polar bear01_docpage

 

புவி வெப்பமடைதல் பற்றி காலங்காலமாய் பலர் பேசி வந்தாலும், அதற்கு விழிப்புணர்வு இருந்தாலும், அதன் விளைவுகள் கண்கூடாக தெரியும் வரை நாம் யாரும் அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. தன்னை தனிப்பட்ட முறையில் இது பாதிக்கப் போவதில்லையே என்னும் எண்ணமும், பழக்கப்பட்டுவிட்ட வாழ்க்கை முறைகளும் புவி வெப்பமடைதலை பெரிதாக் கண்டுக்கொள்ளாமல் இருப்பதற்கு சில காரணங்கள் ஆகிறது. ஆனால் இனியும் இப்படி இருந்தால் என்ன ஆகும் என்பதற்கான  அபாய மணி அடிக்க ஆரம்பித்திருக்கிறது.

நேஷனல் ஜியோகிராஃபியை சேர்ந்த பால் நிக்லென், சென்ற ஆண்டு வெயில் காலத்தில் நார்வேக்கும் வட துருவத்திற்கும் நடுவே உள்ள ஸால்பர்ட் எனப்படும் தீவுக் கூட்டத்திற்கு பனிக்கரடிகள் வேட்டையாடப்படுவதை பற்றிய ஆராய்ச்சி செய்வதற்காக  சென்ற போது, பசியால் இறந்த இரண்டு பனிக்கரடிகளை கண்டுள்ளார்.   

ஜெர்மனியை சேர்ந்த புகைப்பட கலைஞர் கெர்ஸ்டின் லேங்கன்பெர்கர் சமீபத்தில் இதே ஸால்பர்ட்  தீவுக்கு சென்று இருக்கின்றார். அங்கு பனிக்கரடிகள் மிகவும் உடல் நலக்குறைவுடன் இருந்ததை கண்டுள்ளார். மேலும் பசியால் வாடிய நிலையில் இறந்த பனிக்கரடிகளையும் புகைப்படம் எடுத்து தன் பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் இறந்த பனிக்கரடிகளை பார்த்தேன். மேலும் பசியால் இறந்த ஒன்றையும் கண்டேன். நான் கவனித்தவற்றை நிரூபிப்பதற்க்கு, என்னிடம் அறிவியல் ரீதியான தகவல்கள் இல்லை. ஆனால் நான் பார்த்தவற்றை வைத்து என்னால் அதன் காரணத்தை யூகிக்கமுடிகிறது.”

மேலும், “நாசாவின் அறிக்கைப்படி நூறாண்டுகளில் புவியின் வெப்பம் சராசரியாக மூன்று டிகிரி வரை அதிகரிக்கிறது. அதே போன்று கடல் நீரின் அளவு 2.5 சென்டிமீட்டருக்கும் அதிகமாக உயருகிறது. இந்த நிலமை அனைத்து உயிர்களையும் பாதிக்கும் என்றாலும் பனிக்கரடிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றது. அவற்றின் இயற்கையான சூழலில் அவற்றை உயிரோடு காண்பது மிகவும் அரிதாகி வருகிறது. உயரும் வெப்பநிலையால் பனி பாளங்கள் ஒரு வருடதிற்கு 8.6 மில்லியன் ஏக்கர்கள் என்ற அளவில் வட துருவத்தில் உருகுகிறது. இதனால் இங்கு வசிக்கும் சீல் இனம் இடம் பெயருகிறது. இதனை உணவாய் உண்ணும் பனிக்கரடிகள் வேறு வழியில்லாமல் உணவு தேடி நெடுந்தூரம் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. இந்த நெடும் பயணம் பெரும்பாலும் சரியான உணவிற்கு அழைத்து செல்வதில்லை. விளைவு?  பசியால் உயிரை விடுகின்றன!“, என குறிப்பிட்டுள்ளார்.

 

polar bear_docpage

 

பனிக்கரடிகளை குற்றம் கூற முடியாது. அவை அப்படியே வாழ்ந்து பழகிவிட்டது. திடீரென மாற்றங்கள் ஏற்பட்டால் அதனுடனும் வாழ முயற்சிக்கிறது. ஒரு பெற்றோராய் தன் குட்டிகளுக்கும் தனக்கும் உணவு தேட முயல்கிறது. அதில் இறுதியில் தோல்வி அடைந்து உயிரை விடுகின்றது.  

இயற்கையின் உணவு சங்கிலி உடையும் போது மனித இனம் மட்டும் அதன் விளைவுகளிலிருந்து தப்பித்து வாழ்ந்திட முடியாது. வருமுன் காப்பதே நலம் என்பதால்,  நம்மால் முடிந்த அளவில் இயற்கையோடு ஒன்றி வாழ்வோம் ! வாழவும் விடுவோம் !

மூலம்- http://www.scoopwhoop.com/news/starved-polar-bear/

தமிழில்- ஜெயஸ்ரீ ரமேஷ்