Arunachalam M_docpage

எந்த சமூக பிரச்சினைக்கான தீர்வையும்  ஆராயும் தன்மை, புதுமைச் சிந்தனை, தீர்க்க வேண்டுமென்கிற ஆர்வமும் இருந்தாலே கண்டடைந்து  விடலாம். இவ்வாறு தனி மனிதர்கள் பலர் அன்றாடப் பிரச்சினைகளை தீர்க்க முயன்று, வெற்றி பெற்று  அதனால் மற்றவர்களின் வாழ்வையும் மேம்படுத்தியுள்ளனர்.

அப்படி ஒரு மனிதரின் பெயர் அருணாச்சலம் முருகானந்தம். அவரின் மனைவி ஒரு மாத வீட்டுச் சாப்பாட்டுக்கான செலவுக்கும், ஒரு மாத நாப்கின்களுக்கான செலவுக்குமிடையில் திண்டாடுவது அவருக்கு சங்கடம் உருவாக்கியது. அதற்குப்பின் சானிட்டரி நாப்கினின் நுட்பங்களை அவர் ஆராயத் தொடங்கினார், தூக்கியெறியப்பட்ட நாப்கின்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. அவரின் இந்த ஈடுபாட்டால், வீட்டார் அவருக்கு பைத்தியம்  பிடித்து விட்டது  என்று நினைத்தனர். ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. குறைந்த விலைக்கு கிராமப்புற பெண்கள் வாங்கும் வகையில் சானிட்டரி நாப்கினை உருவாக்க முடியுமா எனக் கண்டறிய முனைந்தார். அதற்கான அடிப்படைப் பொருளாக அவர் மரத்தின் இழையைப் பயன்படுத்த நினைத்தார். அதைக் கொண்டு, கிராமப் பெண்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய நாப்கின்களை எப்படி உருவாக்குவது என்று யோசித்தார்.

பல பரீட்சார்த்த முயற்சிகளைக் கொண்டு ஒரு முன்மாதிரியை (prototype) உருவாக்கிக்கொண்டார். ஊக்கம் நிறைந்த கண்டுபிடிப்பாளரான அவர்,அதை அவரே பயன்படுத்தி, அதன் தன்மையை உணர்ந்து, மேலும் செழுமையாக்கினார். இதை தான் மனிதத்தை மையப்படுத்திய வடிவமைப்பென  உண்மையில் கூறவேண்டும்.

அதன்பின் அருணாச்சலம் சாதித்தது தனிச்சிறப்பு வாய்ந்தது. நான்கு வருடங்கள் இயந்தரவியல்  நுணுக்கங்களைப் படித்துவிட்டு, ஒரு இயந்திரத்தை வடிவமைத்தார். அந்த இயந்திரம், சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்யும் வழக்கமான இயந்திரங்களைவிடக் குறைந்த செலவு கொண்டது. அதன்பின் அவரது உற்பத்தி ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்கிற பெயரில் முறைப்படுத்தப்பட்டு, அவரது நாப்கின்கள் ஒன்று ஒரு ரூபாய் என்கிற விலையில் இந்தியக் கிராமப்புறங்களில் விற்கப்படுகிறது. அவர் வடிவமைத்த இயந்திரத்திற்கான காப்புரிமையும் பெற்றார். இதுவரை 255 இயந்திரங்களை உருவாக்கி, 14 மாநிலங்களில் நாப்கின்களை கொண்டு சேர்த்திருக்கிறார்.

உண்மையில், ஏறத்தாழ 31 கோடி இந்தியப் பெண்கள் சானிட்டரி நாப்கின்களுக்கு வழியில்லாமல் தான் இருக்கிறார்கள். அதாவது பத்தில் ஒன்பது பெண்கள். அருணாச்சலத்தின் புரிதலும், தன் மனைவிக்கும் மற்ற பெண்களுக்கும் உதவ வேண்டுமென்கிற விருப்பமும் இந்தியா முழுவதுமுள்ள பெண்கள் பலருக்கு பெறும் உதவியாக அமைந்தது. அருணாச்சலத்தின் கதையைப் போலவே, பல தனி நபர்களின் எளியச் சிந்தனைகள் பெரு விளைவுகளை ஏற்படுத்தியக் கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். புதுமைச் சிந்தனையும், சமூகத் தொழில் முனைப்பும் நிரம்பிய நாடு இந்தியா. எனினும், சிக்கல் மிகுந்த பிரச்சினைகள் இருக்கும் தளங்களினல் பரிச்சயமில்லாதவர்களைவிட நேரடி களத்திலிருந்து புது சிந்தனை கொண்டவர்கள் சமூகத் தொழில் முனைவோர்  பட்டியலில் இணைய வேண்டும்.

மூலம்- http://www.youthkiawaaz.com/2014/10/social-entrepreneurship-changing-india/

Photo credit- http://i.huffpost.com/gen/1780750/images/o-MURUGA-facebook.jpg

ஆசிரியர்- Anesa Kratovac

தமிழில்- ராஜசங்கீதன்