Thimmakka and her 3km stretch of Banyan Trees, Image Source: Srinivasan G
Thimmakka and her 3km stretch of Banyan Trees, Image Source: Srinivasan G

 

நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதுவரை ஒரு மரமாவது நட்டது உண்டா? அல்லது ஏதேனும் மரத்திற்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்தது உண்டா? இல்லை எனில், கர்நாடகத்தின் மாகுடி தாலுகாவை சேர்ந்த 103 வயதான மூதாட்டி ஸாலுமரதா திம்மக்காவின் கதை உங்களை மரம் நட தூண்டும்.

ஹுலிகல் கிரமத்தில் பிறந்த திம்மக்கா தன் சிறு வயதில் கல்வி கற்ற வாய்ப்பில்லாமல் போனதும் கல் குவாரியில் வேலைக்கு சேர்ந்தார். தன் இளம் வயதிலேயே ஆடு மேய்ப்பாளரான சிக்கையாவை திருமணம் புரிந்தார். குழந்தை பாக்கியம் இல்லாத இந்த தம்பதி சுற்றுசூழலில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னரே எண்ணி உள்ளனர்.  

இயல்பாகவே ஹுலிகலில் ஆலமரங்களை அதிகமாக காணலாம். இதை கருத்தில் கொண்டு இந்த தம்பதி ஆலமரக்கன்றுகளை சாலையோரங்களில் நட்டுள்ளனர். கன்றுகளை நட்டதோடு மட்டும் இல்லாமல், அதற்கு அருகில் உள்ள குளம் குட்டைகளில் இருந்து தண்ணீரும் தொடர்ந்து ஊற்றியுள்ளனர். அவர்களின் இந்த தொடர் முயற்சியால் இன்று குடூரில் இருந்து ஹுலிகல் செல்லும் 3 கி.மீ தொலைவிலான சாலை மிகவும் பசுமையாகவும் நிழலோடும் காணப்படுகின்றது. இச்சேவையை 1991ஆம் ஆண்டு சிக்கையா இறந்த பின்பும் திம்மக்கா தொடர்ந்து வந்திருக்கின்றார் என்பது பாராட்டிற்கு உரியது. இன்று 400க்கும் மேற்ப்பட்ட ஆலமரங்களுக்கு உயிர் கொடுத்த பெருமை திம்மாகாவை சேரும்.  

முதலில் சுற்று சூழலுக்காக பாடுபட்டாலும் காலப்போக்கில் அவரது கொள்கை இன்னும் பரந்து விரியத் துவங்கியது. கடந்த ஐந்து வருடமாக தன் கிரமத்தில் பிரசவம் பார்க்கும் வசதியுள்ள மருத்துவமனை கொண்டு வருவதற்காக மிகவும் பாடுபட்டு வருகிறார். ஆனால், அவரது முயற்சிகள் அதிகாரவர்கம், கட்டிட வசதியின்மை, அரசு அளிக்கும் குறுகிய உதவி இவை அனைத்தாலும் அர்த்தம் இல்லாமல் போகிறது. இதை எதுவுமே திம்மக்காவின் திடமான மன உறுதியை அசைக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்! அதற்கு பதிலாக அவையாவும் சமூகத்திற்கான அவரது தொடர் போராட்டத்தை மேலும் அதிகரிக்கவே செய்துள்ளது. சமூகத்திற்காகவே தன் வாழ்வை அற்பணித்து,

இதுவரை பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர் இன்னும் வாடகை வீட்டில் தான் குடிகொண்டுள்ளார். அதற்கு காரணம் அரசு வழங்கிய வீட்டின் நிலை!

அவரின் வளர்ப்பு மகன் உமேஷ், “இதுவரை அரசு முதியோர் ஓய்வூதியம் 500 ரூபாயும், குடியிருக்க தகுதியில்லாத வீட்டையும் மட்டுமே தன் தாயின் முயற்சிக்கு பரிசாக அளித்துள்ளது” என்கின்றார்.

இவருக்கு “ஸாலுமரதா” என பொருத்தமாக வழங்கப்பட்டுள்ள பட்டத்திற்கு கன்னடத்தில், “மரங்கள் நிறைந்த இடம்” என பொருள். என்னதான் பல விருதுகளும், பட்டங்களும் அளித்து கவுரவம் செய்தாலும், அவையாவும் ஒரு போதும் இவருக்கு பயனாக இருந்ததில்லை. 2013 ஆம் ஆண்டு அல் ஜசீரா (al jazeera) என்னும் ஒலிபரப்பு நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில், “எனக்கு யார் விருதுகள் வழங்குகிறார்கள் என்பதே தெரியாது. திடீரென யாராவது வருவர். என்னை தயாராக இருக்க சொல்வர். பின்னர் என்னை காரில் அழைத்து செல்வர். ஏதேனும் விருதினை வழங்கி மறுபடியும் வீட்டில் விட்டு செல்வர்” என்றார். தன்னை பயன்படுத்தி பிறர் பெறும் நிதியை தான் ஒரு போதும் பார்த்ததில்லை எனவும் கூறுகிறார். 

பூமிக்கு கிடைத்த வரமாக இருக்கும் திம்மக்காவின் வாழ்வு பலரை ஊக்கப்படுத்தினாலும், அவரது முயற்சிக்கு தகுந்த பலன் இனியாவது  கிடைக்கட்டும் என வேண்டுவோம். வேண்டுவதோடு நில்லாமல், சுற்றுசூழலை பாதுகாக்க நாமும் நம் பங்கினை செய்வோம்.    

மூலம்- http://homegrown.co.in/the-inspiring-story-of-a-103-year-old-woman-in-karnataka-and-her-400-trees/

தமிழில்- ஜெயஸ்ரீ ரமேஷ்