depression_docpage

மன அழுத்ததிற்கென பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் 81% மருந்துகள் முறையான அனுமதி பெறாதவை

இந்திய அரசு ஏற்கனவே மருத்துவத்தை சாமானியர்களுக்கு எதிராகவும், கம்பெனிகளுக்கு ஆதரவாகவும் மாற்றிக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்த  கலக்கமான சேதி வந்துள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்ச்சல்  மருந்துகளில் ஆரம்பித்து மன அழுத்தம் போன்ற நோய்கள் வரை முறையான அனுமதியின்றி தயாரிக்கப்பட்டவையே கடந்த பத்து ஆண்டுகளாக சந்தையில் உலவி வருகின்றனவாம். இந்தியாவின் 12 கோடி நோயாளிகளின் ஆரோக்கியம் இதனால் கேள்விக்குறியாகியுள்ளது?

IT மற்றும் bpo நிறுவனங்கள் வந்த பிறகு நம் வாழ்க்கைமுறை முன்போல் கிடையாது. அதிக வேலை செய்தால், இன்னும் அதிக பணம் என ஓடியதன் விளைவு, மன அழுத்தம் வாழ்வின் முக்கியப் பகுதியாக உருவாகியது. உலகளவில், ஆரோக்கியக் குறைபாடுகளின் தலையாயக் காரணமாக மன அழுத்தம் மாறியுள்ளது. ஆனால், இந்த மன அழுத்தத்துக்கான மருத்துவமுறைகள் இந்தியாவில் முறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. 10-ல் 8 மன அழுத்தத்துக்கான மருந்துகளும், 10-ல் 7 மன நோய்களுக்கான மருந்துகளும் முறையான அனுமதி பெறாதவை என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?

நாம் உட்கொள்ளும் மருந்துகளில் பெரும்பானவை Combination Drugs ரகத்தை சேர்ந்தவை. அதாவது, நோய்வாய்ப்படும் போது வேளைக்கு நாம் இரண்டு அல்லது மூன்று மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறோம் அல்லவா, அதுதான் இந்த ‘காம்பினேஷன் ட்ரக்ஸ்’. மலேரியா, டி.பி., எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான மருந்துகள் இந்த வகையைச் சார்ந்துதான் கொடுக்கப்படுகின்றன. 2012-2013ம் ஆண்டில் மட்டும் 1820 கோடி ரூபாய்க்கான 73.2 கோடி யூனிட்கள் ‘காம்பினேஷன் ட்ரக்ஸ்’ இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மை முறையான அனுமதி பெறாதவை.

‘Central Drugs Standard Control Organisation’ மருந்து உரிமம், உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றை முறைப்படுத்துவதற்காக அரசு அமைத்திருக்கும் அமைப்பு இது. நிரந்தரமான மருத்துவ வல்லுனர்களை கொண்டிருக்கவில்லையென 2012ம் ஆண்டில் ராஜ்ய சபாவில் கிழிக்கப்பட்டதும் இந்த பெருமைக்குரிய அமைப்புதான்.

மும்பை மற்றும் லண்டனை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று, அனுமதி பெறாத மருந்துகள் சந்தையில் எவ்வளவு புழங்குகின்றன என்பதை கணக்கெடுத்துள்ளார்கள். CDSCO மற்றும் PharmaTrac-ன் தரவுகள்படி, CDSCOவின் அனுமதி பெறாத, 76 வகையான மருந்து உருவாக்கங்கள் சந்தையில் கிடைக்கின்றனவாம். இவற்றின் மொத்த மதிப்பு 470 கோடி ரூபாய்.

இந்த 76 வகை மருந்துகள் வெவ்வேறு மருந்துகளுடன் கலந்து ‘காம்பினேஷன் ட்ரக்ஸ்’ என்ற வடிவத்தில், 12.93 கோடி அளவுக்கு விற்கப்பட்டுள்ளன. ஸ்டெராய்டு அல்லாத காய்ச்சல் மற்றும் வலிக்கான மருந்துகள் (Non-Steroidal Anti-Inflammatory -NSAID),  மெட்ஃபார்மின் (Metformin), மன அழுத்தத்துக்கான மருந்துகள் மற்றும் மன நோய்க்கான மருந்துகள் என நான்கு ரகங்களாக ‘காம்பினேஷன் ட்ரக்ஸ்’ பிரிக்கப்பட்டுள்ளன.

காச நோய், எய்ட்ஸ், கருத்தடை ஆகியவற்றுக்கு காம்பினேஷன் ட்ரக்ஸ் பயன்படுத்தக்கூடாது என கட்டுப்பாடுகள் இருப்பினும், 73% NSAID-களும் 81% மன அழுத்தத்துக்கான மருந்துகளும் CDSCO-வின் அனுமதி பெறாமலே சந்தையில் கிடைக்கின்றன.

மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் அனுமதியே மக்களிடம் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. இந்நிலையில், அனுமதி பெறாத மருந்துகளைத்தான் நாம் இத்தனை நாட்களும் உட்கொண்டிருக்கிறோம் என்பது கண்டிப்பாக நல்ல சேதி இல்லை. மன அழுத்த நோய் மருந்துகளின் கதையைக் கேட்டாலே மன அழுத்தம் வரும் போல!

மேலும் படிக்க : http://thewire.in/2015/05/17/revealed-most-antidepressant-drug-combos-in-india-are-unapproved/

Picture Credit- http://voices.halabol.com/sites/default/files/imagecache/voice-slideshow/17/junk-food-cause-stress-and-depression.jpg

தமிழில்- ராஜசங்கீதன்