engineering grads

பொறியியல் படிப்புகள் காலாவதியாகிவிட்டன என்பதற்கான மற்றும் ஒரு சான்று வெளியிடப்பட்டிருக்கிறது. Aspiring Minds என்னும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இந்தியக்கல்வி தரமிழந்திருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

இந்தியாவின் கொண்டாடப்படும் பல்கலைக்கழகங்களின் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். இதன் 400 பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்களில் வேலை கிடைத்தது மொத்தம் எத்தனை பேருக்கு தெரியுமா? வெறும் 1%. அதிகபட்ச வேலைவாய்ப்பு கொண்ட மாநிலமாக சொல்லப்படும் தில்லியில் வேலைவாய்ப்பு விகிதம் எவ்வளவு தெரியுமா? 13%, அட, அவற்றையெல்லாம்கூட விடுங்கள். இந்தியாவின் Silicon Valley என்றழைக்கப்படுகிற பெங்களூருவே 3.2% என்ற நிலையில்தான் தத்தளிக்கிறது.

ஏன் இப்படி? கண்டிப்பாக நம் தொழில்நுட்பக் கல்வியில் ஏதோ பிரச்னை இருக்கிறது. அவையென்ன எனக் கண்டறிய விழையும்போது HackerEarth-ன் சார்பில் நாங்கள் கண்டுப்பிடித்தவைதான் இவை.

காலாவதியான பாடங்கள்

அடிப்படைகளை கற்றுக்கொள்வதில் தப்பு ஒன்றுமில்லை. ஆனால் அதற்காக கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய FORTRAN கணிணி மொழியையெல்லாம் படிப்பதில் அர்த்தமே இல்லை. காலத்துக்கு பொருந்தா இவ்வகை பாடங்களைப் படிப்பதில் காலத்தை செலவழிப்பதே, பொறியியல் மாணவர்களை நிகழ் யதார்த்தத்துக்கு பொருந்தாதவர்களாக மாற்றி வெளியே தள்ளுகிறது.

ஏட்டறிவுக்கும் பட்டறிவுக்குமான வித்தியாசம்

கல்லூரிகளில் கற்பிக்கப்படும் அறிவுக்கும் யதார்த்தத்தில் தேவைப்படும் அறிவுக்குமிடையே பெரிய இடைவெளி இருக்கிறது. கல்லூரியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேறியவர்கள் சரியான வேலை கிடைக்காமல் திண்டாடுவதை உதாரணமாகச் சொல்லலாம். நல்ல மதிப்பெண்ணுடன் தேறியிருந்தாலும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தேவைக்கேற்ப பணிபுரிய இவர்களுக்கு பிரத்யேக பயிற்சி தேவைப்படுகிறது. சோகம் என்னவென்றால் இந்தப் பயிற்சிகள் கல்லூரிப் படிப்பை போன்று ஆண்டுக்கணக்கிலோ மாதக்கணக்கிலோ கொடுக்கப்படுவதில்லை. இப்படிக் குறைந்தகாலப் பயிற்சியைக் கூட செலவின்பொருட்டு பல நடுத்தர நிறுவனங்கள் கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை.

தேர்வுக் கலாச்சாரம்

பலமுறை பலவிதங்களில் சொல்லப்பட்ட விஷயம்தான். தேர்வு என்பது கற்றவை சரியாக கற்கப்பட்டுள்ளனவா எனக் காண்பதற்கான உத்தி மட்டும்தான். ஆனால் நிறுவனங்கள் பணியாளர் தேர்வுக்கு மாணவனின் மதிப்பெண்ணை முதன்மை அளவுகோலாக வைத்திருப்பதால், தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கத்தான் மாணவன் உழைக்கிறானே தவிர, தான் தேர்ந்தெடுத்துள்ள பாடத்தில் கரை காண அல்ல. விளைவாக, தேர்ந்தெடுத்த பாடத்தைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருகிறான்.

துறை சார்ந்த ஞானமின்மை

மாணவன் தேர்ந்தெடுத்த துறைப் பற்றிய நேரடிப் பரிச்சயமும் கல்லூரிக்கல்வியில் குறைவாகத்தான் கிடைக்கிறது. படிப்பின் கடைசி ஆண்டின்போதுதான் தான் படிக்கும் துறையின் உண்மைத் தேவை என்ன என்பதை அறியத் தொடங்குகிறான். அப்போதுதான் ப்ராஜ்க்டுகளின் (Final year project) நிமித்தம் அவன் நேரடியாக நிறுவனங்களுக்கு செல்ல நேர்கிறது. சற்று முன்னமே மாணவனுக்கு தான் தேர்ந்தேடுத்த துறையின் நிகழ் யதார்த்தத்தை பரிச்சயப்படுத்தினால், அவனும் தன்னை சரியான வழியில் தயார் செய்துகொள்வதற்கு வாய்ப்பு அமையும்.

தவறான துறையை தேர்ந்தெடுத்தல்

தொழில்நுட்பத்துறையை கடந்த காலத்தில் தேர்ந்தெடுத்தவர்களின் வாழ்க்கைத்தரம் எப்படி எகிறியது என்பதை சொல்லவே வேண்டாம். அதிக சம்பளம் எனக்கூவி அழைத்த நிறுவனங்களையும் நாம் பார்த்துதான் இருந்தோம். இவை மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கிறதே தவிர, அதன் பிறகு அத்துறை அடைந்த தொய்வை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் கல்லூரிகள் இந்த கடந்தகாலத்தைக் காட்டியே வலை விரிக்கின்றன. நாமும் அதுதான் யதார்த்தம் என நம்பி நம் பிள்ளைகளை அங்கே தள்ளுகிறோம். அவர்களின் விருப்பம் என்னவென்றெல்லாம் கேட்பதில்லை. மிஞ்சுவது என்னவெனில் விருப்பமில்லா படிப்பை தேர்ந்தெடுத்த ஆர்வமில்லா மாணவர்களும் அதனால் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையும்தான்.

இந்தக் காரணங்கள் கொஞ்சம்தான். இன்னும் அதிக காரணங்கள்கூட இருக்கலாம். என்னைவிட இந்தப் படிப்பை சமீபத்தில் படித்து முடித்த மாணவன் அதிகம் சொல்லக்கூடும். ஆனால் இந்தப் பிரச்சினையை பல காலமாக சொல்லி வருகிறோம். இருந்தும் மாறவில்லை. ஏனெனில் இது இப்படி மாறாமல் இருப்பதில் ஆதாயம் அடையும் சக்தி ஒன்று அல்லது பல இதை இப்படியே நீடிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

இதற்கு என்னதான் வழி? இந்தியாவைப் பொறுத்தவரை வேலையில்லையெனில் படித்திருந்தாலும் மரியாதை கிடைக்காது. சரியாக சொல்வதெனில், உங்களுக்கு வேலையில்லை என்றால் நீங்கள் படித்தவரில்லை. வேலை இருந்தால் நீங்கள் படிக்காதிருந்தாலும் பரவாயில்லை. இந்தியாவை பீடித்திருக்கும் இந்த நிலைமை கண்டிப்பாக மாற வேண்டும். ஆனால் அப்படி மாறுவதற்கு பல காலம் பிடிக்கும் என்பதுதான் வேதனையான உண்மை.

படிக்க வேண்டுமென்பதற்காக மட்டும் படிப்பது எப்படி கதைக்குதவாத வாதமோ அதைப் போலத்தான் உங்கள் மனம் விரும்பிய வேலையைச் செய்யுங்கள் என்பதும். ஏனெனில் நீங்கள் விரும்பும் வேலை யதார்த்தத்தில் நல்ல வருமானம் கிடைக்காததாக இருக்கலாம். ஆனால், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு தீர்வை குறைந்தபட்சம் உருவாக்கலாம். முதல் பத்தியில் கூறிய ஆய்வுத்தகவல் உங்களை கவலையடையச் செய்யலாம். ஆனால், இந்நிலை மாறுமா என்றால் மாறும். மடை மீறும் வெள்ளம் போல கண்டிப்பாக நிலை மாறும்.

மூலம்- http://blog.hackerearth.com/2014/02/90-indian-engineering-candidates-employable-why.html

Photo credit-http://blog.hackerearth.com/wp-content/uploads/2014/02/grads.jpg

 தமிழில்- ராஜசங்கீதன்