crossgender friendship01

எந்தக் குழந்தையை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். எதிர்பாலினத்துடனான நட்பு என்றாலே பயப்படுவார்கள். ஆண்குழந்தைகளும் சரி, பெண் குழந்தைகளும் சரி அடுத்த பாலினத்தைப் பற்றிய எதிர்மறையான, விரோதமான கருத்துக்களைத்தான் கொண்டிருக்கின்றனர்.

வெவ்வேறு வயதுகளில் மாறிவரும் எதிர்பாலின நட்புறவுகள்

குழந்தைப்பருவத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. பால் பேதம் பாராமல் ஒருவருடன் ஒருவர் விளையாடுவதைப் பார்க்கலாம். நான்கு வயதின்போதுதான் தங்களின் பாலின அடையாளத்தை அவர்கள் உணர ஆரம்பிக்கின்றனர். தோற்றங்களை மாற்றுவதோ, உடைகளை மாற்றுவதோ முடியின் நீளமோ பாலினத்தை தீர்மானிப்பதில்லை என்பதை ஏழுவயதில் அறிந்துகொள்கின்றனர். இப்படியாக வலுப்பெறும் புரிதல்தான் அவர்களின் சமூக அடையாளத்தை உருவாக்க எடுத்துவைக்கும் முதல் அடியாகும். தம் பாலினம் சார்ந்தவர்களை சேர்த்துக் கொள்வதாலும் எதிர்பாலினத்தை புறக்கணிப்பதாலும் இது இன்னும் வலுப்பெறுகிறது. இந்த நேரத்தில்தான் ஒவ்வொரு பாலினத்தையும் பற்றியும் சமூகம் உருவாக்கிய கருத்துக்கள் உள்ளே நுழைய ஆரம்பிக்கின்றன. ‘பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்’, ‘ஆண்கள் அழ மாட்டார்கள்’ போன்றவை! இரு பாலினங்களும் ஒன்றுக்கொன்று கடுமையான பாரபட்சம் காட்டத் தொடங்குகின்றன. நட்புறவுகள் ஒரே பாலினத்துக்குள் உருவாக்கப்படுகின்றன. ஒரு சிறுவன் அவன் ஆண் என்பதையும் எது அவனை ஆணாக்கியது என்பதையும் புரிந்துகொள்கிறான். ஆண்குழந்தைகளிடம் மட்டும் நட்பு பாராட்டுகிறான். எதிர்பாலினத்தை குறைப்படுத்தி தம் பாலின அடையாளத்தை வலுப்படுத்திக் கொள்கிறான்.

இளமைக்காலம் வரை இந்த நிலைதான். ஆனால், இளமைக்காலத்தில் ஹார்மோன்களாலும் இன்ன பிறவற்றாலும் எதிர்பாலினத்தால் ஈர்க்கப்படுகின்றனர். பெண் அடக்கமானவள், ஆண் முரட்டுத்தனமானவன் என்பன போன்ற கருதுகோள்களால் எதிர்கால உறவுநிலைகளை நிர்ணயிக்கும் நிலை உருவாகிறது.

குழந்தைகளின் வாழ்க்கைத்திறன் மேம்பட உதவும் எதிர்பாலின நட்பு

தொழிலுலகத்தில் பாலின வேறுபாடுகள் மறைகிற அதே நேரத்தில் பாலினம் சார்ந்த அரசியல் அதிகரிக்கிறது. அதனாலேயே நட்பைப் பற்றியும் அது பாலின வேறுபாட்டிலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டியது கட்டாயமாகிறது.

இருபாலினத்திலும் நண்பர்களை கொண்டிருப்பதால் ஏற்படும் பயன்கள்

  • எதிர்பாலினர் மீதுள்ள மனநிலையை மாற்றுவதற்கான ஒரே வழி அவர்களுடன் தொடர்பு கொள்வதுதான்.
  • எதிர்பாலின நட்புறவுகள்தாம் சிறுவர்க்கும், சிறுமியருக்கும் அடுத்த பாலினத்தை மதிக்கவும் அவர்களை ஆண், பெண் அடையாளங்களுக்குள் அடக்காமல் ஒரு தனி நபராக கருதுவதற்கும் கற்றுக்கொடுக்கும்.
  • எதிர்பாலினத்துடன் தொடர்புகொள்ள வேண்டிய தருணத்தில் ஏற்படுகிற தயக்கத்தை குழந்தைகளிடம் போக்கவும் உதவும்.
  • பாலினம் கருதாமல் நட்பு பேணுதல் சமூக திறன்களையும் வளர்க்கும்.
  • பாலினம் தாண்டி கொள்ளும் நட்பு சுய மதிப்பை உருவாக்கும்.
  • எதிர்பாலினத்துடன் விளையாடுவதும் பொழுதுபோக்குவதும் நட்பு பாராட்டுவதும் கல்யாணம் போன்ற எதிர்கால உறவுகளை சரியான முறையில் அணுக  அடித்தளம் அமைக்கும்; அதற்கான எல்லைகளையும் கற்றுக்கொடுக்கும்.
  • முடிவாக, எதிர்பாலின நட்புறவுடன் நீங்கள் வளரும்பட்சத்தில் ஒருவரின் திறனை அவர் செய்யும் வேலையால் மட்டுமே மதிப்பிடப் பழகுவீர்கள்; அவரின் பாலினத்தால் அல்ல.

எதிர்பாலின நட்புறவுகளை ஊக்குவிக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை.

நட்புறவுகள் வீட்டுக்கு வெளியே ஏற்படுபவை. அவைப் பெரிதும் வெளியுலக செல்வாக்கின் நிகழ்பவையெனினும் நாம் நம் குழந்தைகள் சரியான நட்புத்தேர்வுகளை செய்ய உதவ வேண்டும்.

பாலின கருத்தாக்கங்களை உடையுங்கள்

எதிர்பாலின நட்புறவுகள் பெரும்பாலும் பாலினங்களைப் பற்றிய பாரபட்சங்களால் பாதிக்கப்படுவதால் அவை பற்றிய கருத்தாக்கங்களை குறைக்க முற்படுங்கள். எதிர்பாலினத்துடன் விளையாடும் தருணங்கள் உரையாடலுக்கு வழி ஏற்படுத்துவதோடு அடுத்த பாலினம் மீதான மதிப்பை தோற்றுவிக்கிறது.

குழந்தைகள் அவர்தம் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்குவியுங்கள்

‘சிறுவர்கள் முரடர்கள், சிறுமிகள் இனிமையானவர்கள்’ போன்ற வாக்கியங்கள் தடுக்கப்பட வேண்டும். ஒரு சிறுமி கோபம் கொண்டால், அவள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள். போலவே, ஒரு சிறுவன் காயப்பட்டு அழுவதையும் அனுமதியுங்கள். எல்லா வகையான உணர்வுகளையும் ஒருவரின் பாலின சிந்தனையின்றி இயல்பாக வெளிப்படுத்த அனுமதியுங்கள்.

எதிர்பாலினருடனான நடவடிக்கைகளை ஊக்குவியுங்கள்.

பல நேரங்களில் பள்ளிகளும் சரி பெற்றோரும் சரி இன்ன பாலினத்துக்கு இன்ன நடவடிக்கைகள்தான் சரி எனத் தீர்மானிக்கின்றனர். சிறுமிகள் சமையல் வகுப்புகளில் சேர்க்கப்படுகிவார்கள். சிறுவர்கள் மட்டும் விளையாட்டுக்களில் சேர்க்கப்படுவர். இருபாலினரும் கலந்த விளையாட்டு அணிகளை உருவாக்க பள்ளிகளை நிர்ப்பந்தியுங்கள். இருபாலினரின் தொடர்பையும் பெரிதுபடுத்தி பிரச்சினை செய்யாதீர்கள். இந்தியப் பெற்றோர் தங்களின் குழந்தைகள் எதிர்பாலின குழந்தைகளுடன் பழகுவதற்கு எதிராக இருக்கிறார்கள். இந்தப் பழக்கத்திற்கு மேலோட்டமாக நாம் சம்மதித்தாலும் உள்ளார்ந்த நம் செயல்பாடுகள் வேறு அர்த்தத்தைத்தான் கொடுக்கின்றன. ஒரு குழந்தை வகுப்பில் உள்ள ஒரு நட்பை பற்றி விவரிக்கும்போது, அந்த நட்பு என்ன பாலினம் என அறிய விழையாதீர்கள். எதிர்பாலினத்தைப் பற்றி குழந்தை சொல்லும்போது அதிக ஆர்வம் கொள்ளாதீர்கள்.

பாலினப் புரிதலுக்கான உதவி

இனப்பெருக்கம் பற்றிய விவாதத்தை நாம் தவிர்த்துவிடுகிறோம். ஆனால் அது பற்றிய அறியாமைதான் இருபாலினத்துக்குமான இடைவெளியை அதிகப்படுத்துகிறது. இனப்பெருக்கம் காரணமாக இருபாலினருக்குமிடையே உள்ள வித்தியாசங்களைப் புரிந்துகொண்டால் ஒரு நபரை பற்றி  தீர்மானிக்க அவை முக்கியமில்லை என குழந்தைகள் புரிந்துகொள்ளலாம்.

சமமாக நடத்துங்கள்

பெற்றோர் சிறுவர்களையும் சிறுமிகளையும் கையாள்வதில் பேதம் காட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். உங்கள் மகனின் தோழியை சந்திக்கும்போது இயல்பாக இருங்கள். மகளின் தோழனிடமும் இயல்பாயிருங்கள். உங்களின் குரலை வழக்கத்தைவிட மென்மையாக்க வேண்டியதில்லை. சிறுமிகள் ஒன்றும் பீங்கானால் செய்யப்பட்டவர்கள் அல்ல. போலவே சிறுவர்களும் கல்லால் செய்யப்பட்டவர்களல்ல.

கிண்டல்களைக் கையாள அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்

ஒரு நாள் என் ஒன்பது வயது மகன் கோபத்துடன் வீடு வந்தான். அவன் ஒரு சிறுமியிடம் பேசியதை அவன் நண்பர்கள் கிண்டல் செய்து இருவரையும் ‘காதலன்-காதலி’ எனக் கூறியிருக்கிறார்கள். ஆக நாங்கள் கிண்டல் என்பது எப்படி துன்புறுத்துதலின் எளிய வடிவம் எனப் பேசினோம். இயல்பை மீறிய எதுவும் குறி வைக்கப்படும். நாம் இந்த உலகை மாற்ற வேண்டியதில்லை, ஆனால் நம்மைச் சுற்றி ஓர் அரணை உருவாக்கி நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

  • உங்களின் குழந்தைகள் பாலின வகைப்பாடுகளில் ஆட்படாமல் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கக் கற்றுக்கொடுங்கள்.
  • அவர்களுக்கு ஆண் மற்றும் பெண் நண்பர்களின் முக்கியத்துவத்தை அறியக் கற்றுக்கொடுங்கள்.
  • எது முக்கியமென கேளுங்கள்? அவர்களது நண்பர்களா அல்லது மற்றவர்கள் செய்யும் கிண்டலா என்று.
  • வித்தியாசமாய் இருப்பதில் தவறொன்றுமில்லை என குழந்தைகளுக்கு விளக்குங்கள். மற்ற குழந்தைகளின் கிண்டலுக்கு பயந்து நட்பை முறித்துக்கொள்வது முட்டாள்தனம் என எடுத்துக் கூறுங்கள்.
  • யாரேனும் செய்த கிண்டலை உங்கள் குழந்தை சொல்லும்போது வருத்தமடையாதீர்கள். நீங்கள் வருத்தப்பட்டால், அடுத்தமுறை கிண்டல் பேசினால் குழந்தை உங்களிடம் சொல்லாது.
  • அன்புடன் கேள்விகளைக் கேளுங்கள். உண்மையான பதில்களைக் கூறுங்கள். எதிர்பாலினத்துடன் கொள்ளும் நட்பால் கிண்டல் பேசப்படலாம் எனக் குழந்தைகளை எச்சரிக்காதீர்கள். அதைப் பற்றி உங்கள் குழந்தை கேட்டால், அவன் கிண்டல் செய்யப்படலாம் என்றும் ஆனால் அதை அவன் சமாளிப்பான் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருப்பதாகவும் கூறுங்கள். ஏனென்றால், எச்சரிக்கை அவனுக்கு பயத்தை ஏற்படுத்தலாம்.
  • அப்படி யாரும் கிண்டல் செய்தால் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென கற்றுக்கொடுங்கள். உதாரணமாக, உங்கள் குழந்தையை உங்களை கிண்டல் பேசச் சொல்லுங்கள். அவற்றை எப்படி அந்த குழந்தை எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி நீங்கள் எதிர்கொண்டு காட்டுங்கள். கிண்டலைக் கையாள குழந்தை கற்கட்டும்

இந்த வழிவகைகளைக் கொண்டு பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளிடம் எதிர்பாலின நட்புறவுகளை ஊக்குவிக்க ஆரம்பிக்கலாம். ஏனெனில் பாலின பேதமின்றி நட்பு பேணுதல் குழந்தையை முழு வளர்ச்சியடைய கண்டிப்பாக தேவை .

மூலம் – http://www.womensweb.in/articles/how-to-teach-children-about-friendship/

ஆசிரியர் –  By Tanu Shree Singh

தமிழில் – ராஜசங்கீதன்