iit mumbai_doc

நான்காண்டு கல்லூரி வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டதும் கற்றுக்கொள்ளாததும்

கடந்த சில நாட்களாகவே ஏதோவொரு கவலை என்னை அரித்துக் கொண்டிருந்தது. ஐஐடி(IIT)-யின் உள்ளே பொவாய் (Powai) ஏரியின் குறுக்கே மங்கலான ஒளிவீசும் விளக்குகளை உடைய சாலைகளில் தனிமையில் நடந்தும், ஆழ்ந்த ஆன்ம தேடலிலும் கொஞ்ச நாட்களாக ஈடுபட்டிருந்த எனக்கு, மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்திய இந்த இனம்புரியாத கவலை என்னவென்று புரிந்து கொள்வதில் சிரமமேதும் இருக்கவில்லை. என் மனதை இந்த கவலைப் புயல் ஆட்கொண்டதற்கு என்ன காரணம் என்றும் அறிந்துகொண்டேன். அது என்னவென்றால், இன்னும் சில தினங்களில் நான் வளாக வேலைவாய்ப்பு தகுதித் தேர்வுகளில் பங்குபெற வேண்டியிருப்பதேயாகும். இந்த வளாக வேலைவாய்ப்பு தகுதித்தேர்வு என்பது என் உடன் பயிலும் நண்பர்களுக்கும், வேறு பல மாணவர்களுக்கும் அவர்தம் வாழ்க்கையிலேயே ஆகப்பெரிய வாய்ப்பாகும். இரவுபகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்து, தூக்கம் கண்களைத் தழுவாதிருக்க அடிக்கடி குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்து, எப்பாடுப்பட்டாவது ஐஐடி-ஜீ (IIT-JEE) தேர்வை வெற்றி கொள்ளத் தயாரான எங்களுக்கு ஊட்டப்பட்ட ”உயர்தர வாழ்க்கை வசதிகளை தரக்கூடிய கௌரவமான வேலை – அதிகப்படியான வருமானம்” என்ற அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கனவு நனவாகப் போகும் இடம் அது. இப்படியாக மேற்கொண்ட கடின உழைப்பு எங்களில் பலரை இந்த மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் நுழைய வைத்திருந்தாலும் எங்களில் பலரின் நோக்கம் இந்த உயர்தர “வாழ்க்கை-வேலை-வருமானம்” என்பதை எதிர்ப்பார்த்து இருந்ததே தவிர தொழில்நுட்பத்தில் சிறந்து நல்ல பொறியாளனாக பரிணாமம் அடைந்து தாம் சார்ந்த தொழில்நுட்பத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதில் இருந்ததில்லை. மேலும் மோசமானது/முரணானது என்னவென்றால் பொறியாளர்களாக நான்காண்டுகளாக பயிற்றுவிக்கப்பட்ட எங்களில் பலர் முதலீட்டு வங்கியாளர்களாகவோ, பகுப்பாய்வாளர்களாகவோ, ஆலோசகர்களாகவோ பணியில் அமர்வது தான்.

 சரியாக மூன்றரை ஆண்டுகளுக்கு முன் (July 2011), பம்பாயில் பருவக்காற்று உச்சத்தில் இருந்த சமயத்தில், ஜூலை மாதத்தின் ஒரு மழை நாளில் நான் ஐஐடி பம்பாயின் உலோகப் பொறியியல் மற்றும் பொருட்கள் அறிவியல் (Metallurgical Engineering and Materials Science) வகுப்பில் சேர்ந்தேன். இன்னும் ஒரு செமஸ்டரே மீதமுள்ள நிலையில், இன்றைய நாள் ஏழாவது செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் நான், ஜூலை 2011-ல் எந்த அளவு கல்வியறிவோடு இருந்தேனோ அப்படியே தான் இருக்கிறேனென்பதை ஒருவித அவமானத்தோடும், விரக்தியோடும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இங்கே ஐஐடி-பம்பாயில் தங்கியிருந்ததில் நான்காண்டுகள், சரியாக சொல்லவேண்டுமென்றால் 40 மாதங்கள் – வயது மட்டும் தான் அதிகரித்து உள்ளது. ஆனாலும் இங்கே நான் கற்றுக்கொண்டவையும், அனுபவித்தவையும் எண்ணிலடங்காதவை என்பதில் சந்தேகமெதுவும் இல்லை. மற்ற கல்லூரிகளில் நான் எதிர்ப்பார்க்கக் கூட முடியாத விஷயங்களை இந்நிறுவனம் எனக்களித்துள்ளது – என் சிந்தனைகளை வளமாக்க இந்த இடம் அளித்த தாராளமான சுதந்திரம். இங்கு நான் தங்கியிருந்த நான்காண்டு காலம் முழுவதும் அதே மரங்கள், அதே சாலைகள், அதே துறைகள், அதே விடுதிகள், அதே உணவருந்துமிடங்கள் மற்றும் அதே ஓய்வறைகளை மட்டுமே பார்த்து வாழ்ந்திருந்தேன். ஆண்டுகள் ஒவ்வொன்றாக கடந்து செல்ல செல்ல நான் – என் வாழ்க்கையின் பல்வேறு குறிக்கோள்கள், பரிமாணங்கள் மற்றும் உணர்வுசார், அறிவார்ந்த, தத்துவார்த்த பிரச்சனைகளை முதிர்ச்சியோடு முன்னெடுத்துக்கொண்டும், ஆர்வம் மற்றும் பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொண்டும் – ஒரு மேம்பட்ட மனிதனாக பரிணாமம் அடைந்திருக்கிறேன். இந்த இடம் எனக்கு என்னென்ன கற்றுத்தந்தது என்பதை பேசத் துவங்கினால் நேரம் போதாது. அதைப் பற்றி பிறிதொரு பதிவில் பார்ப்போம். மாறாக இங்கு நான் என்ன கற்றுக்கொள்ளவில்லை என்பதிலே அதிகம் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

நான் எதற்காக இங்கு இருக்கிறேனோ – கல்வி கற்க – அதைத் தவிர மற்ற எல்லாவற்றையுமே நன்றாக அனுபவித்திருந்திருக்கிறேன். இந்த மூன்றரை ஆண்டுகளில் இங்கு நான் பாட சம்பந்தமாக கற்றது பூஜ்யம்தான் என்பதை சொல்லவே வெறுக்கிறேன். இது என்னுடைய மீதமிருக்கும் வாழ்நாளில் அடிக்கடி நினைவுக்கு வந்து தொந்தரவு செய்யும் என்பதையும் புரிந்தே வைத்திருக்கிறேன். ஜூலை 2011-ல் நான் எந்த அளவு கல்வி அறிவோடு இந்த கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேனோ அதே அளவோ அல்லது அதை விட கொஞ்சமே அதிகமான அறிவோடே இந்த ஏப்ரல் 2015-ல் எனது படிப்பை முடித்துக்கொண்டு செல்லவிருக்கிறேன் என்பது கிரகிக்கக் கடினமாகவும் அடிக்கடி நினைவிற்கு வந்து உறுத்தவும் செய்கிறது. மனப்பாடம் செய்து தேர்வுக்குப் படித்ததெல்லாம் தேர்வு முடிந்த உடனே நினைவிலிருந்து அழிந்துவிடுகின்றது. முந்தைய செமஸ்டர்களின் எந்த ஒரு பாடத்தேர்வையுமே இப்போது என்னால் எழுத முடியாதென்பதை உறுதியாகவே கூற முடியும்.

 வகுப்புகளுக்கு போகாமலும், போனாலும் 80% வருகைப்பதிவிற்காக மட்டுமே போன என்னால் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? பேராசிரியர் 80% வருகைப்பதிவை கட்டாயப்படுத்துவார் என்பதற்காக, காலை 8:30 வகுப்பிற்கு, 8:20 மணிக்கு எழுந்து அடித்துப்பிடித்து, 8:45-க்கு சென்றடைவதே இந்த ஏழு செமஸ்டர்களாக என் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. அதிலேயும் நிறைய வகுப்புகள், குளிரூட்டப்பட்ட அறையில், பேராசிரியர் பாடம் நடத்துவது தாலாட்டுவதைப் போலிருந்ததால் தூக்கத்திலேயே கழிந்துவிட்டன. மேலும் அங்கே இருந்த இருக்கைகள் தூங்குவதற்கு ஏதுவானவைகளாக இருக்கவில்லை என்பதையும் மறக்காமல் இங்கே கூறியாக வேண்டும். செமஸ்டர் இறுதி தேர்வுகளுக்கு கூட முந்தைய இரவு மட்டுமே படித்துவிட்டு தேர்வெழுதினால் விளைவுகள் வேறு விதமாகவா இருக்கும்? அந்தந்தப் பாடத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகங்களைக் கூட படிக்காமல், கடைசி நிமிடங்களில் சில பயிற்சி கணக்குகளையும், பழைய வினாத்தாள்களையும் புரட்டிவிட்டுத் தேர்வெழுதினால் எப்படி என்னால் ஒரு தேர்ந்த பொறியாளன் என்று கூறிக்கொள்ள இயலும்?

 இந்த அனுபவம் என்பது எனக்கு மட்டுமேயானதா அல்லது பெரும்பாலான மாணவர்களின் அனுபவமும் இதுவேதானா என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியாது. மேலும் இது எனது பிரச்சனையா அல்லது இந்த கல்விமுறையின் பிரச்சனையா என்றும் என்னால் தீர்ப்பெழுத இயலாது. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் அறுதியிட்டுக் கூற முடியும் – என்னைப்போல் பல மாணவர்கள் இருக்கிறார்களென்பதையும் அவர்கள் எல்லாரையும் இந்த கல்விமுறை முற்றாக கைவிட்டுவிட்டதென்பதையும். நம் மனப்போக்கும் இந்த பிரச்சனைக்கு ஒரு காரணியென்பது மறுக்கமுடியாதென்றாலும், முறையான பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு விவாதங்களின் மூலமாக  ஒரு முற்போக்கான, உள்ளடக்கிய, நடைமுறை சார்ந்த கல்வியை அளிப்பதாக நம் கல்விமுறையை செப்பனிட முடியும் என்றும் நான் நம்புகிறேன். நம் பேராசிரியர்களின் ஆராய்ச்சி சார்ந்த தரம் கேள்விக்கு அப்பாற்பட்டதென ஒப்புக்கொண்டாலும், அவர்களின் கற்பிக்கும் தரம் இன்னும் முன்னேற வேண்டும். பம்பாயின் கடும் மழைக்காலத்திலும், ஜனவரி மாத கடும் பனிக்காலத்திலும் கூட என்னை வகுப்பறைக்கு விரைந்தோட வைத்ததே, நாம் எத்தகைய அற்புதமான பேராசிரியர்களைக் கொண்டிருக்கிறோம் என்பதற்குச் சான்று. ஆனால் வருந்தத்தக்கதும் துரதிர்ஷ்டவசமானதும் என்னவென்றால் இப்படிப்பட்டவர்கள் பேராசிரியர் சமூகத்தின் ஒரு சிறு பகுதியென்பதே. பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளிக்கக்கூடியதான ஒன்றாக தற்போதைய கடினமான பாடத்திட்டத்தை மாற்ற மறுஆய்வு செய்வது அவசியம். இந்த எலிப்பந்தயத்தில் ஓடுவதற்கென்றே மாணவர்களை ஊக்குவித்து, பொறியாளர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக இருக்கும் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்காமல் இருப்பதே இந்த கல்விமுறைக் குறைப்பாட்டினை களைய நாம் கொடுக்க வேண்டிய அதிமுக்கிய சிகிச்சையாகும். இதுவே ஒரு நீண்ட காலத் தீர்வாக இருக்கும். இத்தகைய தீர்வு இருந்திருந்தால் மானுடவியல் சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்க சொல்லி பலமுறை மீண்டும் மீண்டும் என் பெற்றோர்கள் வற்புறுத்திய போதிலும் இப்படிப்பைத் தேர்ந்தெடுத்த என்னைப் போன்ற பல மாணவர்கள் இந்த எலிப்பந்தயத்தின் ஒரு பகுதியாக மாறி ஓடிக்கொண்டிருப்பதிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்போம்.

இவையெல்லாமே என்னை இப்போது மேற்கல்வியை நோக்கி உந்தித் தள்ளுகிறது – ஆனால் இம்முறை நான் விரும்பும், ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுமே கற்றுக்கொள்ளாதவனாக மாற்றாத, ஒரு துறையை தேர்ந்தெடுக்க சொல்லி. எனக்கு விருப்பம் உள்ள ஒரு பாடத்திலேனும் கல்விப்புலமை மிகுந்தவனாக இருக்க விரும்புகிறேன். மேலும் அரசியல் அறிவியல் (Political Science), பன்னாட்டு உறவுகள் (International Relations), சமூகவியல் (Sociology) ஆகிய பாடங்கள் என்றுமே என்னை வசீகரித்துள்ளன. இது எனக்கொரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது – யாராவது துப்பாக்கிமுனையில் வற்புறுத்தினாலொழிய இந்த அர்த்தமில்லாத எலிப்பந்தயத்தில் ஓடக்கூடாதென்பதை. இதே காரணத்திற்காகவே நான் இப்பொழுது வளாக வேலைவாய்ப்புத் தேர்வில் பங்கேற்று வேலையில் சேர விரும்பவில்லை. ஏனென்றால் மறுபடியும் அதே தவறை  செய்ய நான் விரும்பவில்லை. சமூக அழுத்தம் மற்றும் கட்டாயத்தின் காரணமாக- அன்றி, என்னுடைய விருப்பம் மற்றும் பேரார்வத்தின் காரணமாக நான் தேர்ந்தெடுக்கும் துறையில் நிபுணத்துவம் பெற முழு உணர்வுடன் முயற்சி செய்வேன்.

மூலம் – http://www.youthkiawaaz.com/2014/11/studying-in-iit/#comments

புகைப்படம் – http://www.iitbombay.org/iitb_dean_acr/april-2012-newsletter/ret-fac-wellness-fund.png

ஆசிரியர் – Rahul Maganti

தமிழில் – வெங்கடசுப்ரமணியம் எழில்மணி