menstruation myth_doc

மாதவிடாய் பற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள கற்பிதங்கள் பன்முகங்கள் கொண்டவை. அது ஒரு அசுத்தப் பிரச்சினையாக, தீட்டாக குடும்பங்களிலும், நட்பு வட்டங்களிலும் சமூக மற்றும் மத நிறுவனங்களிலும் கருதப்படுகிறது. குறிப்பாக, மாதவிடாய் குறித்த மெளனம், நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. அதைப் பற்றிய உரையாடல்கள் பெரும்பாலும் முணுமுணுப்புகளாகவும், ரகசியமாகவுமே நடைபெறுகின்றன.

பெரும்பாலான பெற்றோர் மாதவிடாய் பற்றிய தகவல்களையோ அது தொடர்பான செய்திகளையோ தங்கள் குழந்தைகளுடன் பேசுவதில்லை.

அம்மாக்களால் இனப்பெருக்கத்தைப் பற்றி வளரும் குழந்தைகளிடம் விளக்க முடிவதில்லை. அதனாலேயே அந்த விளக்கங்கள் பல கட்டுக்கதைகளை கொண்டிருக்கின்றன. அவையும் பெண் குழந்தைகளிடம் மட்டுமே விவாதிக்கப்படும். ஆண் குழந்தைகள் இந்த விவாதங்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இன்றும்கூட பல குடும்பங்கள் மாதவிடாய்க் காலங்களில் பெண்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துவதைக் காணலாம்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாலியல் கல்வி வகுப்புகள் ஆண்குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தனித்தனியாகத்தான் நடத்தப்படுகின்றன. இது போன்ற விவாதங்கள் வெளிப்படையாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக விவாதிக்கப்படக்கூடாது என்கிற நம்பிக்கையையே இது காட்டுகிறது.

தேவையான சுகாதார கழிப்பிட வசதிகள் பள்ளிகளில் இல்லாததாலேயே பல பெண் குழந்தைகள் பருவமடைந்தபின் கல்வியை தொடர்வதில்லை. விஞ்ஞானக் கண்ணோட்டத்தை மாணவர்கள் மத்தியில் நம் கல்வியமைப்பு ஏற்படுத்தாதன் விளைவு, பெண்கள் அவர்களின் உடல்களை அவமானமாகக் கருதவைக்கப் படுகின்றனர்.

சமூக மற்றும் மத நிறுவனங்கள் மாதவிடாய்க் காலத்தில் பெண்களை அனுமதிப்பதில்லை. அவர்கள் தீட்டுப்பட்டவர்களாக கருதப்படுகின்றனர். பெண்களின் சமூகப் பங்களிப்பையும், மதப் பங்களிப்பையும் ஒடுக்க மாதவிடாயை ஓர் ஆயுதமாக ஆணாதிக்கம் பயன்படுத்துகிறது. மாதவிடாய்ப் பெண்கள் தீட்டுப்பட்டவர்கள், அசுத்தமானவர்கள் என்கிற கற்பிதத்தை பல சடங்குகள், கதைகள் மூலம் வலுவாக்கி அவர்களின் வழிபாட்டு உரிமையைக்கூட இல்லாமலாக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களும் விதிவிலக்கல்ல. அவைகளும் மாதவிடாயைப் பெண்கள் அவமானமாகக் கருதவேண்டுமென்கிற ஆணாதிக்க சிந்தனையையே பிரதிபலிக்கின்றன. அதிலும் மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்தும் பொருட்களுக்கான விளம்பரங்கள் “மாதவிடாயின்போது ஏற்படும் அசவுகரியத்தை இந்த பொருளைப் பயன்படுத்துவதால் மறைக்கலாம்” என்றுதான் கூறுகின்றன.

மாதவிடாய் என்பது மறைப்பதற்கொன்றும் நோயல்ல என்பதையும் அதற்காக குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டியதில்லையென்பதையும் இந்த விளம்பரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றன. அதிலும் இவ்வகை விளம்பரங்களில் காட்டப்படும் திரவம் ஏன் சிவப்பாக இல்லாமல் நீல நிறத்தில் இருக்கிறது எனபது புதிரேயாகும்.  பெண்களின் ரத்தம்தான் அது என்பது அனைவரும் தெரிந்ததே. மனித குலம் வாழ சிந்துகின்ற ரத்தம் அது. அப்படியிருக்க, இவ்வகை ரத்தத்தைக் காட்டுவதில் ஊடகங்களும் மற்றவர்களும் தயக்கம் காட்டுவது ஏன்?

நம் பெற்றோர் காலத்தில் இவ்வகை நம்பிக்கைகள் இருந்ததைக்கூட மன்னித்துவிடலாம். ஏனெனில் அவர்கள் காலத்தில் இவற்றைப் பற்றி விவாதிக்க பொதுத்தளங்கள் இருந்ததில்லை. அதைவிட முக்கியம் அந்த காலம், கேள்விகள் கேட்பதைக்கூட ஏற்றிராத காலம். இப்போதும்கூட மாற்றங்களை விரும்பும், வலுவான நம்பிக்கைகளை எதிர்க்கும் கேள்விகளை ஆதரிக்கும் சமூகம் இல்லையெனினும் இவற்றை விவாதிக்கும் தளங்கள் பல இருக்கின்றன. பல காணொளிகள், புத்தகங்கள், வலைத்தளங்கள் இன்னும் பல வழிகள் நாம் மாதவிடாயைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் பேசவும் இன்று இருக்கின்றன. ஆதலால், மாதவிடாயைப் பற்றி நாம் பேச ஆரம்பிப்போம். குறிப்பாக தங்கள் உடல்களை பற்றி அறிந்துகொள்ள விரும்பும் இளைஞர்களிடம் பேசுவோம்.

தவறான தகவல்களாலும் புறக்கணிப்பாலும் மற்றுமோர் தலைமுறையை நாம் உருவாக்க வேண்டாம். அவர்களின் உடலைப் பற்றி அறிந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. உண்மைகளை தெரியப்படுத்தினால்தான் அவர்களால் கட்டுக்கதைகளையும் கற்பிதங்களையும் எதிர்த்துப் போராட முடியும்.

மூலம் – http://menstrupedia.com/blog/raising-a-generation-free-from-menstrual-taboos/

ஆசிரியர் – பிராச்சி பிரபு

தமிழில் – ராஜசங்கீதன்