்றுவதற்கான ஒருதலைப்பட்ச முயற்சிகள் பெற்றோரால் ஆரம்பிக்கப்படுகின்றன. சரியாக படிக்கவில்லையென்றால் மட்டும்தான் ஒரு வழக்கறிஞராகவோ பத்திரிக்கையாளராகவோ ஆவதற்கு சம்மதிக்கிறார்கள்.

பாடப்புத்தகங்களின் ஒவ்வொரு பக்கத்திலும் திரிபுவாதங்களைக் காணலாம். உதாரணமாக, NCERT 7ம் வகுப்புப் பாடப்புத்தகத்தின் முதல் பாடம் சம உரிமைகளைப் பற்றியது. அந்தப் பாடம் எல்லோருக்குமான அடிப்படை உரிமைகள் பற்றி உதாரணங்களுடன் பேசுகிறது. ஆனால் ‘பொருளாதார சமத்துவம் இல்லாத அரசியல் சமத்துவம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதையும் பெற்றுத் தராது ‘ என்பதை அது சொல்லத் தவறுகிறது. சட்டத்துக்கு முன்னால் பேசப்படும் சம உரிமைகள் பல ஓட்டைகளைக் கொண்டது என்பதை பின்பு புரிந்துகொள்ளும் போது, மொத்த அமைப்பின்மீதும் நம்பிக்கையிழந்து போகிறார்கள்.

பள்ளிகளின் கல்வித் தரம்

மிக அதிகமாக சொல்லப்படுகின்ற குறை, தரமான இலக்கியம் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இல்லை என்பதுதான். புத்தகக்கடைகளில் காணப்படும் எழுத்தாளர் பெயர்களில் ஓரிருவரால் எழுதப்பட்ட கதைகள், கவிதைகளை பாடப்புத்தகங்களில் நிரப்பி CBSE திருப்திப்பட்டுக்கொண்டாலும், புரியாத  வார்த்தைகள் பேசுவதாலும் எந்தவிதக் கண்ணோட்டமுமில்லாமல் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதாலும் மட்டுமே ஒரு மாணவன் நல்ல இலக்கியம் படித்தவன் என்ற முடிவுக்கு  பள்ளிகள் வருகின்றன. இத்தனை வருட பள்ளிப்படிப்பு வாழ்க்கையில், ஒரு மாணவன் தான் படித்த கதை அல்லது கவிதைப் பற்றியக் குறிப்பை எழுதுமாறு கேட்கப்பட்டால், அது உண்மையில் தனது சொந்தக் கருத்தை அறியும்பொருட்டு கேட்கப்படவில்லை என்பதை தெரிந்தே வைத்திருக்கிறான். இப்படி கருத்து கேட்கப்படும் நேரங்களில் அது எழுத்தாளரின் அல்லது ஆசிரியரின் கருத்தைக் கேட்பதாகத்தான் அமைகிறது. இலக்கியங்களை வெறும் பாடப்புத்தகங்களாகப் படிப்பதும் அவற்றை ஆழமாகக் கற்றறியத் தவறுவதும்தான் மிக முக்கியமான குறைகளாகும்.

தனிமனித வளர்ச்சிக்கான வாய்ப்பின்மை

2014 தேர்தலுக்குப் பிறகு, மனித வள அமைச்சகத்தின் நீண்ட பாரம்பரிய பழக்கம் முடிவுக்கு வந்துள்ளது. முதன்முறையாக பட்டதாரி யல்லாதவர் அமைச்சர் ஆகியிருக்கிறார். காலத்துக்கு ஒவ்வாத பல விதிகளை நாம் கடந்துவிட்டாலும், எமர்ஜென்சி காலக்கட்டத்தைப் பற்றி வெளிப்படையாக பாடப்புத்தகங்கள் பேசக்கூடிய நிலைமை இருந்தாலும்  ஒவ்வொரு மாணவனும் அவள்/அவனது தனிப்பட்ட வளர்ச்சியை அடைவதற்கு உதவக்கூடியப் பாடத்திட்டங்கள் இன்னும் வரவில்லை என்பதுதான் உண்மை.

CBSE பள்ளியில் படித்தவரால் அதன் பாடத்திட்டம் அதிகளவில் நாட்டுப்பற்றையும் மதக்குறிப்புகளையும் கொண்டிருக்கிறது என்பதை உணரலாம். நாட்டுப்பற்று என்பது பாடப்புத்தகத்தில் இருக்கலாம், ஆனால் குருட்டுத்தனமான நாட்டுப்பற்று அல்ல. மேலும் தவறான மொழிபெயர்ப்பால் பொருள் குலைவது இன்னும் கிராமங்களில் நடக்கிறது. புதுப்பாடத்திட்டங்கள் வெளிவரும்போது சரியான பயிற்சி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படாததாலும் தம்மால் புரிந்துகொள்ள முடியாததை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்க விரும்பாததும், மாணவர்கள் அரைகுறை அறிவைப் பெறவே வழிகோலுகிறது. புதுப்-  பாடத்திட்டங்கள் நிகழ்காலத்துக்கு ஏற்றார்போல் மாற்றி வடிவமைக்கப்படவில்லையெனில், இந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போய்விடும். சற்று தள்ளி நின்று அனைத்தையும் புதிய  கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய நேரமிது. ஏனெனில் நம் குழந்தைகள் படிக்க போகின்றவைதாம் நாளைய  சமுதாயம்  என்னவாக இருக்கும்  என்பதை தீர்மானிக்கப் போகிறது.

மூலம் – http://www.youthkiawaaz.com/2014/08/fault-syllabus-school-textbooks-give-space-individual-growth/

ஆசிரியர்-தேவதத்தா பட்டாசார்ஜி

தமிழில் – ராஜசங்கீதன்