creativity_docpage

இந்தக் கேள்வி இன்றைய பெற்றோரைக் குழப்பும் பல கேள்விகளில் ஒன்று. படைப்பாற்றலை உருவாக்குதல் என்பது கல்வி நிறுவனங்களின் சமீபத்திய விளம்பர உத்தியாகிவிட்டது. வியாபார யுகத்தில் நிறுவனங்கள் தம் தொழிலை தக்கவைத்துக் கொள்ள பல கருத்துக்களை உருவாக்குகின்றன. உண்மை என்னவென்று ஆராயாமல் நாமும் அவற்றுக்குப் பலியாகிறோம்.

படைப்பாற்றல் என்பது என்ன? அதை மற்ற பாடங்களைப் போலவே கற்று கொடுக்க முடியுமா?

இதற்கான பதிலை கண்மூடித்தனமாக இல்லாமல், அறிவுப்பூர்வமாக அணுகுவோம். படைப்பாற்றல் கொண்டவர்கள் எல்லாம் யார்?

‘முதலில், மனிதனாக பிறந்த அனைவருக்கும் படைப்பாற்றல் இருக்கிறது’

படைப்பாற்றலுக்கு கூர்மையான புத்தி வேண்டியதில்லை. பெரியப்- பெரியப் புத்தகங்களின் அவசியமில்லை. ஆனால் படைப்பாற்றல் என்பது இயல்பானதல்ல, உருவாக்கப்பட வேண்டியது என்றுதான் பல ஆண்டுகளாக நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. பல உதாரண மனிதர்கள் காண்பிக்கப்படுவர். அவர் இதைக் கண்டுப்பிடித்தார், இவர் அதை உருவாக்கினார் என. நீயும் அதைச் செய்ய வேண்டும். அவரைப் போல இருக்க வேண்டும், படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறோம். அந்த கருத்தை இப்போதாவது கைவிடுங்கள்

படைப்பாற்றல் கொண்டவர், படைப்பாற்றல் அல்லாதவர் என்றெல்லாம் வித்தியாசங்கள் இல்லை. உங்களுக்கு நம்பிக்கையளிக்கும் பொருட்டு நான் இப்படிக் கூறவில்லை. இதுதான் அறிவியல்பூர்வமான உண்மை. இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன்.

படைப்பாற்றல் என்பதுதான் மனிதப் பரிணாமத்தின் அடிப்படை. யோசித்துப் பாருங்கள். எது நம்மை மிருக இனத்திலிருந்து பிரித்தது?

மொழியா? மிருகங்களிடமும் மொழி இருக்கிறது. நமக்கது புரியவில்லை என்பதற்காக அது மொழியன்று எனச் சொல்ல முடியாது. அப்படியானால் மனமாக இருக்குமோ? தாயை இழந்தக் குட்டிகள் பல நாட்கள் உண்ணாமல் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். மனம் என்னும் மூளையின் செயலியக்கம் இல்லாமல் இப்படி வருந்துவது சாத்தியமில்லை. ஆக, இதுவும் கிடையாது. பின் எது நம்மைப் பிரித்தது? குகைகளில் ஆதி மனிதர்கள் வரைந்த ஓவியங்களை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். வேறேந்த மிருகமும் ஓவியம் வரைவதில்லை. அப்படியே வரைந்தாலும் அதை நாளடைவில் செழுமையாக்கி அதன் மூலம் மற்றவருக்கு சேதி சொல்ல விழைந்ததில்லை. அந்த சேதிகளுக்கேற்ப அவற்றை சுருக்கி எழுத்துக்களை உருவாக்கியதில்லை. இப்போது சொல்லுங்கள், நமக்கு படைப்பாற்றல் இயல்பானதில்லையா?

மனிதன் தன்னிச்சையானவன். அவன் உருவாக்கிய எதுவும் பிரபஞ்சக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நூலளவுகூட முக்கியமில்லை. ஆனாலும் அவன் படைத்ததை அவன் கொண்டாடுவான். ஏனெனில் நாம் படைப்பது யாவும் நாம் உருவாக்கியுள்ள உலகில் மட்டுமே முக்கியமானவை. வான்காவின் ஓவியம் நமக்குத்தான் அழகு, ஆல்ஃபா சென்ட்டாரி நட்சத்திரத்துக்கு அல்ல! ஆக, நம் படைப்பாற்றலை அளப்பதற்கு எந்த அளவுகோலும் இல்லை. கல்வி புகட்டுபவர்கள் இந்த உண்மையைக் கண்டிப்பாக உணர்ந்திருக்க வேண்டும். அவர்கள்தான் மாணவனின் படைப்பாற்றலை அங்கீகரிக்கப் போகிறவர்கள்.

முக்கியமாக, படைப்பாற்றல் என்ற கருதுகோளில் தவறாகக் கூறப்படுவது அது புதுமையாக இருக்க வேண்டுமென்பதுதான். ஒரு விஷயம் புதிதாக இருந்தால்தான் அது படைப்பாற்றல் உள்ளதாகக் கருதப்படுகிறது. உண்மை என்னவென்றால் இந்த பூமியில் எதுவும் புதிதல்ல. அதிலும் நம் பரிணாமம் என்பதே “போலச் செய்தல்” எனப்படும் imitation-ஐ அடிப்படையாகக் கொண்டதுதான். பெரும் கட்டடங்களைக் கட்ட சிலந்திப் பூச்சிகளைப் பார்த்துக் கற்றுக்கொண்டோம். பறவையைக் கண்டு விமானம் படைத்தோம். சூழலைப் பார்த்துதான் நம்மின் பலவற்றை உருவாக்கினோம். இயற்கையின் சத்தங்கள்தான் நமக்கு மொழியை உருவாக்கக் கற்றுக்கொடுத்தது.

படைப்பாற்றல் மனிதனுக்கு இயல்பானதென்றால் எதையெல்லாம் படைப்பாற்றல் என்று அங்கீகரிக்க வேண்டும்?

இந்தக் கேள்விக்கு பின்வரும் படங்களைக் கொண்டு பதிலளிக்க முனைகிறேன்.

dashrat mahanji_docpage

இது ஒரு சாமானியன் தசரத் மாஞ்சி (Dashrath Manjhi) உருவாக்கியது. இவருக்கு பங்குச்சந்தை தெரியாது. தொழில்நுட்பம் தெரியாது. படைப்பாற்றலை உருவாக்க எந்த வகுப்புக்கும் செல்லவில்லை. சொல்லப்போனால் இவர் படிக்கக்கூடவில்லை. மலையைக் குடைந்து சாலையமைப்பது அனைவருக்கும் உதவும் என்பது மட்டும் இவருக்குத் தெரியும். தன் வாழ்க்கையின் 18 வருடங்களை இதற்காகவே செலவழித்தார்.

Stone Wheel
Stone Wheel

இதை உருவாக்கியவனுக்கு எழுதக்கூடத் தெரியாது. நம் முன்னோர்கள் நாக்குகளை அன்னத்தில் தட்டி ஓரசைச் சொற்களை ஒலியாக எழுப்பிக்கொண்டிருந்த காலத்தில் இது உருவாக்கப்பட்டது.

 

honey-bee-hive_docpageஇது ஒரு தேனீக்களால் கட்டப்பட்டது. பல காலமாக தேனீ யினம்  இதைச் செய்துவருகிறது. செயற்கையான கட்டிடங்களை பாராட்டுகிற நாம் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறோம். ஒழுங்கில்லாத ஓர் உலகில் ஒழுங்கமைப்பதையே  நாம் அற்புதம் என்கிறோம். ஆனால் ஒரு நுண்ணுயிர் இனம் இதே போன்ற அற்புதங்களை அதிக ஒழுங்கோடு கட்டிவருகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

நாம் கொண்டிருக்கும் இந்த பெருமித உணர்வு முற்றிலும் குறுகலானது, கற்பனையானது.

சரி. மனித இனமாக, தன்னிச்சையாக எதையாவது நாம் அற்புதமாக செய்கிறோமா?

பணம் ஒன்று மட்டுமே இலக்கென ஓடிக்கொண்டிருக்கும் இன்றையப் பள்ளிப்படிப்பில், மெய்யான மனித வெளிப்பாட்டைப் பற்றி நாம் பேசுவதில்லை. ஆனால் கலைவடிவங்கள் இதைப் பேசுகின்றன. இந்தக் கலைகள்தான் மனிதனை சிறப்பானவனாக்குகிறது. மனித இனத்தின் தனித்துவம் கலைகள். பரிணாமத்தின் உச்சமாக மனிதனை ஆக்குவதும் இவைதான்.

படைப்பாற்றலுடன் இருப்பதுதான் நமது இயல்பு. இயற்கையிடமிருந்து இதைப் பெற்றிருக்கிறோம். உங்களின் உள்ளுணர்வை பின்தொடர்ந்தால் போதும். படைப்பாற்றலைக் கைக்கொண்டு விடுவீர்கள். மற்றபடி லாபத்துக்காக கட்டமைக்கப்படும் ‘உங்களுக்கு படைப்பாற்றல் இல்லை’ என்கிற கோஷத்தை நம்பாதீர்கள். ஏனெனில் நீங்கள் படைப்பாற்றல் உள்ளவர்தான். அப்படியிருந்ததால்தான் நீங்கள் மனிதன் ஆகியிருக்கிறீர்கள்.

மூலம் – http://blog.ei-india.com/2015/03/creative-or-not/

Picture Credit- http://www.junoon.co/sw-store/images//junoon/junoon.co-10915327.jpg, http://globalvoicesonline.org/wp-content/uploads/2013/09/4494087652_181058e0c7_b.jpg

ஆசிரியர்- க்ரிதீஷ் பரஷர், கல்வி நிபுணர்

தமிழில்- ராஜசங்கீதன்