ஹாலந்தைச் சார்ந்த மைக்கேல் துடோக் தெ விட் (Michael Dudok de Wit) என்பவர் இயக்கிய ‘அப்பாவும் மகளும்’ (Father and Daughter) என்ற இந்த குறும்படம் 2000-ம் ஆண்டிற்கான சிறந்த (கணினி வரைகலை) குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினைப் பெற்றுள்ளது.

தந்தையைப் பிரிவதால் ஏற்படும் துயரமும், அவர் மீண்டும் வரமாட்டாரா என ஏங்கும் மகளைப் பற்றிய கதை தான் என்றாலும் அதையும் தாண்டி வாழ்வின் அசுவாசத் தன்மையை, பிறப்பு-இறப்பு சுழலை நுட்பமாக எடுத்துக்காட்டுகிறது. சுழலும் சக்கரங்கள், மாறும் பருவங்கள், மாறாத ஏக்கம், மனதை என்னவோ செய்யும் இசை, மரங்கள், காற்று என இவையெல்லாம் சேர்ந்து கதாப்பாத்திரங்களின் முகபாவங்களையே காட்டாமல் பார்வையாளரிடம் ஒருவித ஒத்துணர்வை(empathy) ஏற்படுத்துகின்றன.

எட்டு நிமிடங்களே ஓடும் இக்குறும்படத்தை நீங்களும் பாருங்களேன். எங்கோ எப்போதோ நம் வாழ்வில் நம்மை விட்டுப் பிரிந்த உறவை, நட்பை நினைவடுக்கில் இருந்து இக்குறும்படம் மீட்டுக் கொண்டு வரலாம் – கிட்டாததை, விலகியதை, பிரிந்ததை எண்ணித்தானே மனம் எப்போதுமே ஆற்றாமை கொள்கிறது.

வெங்கடசுப்ரமணியம் எழில்மணி