பாடவாரியான வகுப்புகள் இனி கிடையாது. தலைப்புவாரியான வகுப்புகள்தான்!

Finland classroom_docpage

ஹெல்சின்கியில் உள்ள சில்டமகி (Siltamaki) ஆரம்பப் பள்ளியில் ஒரு காட்சி. நடைக்கூடத்தில் சிறுவர்கள் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு சிறுவர் கூட்டம் கூடத்தில் அங்குமிங்குமோடி ஆப்பிரிக்க நாட்டின் வெவ்வேறு பகுதிகளைப் பற்றியக் குறிப்புகளைச் சேகரிக்கின்றனர். அப்பள்ளியின் முதல்வர் ஆன் மரி ஜாட்டினன் (Anne-Mari Jaatinen) இதை ‘சந்தோஷமான கற்றல் முறை’ எனக் குறிப்பிடுகிறார். இந்த முறையால் மாணவர்களுக்கிடையே விளையும் ஒத்துழைப்பும் தொடர்பும் அவர்களின் படைப்புச் சிந்தனையை மேம்படுத்தும் என்கிறார் அவர்.

மாறி வரும் சூழலுக்கேற்ப கல்விமுறையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு இருக்கிறது. ஆனால் எப்படி?

Staff and pupils at the Government Girls High School, Venugopalapuram, Cuddalore. Photo: Tom Pietrasik Cuddalore town, Tamil Nadu. India October 5th 2009

எந்தக் கல்விமுறையை மாற்ற விரும்புகிறோமோ, அதிலேயே படித்து, அது உருவாக்கிய சமூகப்பிரக்ஞையற்றப் பணிகளில் அமர்ந்திருப்பவர்களிடம் சென்று அதேக் கல்விமுறையை மாற்றுவதற்கான பொறுப்பைக் கொடுத்தால் என்ன நடக்கும்? குப்பையைக் கிளறிய கதைதான். அதிசயமாக ஓர் உலக நாடு இந்த முயற்சியை எடுத்து சரியான விதத்தில் நடத்தியும் காட்டியிருக்கிறது.

ஃபின்லாந்து கல்விக்குப் பெயர் பெற்ற நாடு. படிப்பறிவுக்கான எல்லா வகை உலக அட்டவணைகளிலும் ஃபின்லாந்துதான் முன்னணி வகிக்கிறது. PISA எனப்படும் International Student Assessment தரப்பட்டியலில் சிங்கப்பூர், சீனா போன்ற கிழக்கத்திய நாடுகள் மட்டும்தான் பின்லாந்தை பின்னுக்கு தள்ளும் உயரத்தில் இருக்கின்றன. கொண்டாடப்படும் மேற்குலகில் இருந்து ஒரு நாடும் இல்லை. நம் நாடு சுத்தம்!சமீபத்தில்அப்படி ஒரு முற்போக்கான வழியை அந்நாட்டின் ஒரு மாகாணத்தில் செயல்படுத்தியிருக்கிறார்கள். சாதாரணமான மாற்றமல்ல. அடிப்படையையேப் புரட்டிப் போடும் மாற்றம்.

பாடவாரியான வகுப்புகள் (teaching by subject) இனி கிடையாது. தலைப்புவாரியான வகுப்புகள்தான் (teaching by topic) இருக்கும். இதை அவர்கள் “phenomenon teaching” என்றழைக்கிறார்கள்.

அதாவது ஒரு பதின்வயது மாணவன் தொழிற்கல்வியாக உணவகச் சேவைகளை தேர்ந்தெடுக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவன் அதற்குத் தேவையான கணக்கு, மொழிகள் (வெளிநாட்டினருக்கான சேவையின்போது பயன்படுவதற்காக), எழுதும் திறன் மற்றும் தொடர்புத்திறன் ஆகியவை சார்ந்த அம்சங்களை மட்டும்தான் படிப்பான். ஒரு மணி நேரம் வரலாறுக்கு, ஒரு மணி நேரம் பூகோளத்துக்கு என்ற வழக்கத்தையெல்லாம் அங்கிருக்கும் பதினாறு வயது மாணவனின் பாடத்திட்டங்களிலிருந்து ஏற்கனவே எடுத்துவிட்டார்கள்.

இந்த முன்மாதிரி முயற்சி நடக்கும் ஃபின்லாந்தின் தலைநகரான ஹெல்சின்கியின் இளைஞர் கல்விக்கான பொறுப்பிலிருக்கும் லிசா போஜோலெயினன் (Liisa Pohjolainen) சொல்கையில் “இங்குத் தொடங்கியிருக்கும் இந்த மாற்றம் ஃபின்லாந்தின் கல்விமுறையை பெரிதளவில் மாற்றக் கூடியதாக இருக்கும்” என்றார்.

“முன்னர்தான் வங்கிகளிளெல்லாம் கணக்குகளைப் போட ஏகப்பட்ட எழுத்தர்கள் இருந்தனர். இப்போதெல்லாம் இளைஞர்களே நவீனக் கணிணிகளை பயன்படுத்துகின்றனர். காலம் வெகுவாக மாறிவிட்டது. நவீனச் சமூகத்துக்கு ஏற்றார்போல் கல்விமுறையையும் மாற்ற வேண்டியிருக்கிறது”

என்கிறார் நகரத்தின் வளர்ச்சி பொறுப்பாளராக இருக்கும் பசி சிலாண்டர் (Pasi Silander).

ஓர் ஆசிரியர் நின்று மொத்தப் பாடத்தையும் நடத்தி முடிக்கும்வரை, கேள்விகள் ஏதும் கேட்காது, அமைதியாக வரிசையிலமர்ந்து, மாணவர்கள் கவனிக்கும் வழக்கமான முறையும் இனி இருக்கப் போவதில்லை. கூட்டுக் கல்விமுறை அதிகமாக இருக்கும். அதாவது சிறுசிறு குழுக்களாக மாணவர்கள் அமர்ந்து விவாதித்து சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் முறை.

“குழந்தைகளுக்கான விளையாட்டுப்பூர்வக் கற்றல் முறையில் ஃபின்லாந்தை முன்மாதிரி நாடாக கொண்டுவர விரும்புகிறோம்”

எனக் கூறுகிறார் இவ்வமைப்பின் இயக்குனரான ஒலாவி மென்டனென் (Olavi Mentanen).

ஆரம்பக் கல்விமுறையில் விளையாட்டுப் பூர்வமான கற்றல் முறை என்பதை அறிமுகப்படுத்த உள்ளது. அந்நாட்டின் Playful Learning Centre அமைப்பு கணிணி விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து எப்படியெல்லாம் விளையாட்டுப்பூர்வ கற்றல் முறையை செயல்படுத்தலாம் எனப் ஆராய்ந்து வருகிறது.உலக நாடுகளின் மொத்தக் கவனத்தையும் ஃபின்லாந்து கல்விமுறை ஈர்த்துள்ளது.

அதெல்லாம் சரி, நம்ம என்னத்த கத்துக்கபோறோம் இதிலிருந்து என்கிறீர்களா?

நம்மூர் அரசியல்வாதிகளுக்கு வரும் தேர்தலுக்கு போஸ்டர் அடிப்பதற்கே  நேரம் போதவில்லை, இதுல வேற கல்வி, சமுதாயம், நம் பிள்ளைகளின் எதிர்காலம்னு எல்லாம் பேசிக்கிட்டு?

மூலம்-  http://www.independent.co.uk/news/world/europe/finland-schools-subjects-are-out-and-topics-are-in-as-country-reforms-its-education-system-10123911.html?cmipid=fb

Photo credit- http://goo.gl/ccMfLM, http://goo.gl/cfe2fn

ராஜசங்கீதன்