“உலகில் எங்கோ காற்றில் ஒலியைவிட அதிவேகத்தில் பறந்து செல்ல பொறியாளர்கள்  வியர்வை சிந்த உழைக்கிறார்கள்; ஆனால் இந்த பரந்த உலகில் நிலத்தில் உழலும் வாழ்வை சீரமைக்க உதவும் பொறியாளர்கள் எங்கே? “

அர்விந்த் குப்தா – குப்பைகளை அறிவியல் கற்பிக்க உதவும் எளிய சாதனங்களாக உருமாற்றும் வித்தகர், ஒரு கோடை காலையில் ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ள குக்கூ  காட்டுப்பள்ளியின் துவக்க விழாவை சிறப்பிக்க வந்தார். வந்த அடுத்த நொடியே மலையடிவாரத்தில் உள்ள சுனையை பார்க்க விருப்பமென்று தெரிவித்ததால், இளைய பணி ஆர்வலர்களுடன் நடக்கத் துவங்கினார். கோடையின் வெப்பத்தால், சுனையும் வறண்டு நீரோட்டம் இல்லாமல் இருந்தாலும், நீண்ட மூங்கில் மரங்களின் உச்சியில் ஆர்பரித்துக்கொண்டிருந்த குரங்கு கூட்டங்களை ரசித்தார். வறட்சியாக காட்சியளித்தாலும்  வனத்தின் சொல்லவொண்ணா அமைதியின் அழகில் மயங்கிய குப்தா, தான் பிறந்த ஊர் – உத்திரப் பிரதேச கிராமத்தின் சாயலை இங்கு காண்பதாக கூறினார். வானுயர்ந்த நாவற் பழ மரங்களின் காட்சியில் மனதைப் பறிகொடுத்தவராக சில நிமிடங்கள் நின்றார்.

பின்பு  சிறிது நேரம் தன்னார்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் இவர்களுடன் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கிராம அறிவியல் இயக்கம், தற்கால இந்திய கல்விமுறைகள் என பல அம்சங்களும் நிறைந்த உரையாடல்கள் இடம் பெற்றன அவற்றில் சில …

“மக்களிடம் செல், அவர்களுடன் வாழ் , நேசத்தை வளர், அவர்கள் அறிந்திருப்பதில் இருந்து கற்பிக்கத் துவங்கு, அவர்களிடம் இருப்பதைக் கொண்டு புதிய கட்டமைப்பை உருவாக்கு “

அர்விந்த் குப்தா சொல்கிறார் :” 70களின் துவக்க வருடங்களில் கல்லூரி மாணவனாக நான் இருந்த சமயம், அது ஒரு எழுச்சி மிக்க காலமாக திகழ்ந்தது; அரசியல், சமூக தளங்களில் புதிய ஊக்கமும் ஆற்றலும் கிளர்ந்தெழுந்து கொண்டிருந்த வேளை, கிராமப் பள்ளிகளில் அடிப்படை அறிவியல் கல்வியை சீரமைக்கும் அறைகூவல்கள் எழுந்தன.  அவற்றுள் பிரதான ஒன்றாக இருந்தது :   ‘மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், நேசத்தை வளர், அவர்கள் அறிந்திருப்பதில் இருந்து கற்பிக்கத் துவங்கு, அவர்களிடம் இருப்பதைக் கொண்டு புதிய கட்டமைப்பை உருவாக்கு’ இது ஒரு தேசீய இயக்கமாக மாறியது,  இதில் உயர் பதவிகளில் இருப்போரும், கை நிறைய ஊதியம் பெற்றவர்களும்,  அதை விடுத்து இந்த இயக்கத்தில் சேர்ந்தனர்.”

வாழ்க்கையில் நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைவிட நாம் எதை செய்ய விரும்பவில்லை என்பதை அறிந்துகொள்ளுதல் முக்கியமான  ஒன்றல்லவா ?

” புனே அருகில் உள்ள டெல்கோ நிறுவனத்தில் டிரக்குகளை உருவாக்கும் பொறியாளனாக இரண்டு ஆண்டுகள் பணி செய்தேன். ட்ரக்குகளை உருவாக்குப் பிறந்தவன் நானில்லை என்பதை விரைவிலேயே  உணர்ந்து கொண்டேன். வாழ்க்கையில் நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைவிட நாம் எதை செய்ய விரும்பவில்லை என்பதை அறிந்துகொள்ளுதல் முக்கியமான ஒன்றல்லவா ?  ஒரு வருட விடுப்பில் டெல்கோவை விட்டு வெளியேறி கிராம அறிவியல் இயக்கத்தில் சேர்ந்தது என் வாழ்வில் ஒரு பெரிய திருப்பு முனை. “

அறிவியல் ஆர்வமும், புதிய நுட்பங்களை அறிந்துகொள்ளும் அவாவும் ஆங்கிலக் கல்வி பெற்றவர்களுக்கும், மேட்டுக்குடி மக்களுக்கும் மட்டுமே விதிக்கப்பட்டதல்ல என்று குப்தா திடசிந்தனை கொண்டுள்ளார். இதற்காக அவரது வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கில் அறிவியற் புத்தகங்களை பதிந்து வைத்துள்ளார்; ஆங்கிலம் அறிந்த குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும் இந்த அறிவியல் நூல்களை பல்வேறு தாய் மொழிக் குழந்தைகளும் கற்றுணர இத்தளம் உதவும். யாராலும் தரவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் அப்புத்தகங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான புத்தகங்களை இந்தி மொழியில் அவரே மொழிபெயர்த்தது. பத்திற்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் இத்தகைய மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இதேபோல் அவரவர் தாய் மொழியில் இந்நூல்களை மொழிபெயர்க்க உறுதுணையாக இருக்கிறார்.

2011 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் – அரசு பள்ளிகள் ஒழுங்காக நடக்கும் என்று தெரிவு செய்த இரு மாநிலங்கள் – தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சல் பிரதேசம்; இவ்விரு மாநில பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களை சர்வதேச தேர்வான ‘பிஸா’ (pisa) வுக்கு அனுப்பியது. 78 நாடுகள் பங்கு கொண்ட அந்த வருடம் இந்தியா 77 வது நாடாக மதிப்பெண் ரேங் பெற்றது. நமக்கும் கீழ் -கசாகிஸ்தான் நாடு வந்தது. இந்த பிஸா தேர்வே தப்பு என்று அரசாங்கம் கருத்து சொல்லிவிட்டு, உருப்போடும் கல்விமுறையை பேணி வருகிறது. இந்த தேர்வில் கடந்த பத்து ஆண்டுகளாக முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நாடு – பின்லாந்து: பள்ளி இறுதி வகுப்பு வரை தேர்வுகளே இல்லாத, ஆசிரியர்களை சமூகத்தின் மிக உயர்வானவர்களாக கொண்டாடும் நாடு. அங்கு  ஒவ்வொரு மாணவனின் கனவும்  – ஆரம்பப் பள்ளி ஆசிரியராக ஆகவேண்டும் என்பது தான்.

“நாளை புதிய அறிவியல் கோட்பாட்டை உருவாக்கும் ஆற்றல் மிக்க குழந்தை ஏதோ ஒரு பெயர் அறியா ஊரிலிருந்தோ, நகராட்சிப் பள்ளியிலிருந்தோ வரக்கூடும்- அதற்கான வழித்தடமாக கீழ்நிலை சமூகம், ஒதுக்கப்பட்ட சமூகம் வரை இந்த அறிவியல் கல்வி பரவ வேண்டும் “

குப்தா கூறுகிறார்: ” இந்தியா முழுதும் பரந்துள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் – கிராமப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மேட்டுக்குடிப் பள்ளிகள் – எல்லாவற்றையும் நேரில் சென்று கற்பித்த பெரும் அனுபவம் எனக்கு வாய்த்தது. அறிவியலை சிறு கருவிகள், பொம்மைகள் மூலம் கற்பிக்க நேருகையில், தங்கள் கைகளினால் இயங்குவதையும், அதனால் அறிந்துகொள்ளும் அறிவியற் உண்மைகளும் அவர்களின் கண்களில் ஒரு புதிய ஒளி தோன்றுவதை நான் உணர்ந்துள்ளேன். ஆசிரியர்கள் செய்வதை குழந்தைகளும் செய்து பார்க்க விழைகின்றனர். செய்யும் பொழுது எளிய அறிவியல் பண்புகளை மிக சுலபமாகக் கற்றுக்கொள்கின்றனர்.

நாளை புதிய அறிவியல் கோட்பாட்டை உருவாக்கும் ஆற்றல் மிக்க குழந்தை ஏதோ ஒரு பெயர் அறியா ஊரிலிருந்தோ, நகராட்சிப் பள்ளியிலிருந்தோ வரக்கூடும் – அதற்கான வழித்தடமாக கீழ்நிலை சமூகம், ஒதுக்கப்பட்ட சமூகம் வரை இந்த அறிவியல் கல்வி பரவ வேண்டும் “.